Advertisment

ஓயாத சர்ச்சையில் பள்ளிக் கல்வித்துறை ஆணையர் பதவி ; உண்மை என்ன?

தமிழக முன்னாள் கல்வித்துறை இயக்குனராக நெ.து.சுந்தரவடிவேலுவை முன்னாள் முதல்வர் காமராஜர் பணியமர்த்தியதற்கு முன்னதாக, அப்பதவி ஐஏஎஸ் அதிகாரிகளுக்கான பணியிடமாகவே இருந்தது.

author-image
Gokulan Krishnamoorthy
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஓயாத சர்ச்சையில் பள்ளிக் கல்வித்துறை ஆணையர் பதவி ; உண்மை என்ன?

தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையின் கீழ், 37,211 அரசு பள்ளிகளும், 12,419 தனியார் பள்ளிகளும், 8,357 அரசு உதவி பெறும் பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. தமிழகத்திலுள்ள பள்ளிகளை ஆய்வு செய்ய, முதன்மைக் கல்வி அதிகாரிகளும், 117 மாவட்டக் கல்வி அதிகாரிகளும், 413 வட்டாரக் கல்வி அதிகாரிகளும் செயல்பட்டு வருகின்றனர். தமிழக பள்ளிக் கல்வித்துறையின் கீழ் தொடக்கக்கல்வி, மெட்ரிக்குலேஷன் பள்ளிகள், அரசு தேர்வுகள் துறை, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், தமிழ்நாடு பாடநூல் கழகம், நூலகத் துறை என 10 இயக்குநரகங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றையெல்லாம் நிர்வகிக்க தலைமை அதிகாரிகளாக ஒவ்வொரு துறைக்கும் தனித்தனி இயக்குநர்கள் பணியாற்றி வருகின்றனர். நிர்வாக ரீதியில் ஒட்டுமொத்த பள்ளிக் கல்வித்துறையின் தலைமை அதிகாரியாக அத்துறையின் முதன்மைச் செயலாளர் பணியாற்றி வருகிறார்.

Advertisment

கடந்த அதிமுக ஆட்சியில் பள்ளிக் கல்வித்துறையின் நிர்வாக காரணங்களுக்காக பள்ளிக் கல்வித்துறை ஆணையர் என்ற பதவி உருவாக்கப்பட்டு, சிஜி தாமஸ் வைத்யன் பொறுப்பேற்றார். அதற்கு பிறகாக,வெங்கடேஷன் என்பவர் அப்பதவியை வகித்து வந்தார். அவரது பதவிக் காலம் முடிய, பள்ளிக் கல்வித்துறை இயக்குனராக பதவியில் இருந்த கண்ணப்பனுக்கு, கூடுதல் பொறுப்பாக பள்ளிக் கல்வித்துறை ஆணையர் பதவி வழங்கப்பட்டது.

இந்த நிலையில், கடந்த 14-ம் தேதி தமிழக அரசு சார்பில் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் தொடர்பாக அதிரடி அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டது. அதில், தமிழ்நாடு பொதுப்பணித் துறையின் செயலாளராக பதவி வகித்த ஐஏஎஸ் அதிகாரி நந்தகுமாரை, தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை ஆணையராக தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. தமிழக அரசின் உத்தரவை தொடர்ந்து, பள்ளிக் கல்வி இயக்குநர் பதவி நீக்கப்பட்டதாகவும், பள்ளிக் கல்வி ஆணையர் பதவியில் ஒரு ஐஏஎஸ் அதிகாரி எப்படி செயல்படுவார் எனவும் கேள்விகளும், கண்டனங்களும் எழுந்த வண்ணம் உள்ளன.

