தீபாவளி நெருங்கி வரும் நிலையில் சிவகாசியில் இருந்து வெளி மாநில, மாவட்டங்களுக்கு பட்டாசுகளை பார்சல் செய்து அனுப்பும் சமயத்தில் தற்போது திடீரென உராய்வின் காரணமாக ஆங்காங்கே பட்டாசு ஆலைகளில் பட்டாசுகள் வெடித்து சிதறுவதால் ஆலைகள் தரைமட்டமாகி உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன.
அந்த வகையில், இன்று (செப்.28) அதிகாலை விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே முத்தல்நாயக்கன்பட்டியில் சிவகாசியை சேர்ந்த கந்தசாமி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் இன்று காலை எதிர்பாராத விதமாக திடீரென பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.
இந்த வெடி விபத்தால் ஏற்பட்ட அதிர்வு சுற்றுப்புறத்தில் 15 கிலோ மீட்டர் தொலைவு வரை உணரப்பட்டது. வெடி விபத்து குறித்து தகவல் அறிந்து சாத்தூர் மற்றும் சிவகாசி வட்டத்தில் இருந்து தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர்.
பட்டாசு ஆலையில் வட மாநில தொழிலாளர்கள் சிலர் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சம்பவ இடத்திற்கு சாத்தூர் டி.எஸ்.பி. மற்றும் ஏராளமான போலீசார் விரைந்துள்ளனர். மேலும் ஆம்புலன்ஸ் வாகனங்களும் வரவழைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து தீயை அணைக்க போராடி வருகின்றனர்.
பட்டாசுகளை இறக்கி வைக்கும் போது உராய்வு காரணமாக விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. வெடிவிபத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
முன்னதாக, தீயை அணைப்பதற்கு தீயணைப்பு வீரர்கள் பட்டாசு குடோனை நோக்கி சென்றபோது, அருகில் இருந்த கட்டிடங்களும் வெடித்து சிதறியதால் அந்த சம்பவத்திலிருந்து நூலிழையில் 15 தீயணைப்பு வீரர்களும் பத்திரமாக வெளியேறினர். பட்டாசு குடோனில் உள்ள மொத்த பட்டாசுகளும் வெடித்த பிறகு தான் யாரேனும் அங்கே செல்ல முடியும் என்ற நிலை தற்போது உருவாகியுள்ளது என்பது வேதனை அளிக்கிறது.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“