விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றை கூறும் மேதகு திரைப்படத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்கிற விதமாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாக சமூக ஊடகங்களில் ஆடியோ வெளியாகி பெரும் சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் தமிழர்களைப் பற்றிய பிரச்னைகளைப் விவாதம் என்றாலே இலங்கை அளவுக்கு தமிழகத்திலும் உஷ்ணம் அதிகரித்துவிடும். அரசியல் தளத்திலும் மட்டுமல்ல, கலை, இலக்கியம், சினிமாவிலும் இதே நிலைதான். சமீபத்தில், தி ஃபேமிலின் மேன் 2 வெப் சீரிஸ் விடுதலைப் புலிகள் இயக்கத்தை தவறாக சித்தரித்து இருப்பதாக தமிழ்நாட்டிலும் இலங்கைத் தமிழர்கள் மத்தியிலும் பெரும் எதிர்ப்பு எழுந்தது. இதனைத் தொடர்ந்து, கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் திரைப்படமும் இலங்கைத் தமிழர்கள் அரசியலை சரியாக விவாதிக்கவில்லை என்று விவாதங்கள் எழுந்தன. இந்த நிலையில்தான், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் இயக்குனர் கிட்டு இயக்கத்தில் உருவாகியுள்ள மேதகு திரைப்படம் கவனத்தைப் பெற்றுள்ளது.
மேதகு திரைப்படம் பிஎஸ் வேல்யூ ஓடிடி தளத்தில் ஜூன் 25ம் தேதி வெளியானது. இந்த படம் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் பிறப்பு முதல் அவருடைய முதல் புரட்சிகர அமைப்பான புதிய தமிழ்ப் புலிகள் உருவானது வரை சொல்லப்பட்டிருக்கிறது. மேதகு படம் பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தின் முதல் பாகமாக வெளியாகி உள்ளது. மேதகு படத்துக்கு இலங்கைத் தமிழர்கள் மற்றும் இந்தியத் தமிழர்கள் என பலரிடையே பாராட்டுகளையும் வரவேற்பையும் பெற்று வருகிறது.
இந்த சூழ்நிலையில்தான், பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்று படமான மேதகு திரைப்படத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்கிற விதமாக் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாக சமூக ஊடகங்களில் ஆடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.
அந்த ஆடியோவில், சீமான் யாருடனோ போனில் பேசியிருப்பதாக பதிவாகியிருப்பதாவது: “இந்த படத்தை நமக்கு எதிராகத்தான் செய்றாங்க இவங்க… அதாவது தலைவரைப் பற்றி என்ன தெரியும்? அது என்ன வரலாறு எப்படி எடுப்பாங்க? காசு வசூலிச்சி அவரை ஒரு வியாபாரப் பொருளாக்கி இதை எப்படி சகித்துக்கொள்வது பாருங்க… நாம் விலக்கி விட்ட (நாம் கட்சியில் இருந்து விலக்கி விட்ட) புவண்குமார், கிட்டு, கல்யாணசுந்தரம் இவர்கள் எல்லாம் சேர்ந்துதான் இந்த வேலையை சேட்டையை செய்றாங்க… இதை தொடக்கத்திலேயே தடுத்து நிறுத்தலனா தேவையில்லாத சிக்கல்களைக் கொண்டுவரும். அதை பாருங்க… நாம தலையிட்டா அது நல்லா இருக்காது.” என்று கூறுகிறார்.
மேதகு திரைப்படத்தை தவறாக எடுப்பார்கள் என்றும் பிரபாகரனை வியாபாரப் பொருளாக்குவதை சகித்துக்கொள்ள முடியாது என்றும் இந்த ஆடியோவில் சீமான் கூறியுள்ளார். மேலும் என்னால் இந்த விவகாரத்தில் நேரடியாக தலையிட முடியாது. நீங்கள் தான் தடுத்து நிறுத்த வேண்டும் என்கிற விதமாக பேசியுள்ளார். சீமானின் இந்த ஆடியோ பேச்சு சமூக ஊடகங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதே நேரத்தில், இந்த ஆடியோவில் பேசியிருப்பது சீமான் தானா என்று நடந்து வருகிறது. மேதகு படத்தைப் பற்றிய சீமானின் ஆடியோ பேச்சுக்கு இந்திய தமிழர்கள் மட்டுமல்லாமல் இலங்கை தமிழர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். சீமான் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் மற்றும் இலங்கை அரசியலுக்கான ஒட்டுமொத்த தமிழக குத்தகையை எடுத்திருக்கிறாரா? என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”