சேலம் மாநகர ஆயுதப்படையில் போலீஸ் வாகனங்களுக்கு டீசல் நிரப்பியதில் ரூ.2 கோடி மோசடி நடந்துள்ளதா? என உயர் அதிகாரிகள் விசாரனை
சேலம் மாநகர ஆயுதப்படையில் மோட்டார் வாகன பிரிவு செயல்பட்டு வருகிறது.
இங்கு பணியாற்றிய எழுத்தர் உள்பட 4 பேர் போலீஸ் வாகனங்களுக்கு நிரப்பக்கூடிய டீசலை மோசடி செய்து ரூ.2 கோடிக்கு மேல் கையாடல் செய்ததாக புகார் எழுந்துள்ளது. அதாவது கடந்த 7 ஆண்டுகளாக ஓடாத வாகனங்களை இயக்கியதாகவும், பழுதான வாகனங்களுக்கு டீசல் நிரப்பியதாகவும் போலி கணக்கு காட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுதவிர, ஆண்கள் மற்றும் பெண்கள் கழிப்பறை வாகனங்கள், ஆம்புலன்சுகளுக்கு 1,460 லிட்டர் டீசல் நிரப்பியதாக மோசடி செய்திருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. இந்த மோசடி குறித்து விசாரணை நடத்த போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார். அதன்படி உயர் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க, மோட்டார் வாகன பிரிவில் பணியாற்றி வந்த சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் ஊர்காவல் படைக்கும், 2 ஏட்டுக்களில் ஒருவர் டவுன் குற்றப்பிரிவுக்கும், மற்றொரு ஏட்டு மத்திய குற்றப்பிரிவுக்கும் இடமாற்றப்பட்டு உள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், மோட்டார் வாகன பிரிவில் வாகனங்களுக்கு டீசல் நிரப்பியதில் மோசடி நடந்தது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. புகாரில் சிக்கியதால் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 2 ஏட்டுகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. அவர்கள் ஏற்கனவே 3 மாதங்களுக்கு முன்பே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர், என்றார்.
செய்தி: க. சண்முகவடிவேல்