தனது கணவர் நடராஜனின் உடல் நிலையைக் காரணம் காட்டி, 15 நாட்கள் பரோல் கேட்டு விண்ணப்பித்த சசிகலாவிற்கு 5 நாட்கள் மட்டும் பரோல் கொடுத்து, கர்நாடக சிறைத்துறை நிர்வாகம் இன்று அனுமதியளித்தது. அதைத் தொடர்ந்து, அவரை காரின் மூலம் டிடிவி தினகரன் சென்னைக்கு அழைத்து வந்து கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், சென்னையில் அவர் எங்கு தங்கப் போகிறார் என்கிற சந்தேகம் பலருக்கும் எழுந்தது. அதில், சிறுதாவூர் பங்களா, போயஸ் கார்டன் வீடு மற்றும் தி.நகரில் உள்ள அவரின் வீடு என மூன்று இடங்கள் அடிபட்டன.
ஆனால், சசிகலாவின் உறவினரான இளவரசியின் மூத்த மகள் கிருஷ்ணப்பிரியாவின் வீட்டில் தங்குவது என முடிவு செய்யப்பட்டது. இந்த தகவலை, சசிகலா முறைப்படி சிறைத்துறை நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார். அதற்கு, சிறைத்துறை நிர்வாகமும் அனுமதி அளித்துள்ளது. அந்த விட்டிலேயே சசிகலா வருகிற 11-ஆம் தேதி வரை தங்கியிருப்பார் எனத் தெரிகிறது.
/tamil-ie/media/media_files/uploads/2017/10/z480-300x217.jpg)
தி.நகர், ஹபிபுல்லா சாலையில் உள்ள 181 என்ற எண் கொண்ட அந்த வீட்டில் தான் சசிகலா தங்கப் போகிறார். சசிகலா இங்கு தான் தங்க வேண்டும் என்பது குறித்து முடிவு செய்தபின், கிருஷ்ணப்பிரியாவுக்கு தமிழக காவல்துறை அதிகாரி ஒருவர் தொடர்பு கொண்டு, 'இந்த வீட்டில் சசிகலா தங்கவிருப்பதால், பாதுகாப்பு ஏற்பாடுகள்குறித்து ஆய்வுசெய்ய வேண்டியுள்ளது. இது வழக்கமான நடைமுறைதான். பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்' எனக் கூறியிருக்கிறார். இதன்பிறகு தி.நகர் வீட்டுக்கு வந்த காவல்துறை அதிகாரிகள், ' எத்தனை ஆண்டுகளாக இந்த வீட்டில் குடியிருக்கிறீர்கள்? வீட்டின் பேரில் எதாவது வில்லங்கம் இருக்கிறதா?' என்றெல்லாம் கேள்வி கேட்டு ஆய்வு நடத்தியுள்ளனர்.
/tamil-ie/media/media_files/uploads/2017/10/z484-300x217.jpg)
சசிகலா அந்த வீட்டில் தங்கப்போவது தெரிந்ததும், அந்த வீட்டின் முன்பு சசிகலாவின் ஆதரவாளர்கள் குவிந்து வருகின்றனர். அங்கு பேனர்களும் வைத்துள்ளனர். எனவே, உயர் போலீஸ் அதிகாரிகளின் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2017/10/z478-300x217.jpg)
என்னதான் கணவரின் உடல்நிலையைக் காட்டி சசிகலா வெளியே வந்தாலும், கட்சி மற்றும் கட்சி சார்ந்த விஷயங்களை ஆய்வு செய்யவே அவர் வெளியே வந்திருப்பதாக கூறப்படுகிறது. அமைச்சர்கள் மற்றும் கட்சியின் முக்கிய 'தலைகள்' பல தன்னை சந்திக்க நேரிடும் என சசிகலா நம்புகிறாராம். இவ்வளவு நாள் மெல்லவும் முடியாமல், முழுங்கவும் முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் பல விசுவாச ரத்தத்தின் ரத்தங்களும் தன்னை வந்து சந்திப்பார்கள் என எதிர்பார்த்து உள்ளாராம் சசிகலா.