சேலத்திலும் ஐ.பி.எல். போட்டி: மைதான திறப்பு விழாவில் இபிஎஸ், டிராவிட்

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே சர்வதேச தரத்திலான பிரம்மாண்ட கிரிக்கெட் மைதானத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார். நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் பழனிசாமி, “தமிழக இளைஞர்கள்...

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே சர்வதேச தரத்திலான பிரம்மாண்ட கிரிக்கெட் மைதானத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார். நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் பழனிசாமி, “தமிழக இளைஞர்கள் மிகுந்த திறமை மிக்கவர்களாக இருக்கிறார்கள். இனிவரும் காலங்களில் தமிழக அணி மட்டுமல்லாது இந்திய அணியிலும் இடம் பெறும் வகையில் பயிற்சி பெறுவதற்கு இந்த மையம் ஏதுவாக அமையும்” என்று கூறினார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தமிழகத்தில் கிரிக்கெட் விளையாட்டுக்கு எப்போதுமே ஒரு பெரிய வரவேற்பு உள்ளது. ஒவ்வொரு தெருவிலும் தெரு விளையாட்டு போல சிறுவர்களாலும் இளைஞரகளாலும் விளையாடப்படும் விளையாட்டு என்றால் அது கிரிக்கெட்தான். சென்னையில் உள்ள சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இந்திய அணி விளையாடும் கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது என்றால் டிக்கெட் வாங்குவதற்கு ரசிகர்கள் கூடும் கூட்டமே தமிழக கிரிக்கெட் ரசிகர்களின் மோகத்துக்கு சாட்சியாக இருக்கும்.

தமிழகத்தில் சென்னையில் மட்டுமல்லாமல் வேறொரு நகரத்திலும் கிரிக்கெட் ஸ்டேடியம் அமைந்தால் நன்றாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

இந்த நிலையில், சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் விளையாட்டு மைதானத்துக்கு பிறகு, சேலம் மாவட்டத்தில் பிரம்மாண்ட கிரிக்கெட் மைதானம் உருவாகியுள்ளது.

இதனை சேலம் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் வழிக்காட்டுதலின் பேரில், சேலம் கிரிக்கெட் ஃபவுண்டேஷன் சார்பில் இந்த விளையாட்டு மைதான அமைக்கப்பட்டுள்ளது. இது சேலம் மற்றும் அண்டை மாவட்ட கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு பெரிய வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே காட்டுவேப்பிலைப்பட்டியில், சென்னை – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 500 மிட்டர் தூரத்தில் மலையடிவாரத்தில் கட்டப்பட்டுள்ளது. 16 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த மைதானத்தில் 5 பிட்ச்கள் உள்ளது. இந்த பிரம்மாண்ட கிரிக்கெட் மைதானத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார். இந்த விழாவில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட், முன்னாள் பிசிசிஐ தலைவர் என்.ஸ்ரீனிவாசன், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவர் ரூபா குருநாத், அமைச்சர்கள் செங்கோட்டையன், ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கிரிக்கெட் மைதானத்தை திறந்துவைத்துப் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “தமிழக இளைஞர்கள் மிகுந்த திறமை மிக்கவர்களாக இருக்கிறார்கள். இனிவரும் காலங்களில் தமிழக அணி மட்டுமல்லாது இந்திய அணியிலும் இடம் பெறும் வகையில் பயிற்சி பெறுவதற்கு இந்த மையம் ஏதுவாக அமையும். இதற்கான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்யும் என தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட், “இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதில் பெருமை கொள்கிறேன். சேலம், கோவை, திருநெல்வேலி மற்றும் திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் கிரிக்கெட் கட்டமைப்பை ஏற்படுத்தி வரும் தமிழக அரசுக்கும், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்கும், மைதானத்தை கட்டமைக்க உழைத்தவர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

ஏனென்றால், இனி வரும் காலங்களில் இதுபோன்று புறநகர்ப் பகுதிகளில் இருந்து தான் அதிகளவிலான திறமையான கிரிக்கெட் ஹீரோக்கள் உருவாக உள்ளனர். இதுபோன்று மைதானங்கள் உருவாவதால், அதிக அளவிலான இளைஞர்களுக்கு விளையாட வாய்ப்பு ஏற்படுகிறது. இதனால், அவர்களுடைய ஆரோக்கியம் வலுப்பெறும். விளையாட்டின் மூலம் தங்களின் வாழ்க்கையை வடிவமைத்துக்கொள்ளும் வாய்ப்பும் கிடைக்கிறது.

ஒருநாள் நானும் இங்கு கிரிக்கெட் விளையாடலாம், அதில் எனக்கும் ஆசைதான். ஆனால், எனக்கு வயதாகிவிட்டதால் அதற்கு சாத்தியமில்லை. எனவே, இளம் அணிக்கு பயிற்சியளித்து அவர்களை இங்கு நிச்சயம் விளையாட வைப்பேன்” என்று தெரிவித்தார்.

பிசிசிஐ-யின் முன்னாள் தலைவரும் பிரபல தொழிலதிபருமான என்.ஸ்ரீனிவாசன் பேசுகையில், “இந்த கிரிக்கெட் மைதானத்தில் எதிர்வரும் ஆண்டுகளிலிருந்து ஜி.எஸ்.கே மற்றும் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும்” என உறுதியளித்தார்

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close