Advertisment

சுய சிந்தனையைத் தூண்டும் ஆசிரியர்களே தேவை! முதல்வர் பழனிச்சாமி பேச்சு

நல்லாசிரியர் விருது வழங்கி பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சுய சிந்தனையைத் தூண்டும் ஆசிரியர்களையே உலகம் தேடுகிறது என்று குறிப்பிட்டார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Teachers day - CM Edappadi Palanisamy

சுய சிந்தனைகளைத் தூண்டும் ஆசிரியர்களையே உலகம் தேடுகிறது என்று, நல்லாசிரியர் விருது வழங்கும் விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.

Advertisment

நல்லாசிரியர் விருது வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடந்தது. விழாவில் கலந்து கொண்டு விருது வழங்கி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

பல்வேறு பணிகளின் காரணமாக பெரு நகரங்களுக்கு வருகை தரும் ஆசிரியர்கள் குறைந்த கட்டணத்தில் வசதியாகத் தங்குவதற்காக சென்னை மற்றும் திருச்சிராப்பள்ளியில் ஆசிரியர் இல்லங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோயம்புத்தூர் மாநகருக்கும் இவ்வசதி விரிவுபடுத்தப்படவுள்ளது.

பதினோறாம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு என்ற மாற்றத்தால், மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான போட்டித் தேர்வுகளை பயமின்றி எதிர்கொள்ளும் துணிவை மாணவர்களிடையே ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் மாற்றப்படப்போகும் கலைத்திட்ட வடிவமைப்பும், பாடத்திட்டங்களும் இந்தியாவிலேயே, தமிழகத்தை தனித்தன்மை வாய்ந்த மாநிலமாக மாற்றும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

மாற்றங்களைப் பற்றி சொல்லும்போது எனக்கு ஒரு ஜென் கதை நினைவிற்கு வருகிறது.

அதில் ஒரு கதையை நான் இங்கு நினைவு கூறவிரும்புகிறேன். ஒரு மலையின் அடிவாரத்தில் இரண்டு பாறைகள் நெடு நாட்களாக மழையிலும், காற்றிலும் கிடந்து தூசி நிறைந்து பாசி பிடித்து கிடந்தது.

அதில் முதல் கல்லுக்கு, நாம் ஏன் இப்படியே ஒரு அவலட்சணம் பொருந்திய கல்லாகவே இருக்க வேண்டும்? வேறு இடம், வேறு வடிவம் கொள்ளலாமே என நினைத்து, இரண்டாம் பாறையிடம் தன் விருப்பத்தை சொன்னது. உடனே அப்பாறை நாம் எங்கிருந்தாலும், எப்படியிருந்தாலும் கல்லாகவே கிடப்போம். ஆகவே, இப்படியே இருத்தல் நலமே எனக்கூறியது.

கொஞ்ச நாட்களில் சிற்பிகளைக் கொண்ட ஒரு குழு அந்த இடத்திற்கு வந்தது. அவர்கள் ஒவ்வொரு பாறையாய் ஆராய்ந்து இவ்விரு பாறைகளே மிகச் சிறந்தவை என்ற முடிவுக்கு வருகிறார்கள்.

தலைமைச் சிற்பி, சரி, நாளை நாம் இங்கு வந்து இவ்விரு பாறைகளையும் எடுத்துச் செல்வோம் என்று கூறினார்.

அவர்கள் போன பின் முதல் பாறை சொல்லியது‚ ஆஹா! நாம் எதிர்பார்த்த மாற்றம் வரப்போகிறது. நாம் நல்ல சிலையாக, சிற்பமாக மாறப்போகிறோம்‛ என்று குதூகலித்தது.

ஆனால், இரண்டாம் பாறையோ, ‘அவர்கள் நம்மை சுத்தியால் அடிப்பார்கள். உளியால் செதுக்குவார்கள். வலி உயிர் போகும். எனவே நாளை அவர்கள் வரும் போது நான் பெயர்த்து எடுக்க முடியாதபடி கடினமாக மாறி பூமியோடு ஒட்டிக் கொள்வேன்’ என்றது.

மறு நாள் சிற்பிகளின் குழு வந்தது.

முதல் பாறையை மட்டுமே அவர்களால் சுலபமாக பெயர்க்க முடிந்தது.

எனவே, ஒரு பாறையே போதும் என்ற எண்ணத்தில் சென்றுவிட்டனர்.

கொண்டு சென்ற பாறையை அடித்து, உடைத்து, செதுக்கி தம் திறமைகளால் பொலிவு மிக்க புத்தர் சிலையை உருவாக்கினர்.

