Advertisment

சாத்தான்குளம் லாக்அப் மரணம்: கனிமொழி டிஜிபியிடம் புகார்; தலைவர்கள் கண்டனம்

சாத்தான்குளம் தந்தை மகன் லாக்அப் மரணம் சம்பவத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். தூத்துக்குடி தொகுதி திமுக எம்.பி கனிமொழி இந்த சம்பவம் தொடர்பாக டிஜிபியிடம் புகார் அளித்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Sathankulam, sathankulam news, sathankulam father son lock up death,

Sathankulam, sathankulam news, sathankulam father son lock up death,

சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை மகன் போலீசார் தாக்கியதில் கோவில்பட்டி சிறையில் மரணமடைந்ததாக கூறி அவர்கள் மரணத்துக்கு நீதி கேட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சாத்தான்குளம் தந்தை மகன் லாக்அப் மரணம் சம்பவத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். தூத்துக்குடி தொகுதி திமுக எம்.பி கனிமொழி இந்த சம்பவம் தொடர்பாக டிஜிபியிடம் புகார் அளித்துள்ளார்.

Advertisment

சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் அவரது மகன் பென்னிக்ஸ் இம்மானுவேல் இருவரும் ஊரடங்கு காலத்தில் கடையடைப்பது தொடர்பாக போலீசாருடன் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக காவல்நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் சென்று போலீசார் தாக்கியதாகவும் பின்னர், அவர்கள் கோவில்பட்டி கிளைச் சிறையில் மர்மமான முறையில் மரணம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. அவர்கள் இருவரையும் போலீசார் அடித்து சித்ரவதை செய்து கொன்றதாகவும் அவர்களின் மரணத்துக்கு நீதி கேட்டு சாத்தான்குளத்தில் பொதுமக்கள் இன்று காலை முதல் தொடர்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சாத்தான்குளத்தில் சிறையில் அடைக்கப்பட்ட தந்தை மகன் இருவரும் மரணம் அடைந்த விவகாரம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவில்பட்டி கிளைச் சிறையில் தந்தையும், மகனும் சந்தேகத்திற்குரிய வகையில் அடுத்தடுத்து இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 'லாக்அப்' மர்ம மரணங்கள், நீதிமன்றக் காவலிலும் நடக்கின்றன எனில், அதற்கு உள்துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர்தான் பதில் சொல்ல வேண்டும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும், நாட்டையே கொரோனா நோய்த் தொற்று பாதித்து பேரழிவை உருவாக்கி வரும் நெருக்கடி மிகுந்த இக்கால கட்டத்தில், வாய்த்தகராறு காரணமாக, அநியாயமாக இரண்டு உயிர்களைக் கொடூரமாகப் பறிக்கும் அளவுக்கு நடந்து கொண்டது காவல்துறை என்றால், இது தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களாட்சியா? திரைமறைவு போலீஸ் ஆட்சியா? மரணத்துக்குக் காரணமானவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்; பறிக்கப்பட்ட உயிர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும்! எப்போது கிடைக்கும் இந்நிகழ்வுக்குத் தீர்வு?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்நாடு காங்கிரச் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி விடுத்துள்ள கண்டன அறிக்கையில், “எந்த தவறையும் செய்யாத நிரபராதிகள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். ஜெயராஜ், பெனிக்ஸ் இம்மானுவேல் ஆகியோர் காவல்துறையினரால் அடைத்து வைக்கப்பட்டபோது கடுமையான தாக்குதலின் காரணமாக இறந்திருப்பதனால், சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்த வழக்கை மாநில காவல்துறை விசாரித்தால் நிச்சயம் நீதி கிடைக்காது. எனவே காவல்துறையினர் சம்பந்தப்பட்ட இந்த வழக்கை மத்திய புலனாய்வுதுறை விசாரித்து குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்ரு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்”என்று தெரிவித்துள்ளார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “இது முழுக்க முழுக்க சாத்தான்குளம் காவல்நிலைய உதவி ஆய்வாளரும், காவல்துறையினரும் நடத்திய அப்பட்டமான படுகொலை என குற்றம் சாட்டுகிறேன்.

சாத்தான்குளத்தில் கைது செய்யப்பட்டவர்களை ரிமாண்ட் செய்து, தூத்துக்குடி கிளைச் சிறையிலோ அல்லது பாளையங்கோட்டை மத்திய சிறையிலோ அடைக்காமல், வெகு தூரத்தில் உள்ள கோவில்பட்டி கிளைச் சிறைக்குக் கொண்டு சென்றதிலிருந்தே காவல்துறையினரின் குற்றச் செயல் உறுதி ஆகிறது.

காவல்துறையினரின் இந்த அப்பட்டமான படுகொலைக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இதில் சம்பந்தப்பட்ட காவல்துறை உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்ளிட்டோரை பணி நீக்கம் செய்வதோடு, கொலை வழக்குப் பதிவு செய்து, கைது செய்ய வேண்டும்.

காவல்துறையினரின் இதுபோன்ற கொடிய தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.

இருவரது உடல்களையும் வெவ்வேறு மருத்துவமனைகளில் நிபுணத்துவம் பெற்ற மூன்று மருத்துவர்கள் முன்னிலையில் உடற்கூறு ஆய்வு செய்திட வேண்டும்.

இச்சம்பவம் குறித்து உண்மை நிலையை வெளிக்கொணர, பணியில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக்குழு அமைத்திட தமிழக அரசு முன்வர வேண்டும் என மறுமலர்ச்சி திமுக சார்பில் வலியுறுத்துகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விடுத்துள்ள கண்டன அறிக்கையில், “சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த தந்தையும் மகனுமனா ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் காவல்துறையினரால் விசாரணக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது மர்மமான முறையில் உயிரிழந்த நிகழ்வு கடும் கண்டனத்துக்குரியது.

காவல்துறையினர் தாக்கியதால் இருவரும் பலியாகி இருப்பதாக வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ள நிலையில், இது குறித்து தமிழக அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.

வணிகர்களின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதுடன் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், “சாத்தான்குளம் அரசரடியைச் சேர்ந்த தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் போலீஸ் காவலில் உயிரிழந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்களை போலீசார் அடித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மருத்துவமனையில் திடீரென உயிரிழந்த மகன் மற்றும் தந்தையின் மரணத்தைக் குறித்து குடும்பத்தினருக்கும் பொதுமக்களுக்கும் எழுந்துள்ள சந்தேகங்களை போக்குவதுடன் உரிய நீதி வழங்க வேண்டும்” என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்தியுள்ளார்.

இதனிடையே, தூத்துக்குடி தொகுதி திமுக எம்.பி கனிமொழி சாத்தான்குளம் தந்தை மகன் லாக்அப் மரணம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஜிபியிடம் புகார் அளித்துள்ளார்.

சாத்தான்குளம் லாக்அப் மரணம் தொடர்பாக 4 வாரத்துக்குள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று மாநில சிறைத்துறை ஏடிஜிபிக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, லாக்அப் மரணம் அடைந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் இம்மானுவேல் உடலை 3 மருத்துவர்கள் கொண்ட குழு உடற்கூராய்வு செய்ய உத்தரவிட்டுள்ளது. மேலும், ஊடற்கூராய்வின்போது வீடியோ பதிவு செய்யவும் உத்தரவிட்டுள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment