அரசு உதவிகளுக்கு அதிமுக அட்டையா? செல்லூர் ராஜூ பேச்சும், ஓபிஎஸ் மறுப்பும்!

அதிமுக அடையாள அட்டை, ஆதார் கார்ட்- ரேஷன் கார்டு போன்றவற்றை விட பெரியதா? என்றும் நெட்டிசங்கள் கேள்வி எழுப்ப தொடங்கினர்.

அதிமுக அடையாள அட்டை இருந்தால் தான், அரசின் நலத்திட்ட உதவிகளை பெற முடியும் என்ற செல்லூர் ராஜூவின் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் அதிமுக கட்சியில் உறுப்பினர்களை சேர்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிற்கு கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர் செல்லூர் ராஜூ பேசிய கருத்து தமிழகத்தில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சர் செல்லூர் ராஜு பேசியதாவது “அதிமுக கட்சி உறுப்பினர் அட்டை எனது உயிர் நாடி போன்றது. அதிமுக உள்ளாட்சித் தேர்தல் விரைவில் வரவுள்ளது. அதற்குள் அனைவரும் கட்டாயம் அதிமுக உறுப்பினர் அடையாள அட்டையைப் பெற்றிருக்க வேண்டும். இப்போது கட்சியில் சேர்ந்த அனைவருக்கும் சில நாட்களுக்குள் அதிமுக உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டு விடும். அதனை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த உறுப்பினர் அட்டையை வைத்திருந்தால் தான் அரசின் நலத்திட்ட உதவிகளை பெற முடியும்” என்று கூறினார்.

செல்லூர் ராஜூவின் இத்தகைய பேச்சுக்கு அரசியல் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், அதிமுக அடையாள அட்டை, ஆதார் கார்ட்- ரேஷன் கார்டு போன்றவற்றை விட பெரியதா? என்றும் நெட்டிசங்கள் கேள்வி எழுப்ப தொடங்கினர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜு, அதிமுக அடையாள அட்டை குறித்து தான் கூறிய கருத்து தவறாக பரப்பப்பட்டு வருவதாக விளக்கம் அளித்துள்ளார். அத்துடன், அதிமுக அடையாள அட்டை இல்லாமல், “நான் அதிமுக கட்சி நிர்வாகி” என்று மற்றவர்கள் வெளியில் சொல்லக் கூடாது என்பதற்காகவே, அதிமுக அடையாள அட்டை கட்டாயம் என்று கூறியதாகவும் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், செல்லூர் ராஜூவின் இத்தகைய கருத்திற்கு, துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ் மறுப்பு தெரிவித்துள்ளார். அமைச்சரின் கருத்திற்கு பதில் கூறியுள்ள அவர், அரசு நலத்திட்ட உதவிகள் அனைவரையும் சென்று சேர வேண்டும். அதிமுக கட்சி உறுப்பினர்கள் மட்டும் அல்லாமல், பொதுமக்கள், இளைஞர்கள் என யார் வேண்டுமென்றாலும் அதனை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

×Close
×Close