சசிகலா சீராய்வு மனு தள்ளுபடி : டிடிவி.தினகரன் அணிக்கு சறுக்கல்

சசிகலா சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டிருப்பது, டிடிவி.தினகரன் அணிக்கு சறுக்கலாக பார்க்கப்படுகிறது. அவரது அணிக்கு கலக்கம் அதிகரித்திருக்கிறது.

சசிகலா சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டிருப்பது, டிடிவி.தினகரன் அணிக்கு சறுக்கலாக பார்க்கப்படுகிறது. அவரது அணி எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் கலக்கம் அதிகரித்திருக்கிறது.

சசிகலா சீராய்வு மனு, உச்சநீதிமன்றத்தில் ஆகஸ்ட் 23-ம் தேதி (இன்று) தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. இதனால் முழுமையாக 4 ஆண்டுகள் சசிகலா சிறையில் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. இன்று வரை அதிமுக அம்மா அணியின் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருப்பவர் சசிகலாதான்.

அவரை கட்சியை விட்டு நீக்குவதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி – துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இணைந்த அணி ஜரூராக களம் இறங்கியிருக்கிறது. இதனாலேயே அம்மா அணியின் துணைப் பொதுச்செயலாளரான டிடிவொ.தினகரன் 19 எம்.எல்.ஏ.க்களை திரட்டிக்கொண்டு இறுதி யுத்தம் ஆரம்பித்திருக்கிறார்.

சசிகலாவை கட்சியை விட்டு நீக்குவதற்குள், எடப்பாடி அரசை கலைக்கச் செய்யவேண்டும் என்பதுதான் டிடிவி தரப்பின் டார்கெட் என்கிறார்கள். டிடிவி அணி எம்.எல்.ஏ.க்கள் அனைவருமே சசிகலாவை பிரதானப்படுத்தியும், அவருக்கு எடப்பாடி துரோகம் செய்துவிட்டதாகவுமே பேட்டி கொடுத்து வருகிறார்கள். எனவே சீராய்வு மனுவில் சசிகலாவுக்கு ஆதரவான முடிவு கிடைத்தால், அது தங்களின் முயற்சிக்கு ஆறுதலாக இருக்கும் என எதிர்பார்த்தனர்.

ஆனால் சசிகலாவின் சீராய்வு மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி ஆனதும், மன்னார்குடி சொந்தங்கள் மத்தியில் அதிர்ச்சி அலைகள் கரைபுரண்டன. அதைவிட, பாண்டிச்சேரியில் முகாமிட்டிருக்கும் டிடிவி.தினகரன் அணி எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் கலக்கம் அதிகரித்திருக்கிறது. சசிகலாவை முன்னிறுத்தி இன்னும் அரசியல் செய்ய முடியுமா? என்கிற கேள்வி அவர்களிடம் சுழல்கிறது.

‘இந்த உத்தரவு இப்போது வராமல் இருந்திருந்தால், இன்னும் சில எம்.எல்.ஏ.க்கள் ஓரிரு நாட்களில் டிடிவி.தினகரன் அணிக்கு வரும் வாய்ப்பு இருந்தது. அவர்கள் இப்போது ரொம்பவே தயங்கும் சூழல் உருவாகிவிட்டது. தவிர, இபிஎஸ், ஓபிஎஸ் அணியினரும் படு உற்சாகமாக சசிகலாவை நீக்கி நடவடிக்கை எடுக்க, இந்த உத்தரவு வழி உருவாக்கிவிட்டது. எப்படி இருந்தாலும் டிடிவி அணிக்கு இது சறுக்கல்தான்!’ என்கிறார், டிடிவி ஆதரவு நிர்வாகி ஒருவரே!

பாண்டிச்சேரியில் முகாமிட்டிருக்கும் எம்.எல்.ஏ.க்களில் சிலரே இந்தச் சூழலில் பறந்துவிடும் வாய்ப்பு இருப்பதையும் மறுப்பதற்கில்லை.

×Close
×Close