தென்காசி நகராட்சியில் தற்காலிக பணியாளராக பணிபுரிந்து வந்த ராஜேஷ் என்பவரை இருவர் வெட்டி கொலை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை விஸ்வநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ். 24 வயதான இவர், செங்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர் திட்ட மேற்பார்வையாளராக தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று காலை 11 மணியளவில் அலுவலகத்திலிருந்து இரு சக்கர வாகனத்தில் புறப்படத் தயாரான ராஜேஷை, அடையாளம் தெரியாத இரு நபர்கள் அலுவலக வளாகத்தில் வைத்து அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனர். படுகாயமடைந்த ராஜேஷ் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.
இது குறித்து தகவலறிந்து நகராட்சி அலுவலகத்திற்கு வந்த ராஜேஷ் உறவினர்கள் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தப்பின் போராட்டத்தை கைவிட்டனர். அலுவலக வளாகத்தில் இருந்த சி.சி.டி.வி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது இரு இளைஞர்கள் கையில் அரிவாளுடன் இரு சக்கர வாகனத்தில் தப்பிச் சென்றது தெரியவந்தது.
இது குறித்து விசாரணை செய்ததில் திருநெல்வேலியைச் சேர்ந்த மந்திரமூர்த்தி (22), மாரி (19) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் கடந்த சில நாட்களுக்கு முன் ஆற்றில் குளிக்கும் போது ஏற்பட்ட தகராறில் ராஜேஷ் மற்றும் சிலர் இவர்களைத் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மந்திரமூர்த்தி, மாரி இருவரும் சேர்ந்து ராஜேஷை கொலை செய்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“