சேலம் மாணவிக்கு இரண்டு ஹால் டிக்கெட்: தேர்வெழுத அனுமதி மறுப்பு! பெற்றோர் சாலை மறியல்!

மாணவி ஜீவிதாவுக்கு இரு ஹால்டிக்கெட்டுகள் வந்துள்ளதால் தேர்வு எழுத அனுமதி மறுப்பு

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஜீவிதாவுக்கு இரு ஹால்டிக்கெட்டுகள் வந்துள்ளதால் கொண்டலாம்பட்டி கல்லூரியில் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இன்று காலை 10 மணிக்கு நீட் தேர்வு தொடங்கியது. இந்த தேர்வை 13 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். பல்வேறு கெடுபிடிகளுக்கு மத்தியில் மாணவர்கள் தேர்வு எழுத தொடங்கியுள்ளனர். இந்நிலையில், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஜீவிதாவுக்கு சேலத்தில் கொண்டலாம்பட்டி சவுடேஸ்வரி தனியார் கல்லூரி மற்றும் சேலம் கோட்டை பள்ளி ஆகிய இரு இடங்களில் தேர்வு எழுத நுழைவுச் சீட்டு வந்துள்ளது.

தொழில்நுட்ப கோளாறாக இருக்கலாம் என்பதால் அவர்கள் கொண்டலாம்பட்டி கல்லூரிக்கு 8 மணிக்கு வந்துள்ளனர். அவரது ஹால்டிக்கெட்டை அதிகாரிகள் சோதனையிட்டபோது அவரது பெயர் அந்த மையத்தில் இல்லை என கூறி அவர் தேர்வெழுத அனுமதி மறுத்துவிட்டனர்.

9.30 மணியுடன் நீட் தேர்வு மையங்களின் கதவுகள் பூட்டப்பட்டு அனுமதிக்கப்படாது என்பதால் அவரால் இன்னொரு மையத்துக்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மற்ற மாணவ, மாணவிகள் தேர்வு எழுத ஆரம்பித்து இருக்கும் நிலையில், ஜீவிதா பெற்றோருடன் வெளியே காத்திருந்தார். ஆனால், அதற்கு பிறகும், அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து, ஜீவிதாவின் பெற்றோர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

×Close
×Close