இந்நாட்களிலே பாறைகள் கிடந்த மலையின் மீது புத்தர் கோயில் கோலாகலமாக எழுப்பப்படுகிறது. ஒரு நன்னாளில் அந்த புத்தர் சிலை, கோயிலுக்குள் வைக்கப்பட்டு பூஜிக்கப்படும். கடவுளாய் மாறுகிறது.

மாற்றதை விரும்பியதால் தன்னுள் இருந்த புத்தனை வெளிக்கொணர்ந்தது முதல்பாறை. தன்னுள்ளும் ஞான முதல்வன் புத்தன் இருந்தாலும், மாற்றத்தை விரும்பாமல் மதிமயக்க மனதோடு இருந்ததால் இரண்டாவது பாறை மலையேறுவோரின் காலடிப் படியாய் மாறிப்போனது.

இரு பாறைகளுக்குமான வாய்ப்புகள் ஒன்றே. ஆனால் மாற்றத்தை மனதார ஏற்றுக் கொள்ளும் போது மட்டுமே நம் உள்ளிருக்கும்‚ புத்தன் வெளிப்படுகிறான்.

உங்கள் வகுப்பறையில் உள்ள ஒவ்வொரு மாணவருக்குள்ளும் ஒரு மகிழ்ச்சி பொங்கக்கூடிய நிகழ்வுகளோ அல்லது சோகம் நிறைந்த கதையோ நிச்சயமாக இருக்கும்.

அவற்றை அவர்களின் உணர்வுகளுக்கு ஏற்ற வகையில் கேட்க ஆரம்பியுங்கள்.

இதுவே கற்பித்தலின் முதல்படி.

வகுப்பறையில் கற்றுக் கொடுக்கின்ற ஆசிரியரைவிட, கற்றலைத் தூண்டுகின்ற ஆசிரியரைவிட, ஒரு மாணவனின் சுயசிந்தனையை தட்டி எழுப்புகின்ற, தூண்டுகின்ற ஆசிரியர்களைத் தான் இன்றைய உலகம் எதிர்பார்க்கிறது.

ஆகவே கற்றல்-கற்பித்தல் நிகழ்வுகளையும் தாண்டி, சுய சிந்தனையை வளர்த்தெடுக்கும் விதமாக உங்கள் கற்பித்தல் முறையை அமைத்துக் கொள்ளுதல் கற்பித்தலின் இரண்டாம் படியாகும்.

நீங்கள் கற்றுக்கொடுக்கும் முறையில் ஒரு குழந்தையால் கற்றுக்கொள்ள இயலவில்லை எனில், அது கற்றுக் கொள்ளும் வகையில் உங்கள் கற்றல் முறைகளை மாற்றுங்கள்.

இது கற்பித்தலின் மூன்றாம் படியாகும். இரும்பு குளிர்ந்து போன பிறகு, அதனை எவ்வளவுதான் வலுவாக அடித்தாலும், அதலிருந்து புதியதாக எப்பொருளையும் உருவாக்க இயலாது. நெருப்பில் உருகி, இளகும் நிலையில் உள்ள இரும்பைத்தான் நாம் நினைத்தபடி மாற்ற முடியும்.

அதுபோல மாணவப் பருவத்தில், ஆசிரியர்கள், மாணவர்களை சிறந்த மாணக்கர்களாக உருவாக்கி, வருங்காலத்தில் பல டாக்டர் இராதாகிருஷ்ணன் போலவோ, டாக்டர் அப்துல்கலாம் போலவோ சிறந்த குடிமகன்களாக உருவாக்க வேண்டும்.

இதுபோன்று வாய்ப்பு ஒருமுறை கை நழுவி போய்விட்டால் பிறகு அவ்வாய்ப்பு நமக்கு கிடைக்காது. ஆசிரியப் பெருமக்களாகிய நீங்களும், உங்கள் சுக துக்கங்களை மனதுள் அடக்கி, புன்னகை பூக்கும் முகத்தோடு, ஒவ்வொரு நாளும் மாணவர்களை எதிர்கொள்ளுங்கள்.

உங்கள் முக மலர்ச்சியே மாணவர்களுக்கு முழு வளர்ச்சியை கொடுக்கும்.

நீங்கள் அவர்களின் மீது அக்கறை கொண்டவராக இருந்தால் மட்டும் போதும், நீங்கள் நினைத்த கல்வி மற்றும் நடத்தை மாற்றத்தை மாணவர்களிடம் ஏற்படுத்த முடியும்.

வகுப்பறையை கவித்துவமாய் மாற்றும் ஒவ்வொரு ஆசிரியரும் நல்லாசிரியர் மட்டுமல்ல மாணவர்களின்‚ கனவு ஆசிரியர் ஆகவும் மாறுவார் என்பதை நினைவிற் கொள்ளுங்கள்.

இன்றைய ஆசிரியர் தின விழாவில் பெருமைக்குரிய டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது பெற்ற அனைத்து ஆசிரியர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment