அரசின் நலத்திட்டங்களை விமர்சித்த இயக்குநர் முருகதாஸ் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு இனி அரசை விமர்சிக்க மாட்டேன் என பிரமாணபத்திரம் எழுதித்தர வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் வலியுறுத்தபட்டதற்கு மன்னிப்பும் கோர முடியாது, எழுதித்தரவும் முடியாது என ஏ.ஆர்.முருகதாஸ் மறுத்துள்ளார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த தீபாவளிக்கு வெளியான படம் சர்கார். படம் ரிலீஸாவதற்கு முன்பு, கதை சர்ச்சையில் சிக்கிய சர்கார், ரிலீசான பின்னர் அரசின் நலத்திட்டங்களை விமர்சனம் செய்ததாக ஆளுங்கட்சி தரப்பில் குற்றம் சாட்டப்பட்டு, தியேட்டர்கள் சூறையாடப்பட்டது.
தமிழக அரசையும், பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள இலவச திட்டங்களையும் கடுமையாக விமர்சிக்கும் காட்சிகள் இருப்பதாகவும், அதை நீக்கும் வரை படத்தை திரையிடக்கூடாது என தமிழகம் முழுவதும் திரையரங்குகள் முழுவதும் அதிமுகவினர் போராட்டம் நடத்தினர்.
பல தியேட்டர்களின் விஜய்யின் பேனர்கள், கட் அவுட்கள் உடைக்கப்பட்டன. தியேட்டர்களில் படம் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள், வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். இதனால், தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் படத்தின் சில காட்சிகளை நீக்கி ரிலீஸ் செய்தது.
இந்த கலவரத்தால், தான் எந்நேரமும் கைது செய்யலாம் என்பதால் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் முன் ஜாமீன் கோரி நவம்பர் 9ம் தேதி சென்னை ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், நவம்பர் 27-ம் தேதி வரை ஏ.ஆர்.முருகாதாஸை கைது செய்யக் கூடாது என இடைக்கால உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது, அப்போது முருகதாஸ் தரப்பில், ஆட்சேபம் தெரிவிக்கப்பட்ட காட்சிகள் நீக்கப்பட்டும், சில வசனங்கள் மியூட் செய்யப்பட்டும் புதிய தணிக்கை சான்றிதழ் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
வழக்கில் தனது வாதத்தை வைத்த அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன், “சர்கார் படத்தில் அரசு திட்டங்களை விமர்சித்ததற்காக முருகதாஸ் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், எதிர்காலத்தில் அவர் எடுக்கும் படங்களில் அரசின் திட்டங்களையும், அரசையும் விமர்சிக்கும் வகையில் காட்சிகள் அமைக்க மாட்டேன் என்று உத்தரவாத பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்” என அரசு தரப்பில் கோரிக்கை வைத்தார்.
இதுதொடர்பாக, முருகாதாஸிடம் விளக்கம் பெற்று பதில் அளிக்கிறோம் என அவரது வழக்கறிஞர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இந்த வழக்கு இன்று நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஏ.ஆர்.முருகதாஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சர்கார் படத்தில் அரசு திட்டங்களை விமர்சித்தது, இலவச பொருட்களை எரித்தது போன்ற காட்சிகளை அமைத்தது தன் கருத்து சுதந்திரம் என்றும், அரசு கோருவது போல் மன்னிப்பு கோர முடியாது என்றும் தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி, இனிவரும் படங்களில் இதுபோன்ற காட்சிகளை அமைக்கப் போவதில்லை என்ற உத்தரவாதமும் அளிக்க முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார்.
அதனை பதிவு செய்த நீதிபதி, காவல்துறையில் அளித்த புகாரை சட்டத்திற்குட்பட்டு 2 வாரங்களில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 13ம் தேதி ஒத்திவைத்தார்.
மேலும் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்யக்கூடாது என்ற நவம்பர் 9-ம் தேதி பிறப்பித்த உத்தரவை டிசம்பர் 13-ம் தேதி வரை நீட்டித்தும் உத்தரவிட்ட நீதிபதி, ஏ.ஆர்.முருகதாஸ் முன் ஜாமீன் மனு மீதான விசாரணை டிசம்பர் 13-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.