ஐஏஎஸ் அதிகாரி நந்தகுமாரை, பள்ளிக் கல்வித்துறை ஆணையராக தமிழக அரசு அமர்த்தியிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக வின் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில், ‘பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் பதவி ரத்து செய்யப்பட்டிருப்பதும், அந்த பணிக்கான பொறுப்புகளை பள்ளிக் கல்வித்துறை ஆணையரான நந்தகுமாரே வகிப்பார் எனும் தமிழக அரசு அறிவித்துள்ளது. நிர்வாக சீர்திருத்தம் எனும் தமிழக அரசின் முடிவு, நிர்வாக சீர்குலைவையே ஏற்படுத்தும். பள்ளிக் கல்வி இயக்குனர் பதவியில் ஆசிரியர் தான் நியமிக்கப்பட வேண்டும். தமிழக அரசின் இந்த முடிவில் உள்ள சிக்கல்களை உணர்ந்து, பள்ளிக் கல்வி இயக்ககத்தில் இதுவரை இருந்த நடைமுறையே பின்பற்ற வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, பள்ளிக் கல்வித்துறை ஆணையர் பதவியில் ஐஏஎஸ் அதிகாரியை தமிழக அரசு அமர்த்தியுள்ளது மற்றும் பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் பதவியை நீக்கி இருப்பது என நீடிக்கும் குழப்பங்களுக்கு தெளிவு பெறும் வகையில், கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபுவிடம் பேசினோம்.

பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் பதவி நீக்கம், இயக்குனராக மாற்றப்பட்டுள்ளது என ஊடகங்களில் விவாதிப்பதை போல் எதுவும் நடைபெறவில்லை. நந்தகுமார் ஐஏஎஸ் மாவட்ட ஆட்சியராக இருந்த போது, பள்ளிக் கல்வி, அரசு பள்ளி மற்றும் அரசு பள்ளி மாணவர்களை நேசித்தது, அரசுப் பள்ளி மாணவர்களை தொடக்கப்பள்ளியில் இருந்து மேனிலைப் பள்ளி வரைக்கும் அவர்களின் தேவை உணர்ந்து உதவிகளை செய்தது போன்ற காரணங்களால் அவர் மாவட்ட ஆட்சியராக இருந்த மாவட்டத்தில் இருந்து, பலரை மருத்துவக் கல்லூரியில் சேர்ப்பதற்கான தகுதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். இது போன்ற காரணங்களால், தகுதி வாய்ந்த இந்த நபரை, மாநிலம் முழுக்க கல்வித்துறை மேம்பாடு அடைய செய்யும் நோக்கில், ஐஏஎஸ் அதிகாரி நந்தகுமார் பள்ளிக் கல்வி ஆணையராக தற்போதைய அரசால் பணி அமர்த்தப்பட்டுள்ளார். இவர் ஐஏஎஸ் பணியில் இருப்பதால், அந்த பணியிடம் தற்போது ஐஏஎஸ் பணியிடமாகியுள்ளது. இந்த சூழலே தொடர வேண்டும் என்ற அவசியம் கிடையாது.

publive-image

இவருக்கு பின்னால், மீண்டும் அந்த பணியிடம் இயல்புக்கு திரும்பும் சாத்தியக்கூறுகள் உள்ளன. நந்தகுமார் என்ற நல்ல நபர் அரசுக்கு கிடைத்திருக்கிறார். அவரை முழுவதுமாக பயன்படுத்திக் கொள்ள எண்ணி அரசு இத்தகைய முடிவை எடுத்திருக்கிறது. இது போன்ற செயல்களில், குறிபிடத்தக்க சில முன்னுதாரணங்களும் உள்ளது. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக ஐஏஎஸ் அதிகாரி இறையண்பு பதவி வகித்த போது, அன்றைய முதல்வர் கருணாநிதிக் தமிழகத்தில் சமத்துவபுர திட்டத்தை செயல்படுத்த தொடங்கி இருந்தார். பல்வேறு மாவட்டங்களில் சமத்துவபுரங்களை திறந்து வைத்த கருணாநிதி, காஞ்சிபுரத்தில் சமத்துவபுரத்தை கண்டு திகைத்து, எனது திட்டத்தை இவ்வளவு அழகாக செயல்படுத்தி இருக்கிறீர்கள் என்றால், இறையண்புவின் சேவை தமிழகம் முழுவதும் என்பதை உணர்ந்து, மாவட்ட ஆட்சியராக இருந்த அவரை, முதலமைச்சரின் செயலகத்தில் தனிப்பிரிவு இணைச் செயலாளராக பதவி உயர்த்தப்பட்டார்.

தமிழக முன்னாள் கல்வித்துறை இயக்குனராக நெ.து.சுந்தரவடிவேலுவை முன்னாள் முதல்வர் காமராஜர் பணியமர்த்தியதற்கு முன்னதாக, அப்பதவி ஐஏஎஸ் அதிகாரிகளுக்கான பணியிடமாகவே இருந்தது. காமராஜரின் இந்த செயல், சுந்தரவடிவேலுவின் ஆளுமையை பள்ளிக் கல்விக்கு பயன்படுத்த வேண்டும் என்பதற்காக தான். அவரும், ஒன்றாய் கற்போம் நன்றாய் கற்போம் என்பது தொடங்கி, பல நூறு பள்ளிகளை திறந்தது என பல திட்டங்களை முன்னெடுத்து, நியமிக்கப்பட்டதற்கான பலனை முழுமையாக்கினார்.

இன்று அவரைப் போல நந்தகுமார் ஐஏஎஸ் நமக்கு கிடைத்துள்ளதாக எண்ணலாம். தமிழக அரசின் உத்தரவில் எந்த இடத்திலும் பள்ளிக் கல்வி இயக்குனர் பதவி, ஆணையர் பதவியாக மாற்றப்பட்டது என குறிப்பிடவில்லை. இனிமேல், அப்பதவிக்கு ஐஏஎஸ் அதிகாரி தான் நியமிக்கப்படுவார் எனவும் தெரிவிக்கப்படவில்லை.

தமிழக பள்ளிக் கல்வித்துறைக்கு தற்போதய சூழலில், தமிழகம் தேசிய கல்விக் கொள்கையை நிராகரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. தேசிய கல்விக் கொள்கையில் இருக்கும் பாதகங்களால் தமிழக கல்வித்துறை பின்னோக்கி செல்லாமல் இருப்பதற்கு, மாநில கல்விக் கொள்கையை உருவாக்க வேண்டிய சூழலில் உள்ளது. மாநில கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கு மாநில கல்வி ஆணையத்தை உருவாக்க் வேண்டிய அவசியம் இருக்கிறது. பள்ளிக் கல்வியை சீர்படுத்திம், சமமான கற்றல் வசதிகளை ஏற்படுத்துதல், ஒரு அரசுப் பள்ளியை கூட மூட மாட்டோம் என்ற கொள்கை முடிவை அரசு எடுக்க வேண்டிய சூழல் போன்றவற்றை கருத்தில் கொண்டு, அதற்காக செயல்படுவதற்காக திறமைமிக்க ஒரு அலுவலராக நந்தகுமார் இருப்பார் என தமிழகம் எதிர்பார்ப்பதால் அவர் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னர், இயக்குனர் எந்தெந்த பணிகளை மேற்கொண்டாரோ, அதை அவ்வாறே ஆணையரும் தொடர்வார்’, என்றார். ’

தொடர்ந்து பேசிய அவர், ‘தற்போது பள்ளிக் கல்வித்துறை செயலாளராக ஐஏஎஸ் அதிகாரி நந்தகுமார் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவரின் செயல்பாடுகளை 6 முதல் 1 வருட காலம் வரை பொருத்திருந்து பார்த்த பின், அவரின் செயல்களை தொடர்பான விமர்சனங்களை நாம் முன் வைக்கலாம். தற்போதைய சூழலில், தமிழக ஐஏஎஸ் அதிகாரி, ஆணையர் பதவிக்கு அமர்த்தப்பட்டிருந்தாலும் அவருக்கு பிறகாக, மற்றொரு ஐஏஎஸ் அதிகாரி அப்பதவிக்கு வருவதை ஊக்குவிக்க இயலாது. பிற மாநிலங்களைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி தமிழக பள்ளிக் கல்வித்துறை ஆணையராக வரும் சூழலும் ஆபத்துகளை விளைவிக்க கூடும்.நந்தகுமாருக்கு பின்னர், இயக்குனர் பதவி இயல்பு நிலைக்கு திரும்பும் என நம்புவதாகவும்’, அவர் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu School Education Department Prince Gajendra Babu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment