Advertisment

பூத் முகவர்கள் கூட்டத்தை மாநாடு போல திரட்டிய செந்தில் பாலாஜி: அப்போ அந்த கொரோனா விதிமுறை?

அமைச்சர் செந்தில் பாலாஜி கூட்டிய, கோவை மாவட்ட பூத் முகவர்கள் ஆலோசனைக் கூட்டமே மாநாடு போல இருக்கிறதே என்று திமுகவினரே வியந்துபோனாலும், எதிர்க்கட்சிகள் கொரோனா விதிமுறைகள் என்ன ஆனது என்று கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Senthil Balaji organized DMK booth committee agents meeting, opposition criticise what happen covid 19 procedures, பூத் முகவர்கள் கூட்டத்தை மாநாடு போல திரட்டிய செந்தில் பாலாஜி, கோவை, திமுக, உதயநிதி, டிடிவி தினகரன், கொரோனா விதிமுறை, Minister Senthil Balaji, covid 19 rules, sasikala, ttv dhinakaran

கோவை மாவட்டத்துக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, வருகிற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கோவை மேயர் பதவியுடன் 100 வார்டுகளையும் கைப்பற்ற வேண்டும் என்று மாஸ்டர் பிளான் உடன் களம் இறங்கியுள்ளார்.

Advertisment

முதல் கட்டமாக திமுகவின் பூத் முகவர்கள் 25,000 பேர் கலந்துகொண்ட ஒரு மாநாடு போல கூட்டத்தை திரட்டி ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ.வுமான உதயநிதி கலந்துகொண்டு பேசினார்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தாலும் கோவை மாவட்டத்தில் ஒரு தொகுதியில்கூட வெற்றி பெற முடியாதது திமுகவுக்கு பெரும் அதிர்ச்சி அளித்தது. இருப்பினும், கோவையில் திமுகவின் செல்வாக்கை உறுதி செய்ய வேண்டும் என்ற நோகத்தில் திமுக தலைமை செயல்பட்டு வருகிறது.

தமிழகத்தில் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கோவையில் அனைத்து இடங்களையும் கைப்பற்றுவதன் மூலம் கோவை திமுகவின் கோட்டையாக்க திமுக தலைமை திட்டமிட்டுள்ளது.

இந்த திட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதற்காகவே, அமைச்சர் செந்தில் பாலாஜி கோவை மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். அமைச்சர் செந்தில் பாலாஜியும் கோவையில் திமுகவை பலப்படுத்தும் நடவடிக்கையை முடுக்கிவிட்டுள்ளார்.

கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளையும் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் கரூர் மாவட்ட திமுக நிர்வாகிகளை பொறுப்பாளர்களாக நியமித்து பூத் கமிட்டி அமைத்துள்ளார். கோவை மாவட்ட நிர்வாகிகள் இவர்களுடன் இணைந்து செயல்பட வேண்டும். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்பது செந்தில் பாலாஜி திமுகவினருக்கு ஆணை பிறப்பித்துள்ளார் என்று திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் மாஸ்டர் பிளானுக்கு சாட்சியாக நேற்று (டிசம்பர் 26) கோவையில் நடைபெற்ற பூத் முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் அமைந்திருக்கிறது.

கோவயில் நேற்று ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்தின் மாநகர-நகர-பேரூர் பாக முகவர்கள் 25 ஆயிரம் பேர் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டம் ஒரு மாநாடு போல நடைபெற்றது. பூத் முகவர்கள் ஆலோசனைக் கூட்டத்தையே ஒரு மாநாடு போல கூட்டி தனது செயல்பாட்டை அமைச்சர் செந்தில் பாலாஜி திமுக தலைமைக்கு எடுத்துக்காட்டியிருக்கிறார்.

கோவை மாவட்ட பூத் முகவர்கள் 25,000 பேர் கலந்துகொண்ட இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ.வுமான உதயநிதி கலந்துகொண்டு பேசியிருக்கிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டது குறித்து உதயநிதி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், “ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்தின் மாநகர-நகர-பேரூர் பாக முகவர்கள் 25 ஆயிரம் பேர் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டத்தில் இன்று உரையாற்றினேன். வீடுவீடாக வாக்காளர்களை கணக்கெடுத்து, அரசின் சாதனைகளை கூறி அவர்களின் வாக்குகளை உதயசூரியனுக்கு உறுதிசெய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டேன்.” என்று அமைச்சர் செந்தில் பாலாஜியை டேக் செய்து குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி கூட்டிய, கோவை மாவட்ட பூத் முகவர்கள் ஆலோசனைக் கூட்டமே மாநாடு போல இருக்கிறதே என்று திமுகவினரே வியந்துபோனாலும், எதிர்க்கட்சிகள் கொரோனா விதிமுறைகள் என்ன ஆனது என்று கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

எதிர்க்கட்சிகள் அரசியல் நிகழ்ச்சி என்றால் கொரோனா விதிமுறைகளை மீறியதாக வழக்குப்பதிவு செய்யும் காவல்துறை, இவ்வளவு பெரிய கூட்டம் கூட்டிய ஆளும் கட்சியை கண்டுகொள்ளாமல் அமைதியாக இருப்பது ஏன் என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த விமர்சனங்களுக்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கோவையில் திமுக நிகழ்ச்சியில் கொரோனா விதிமுறைகள் மீறப்படவில்லை என்று கூறினார்.

இந்த நிலையில், கோவையில் நடைபெற்ற திமுக நிகழ்ச்சியில் கொரோனா விதிமீறல் ஏற்பட்டதாகக் குறிப்பிட்டுள்ள அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், “கோவை திமுக நிகழ்ச்சியில் நடந்த கொரோனா விதிமீறல் குறித்த அமைச்சரின் விளக்கம், முழு பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கலாமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “கோவையில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற கூட்டத்தில் கொரோனா விதிமுறைகள் மீறப்படவில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கமளித்திருக்கிறார். கொடிசியா உள் அரங்கில் திமுக நிகழ்ச்சி நடத்தியதாக அவர் கூறுவது முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைப்பது போல் உள்ளது.

25,000 பேர் கலந்துகொண்டதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ள அந்த நிகழ்ச்சியின் புகைப்படங்களையோ, காணொளிகளையோ பார்க்கும் பச்சைக் குழந்தைக்குக்கூட இந்த நிகழ்ச்சி உள அரங்கில் நடந்ததா அல்லது மைதானத்தில் நடந்ததா என்பது புரியும். அதில் குறைந்தபட்சம் எத்தனை பேர் முகக்கவசம் அணிந்திருக்கிறார்கள்? சமூக இடைவெளியுடன் அமர்ந்திருக்கிறார்கள்? ஒமிக்ரான் பரவல் தமிழகத்தில் அதிகரித்து வருவதால் மத்திய அரசின் குழுவும் தமிழகத்திற்கு வந்துள்ள இந்த வேளையில் திமுக பாக முகவர்களை ஆலோசனைக் கூட்டம் என்ற பெயரில் ஒன்று திரட்ட வேண்டிய அவசியம் என்ன? தங்களது சொந்தக் கட்சியினருக்கும் அவர்கள் வழியாக பொதுமக்களுக்கும் நோய்ப் பரவலை ஏற்படுத்த கட்டுப்பாடுகளை விதிக்கும் இவர்களே காரணமாக இருக்கலாமா? ஒமிக்ரான் பரவல் அதிகரிப்பதைக் காட்டி புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் நாங்கள் அஞ்சலி செலுத்த காவல்துறை தடைவிதித்தபோது, சமூக பொறுப்புமிக்க ஓர் அரசியல் இயக்கமாக அமமுக அதனையேற்று செயல்பட்டது.

ஆனால், கோவை நிகழ்ச்சிக்கு திமுகவினருக்கு காவல்துறை முறைப்படி அனுமதி வழங்கினார்களா? அப்படி காவல்துறை பாரபட்சத்துடன் அனுமதி கொடுத்திருந்தால், இனி வரும் காலங்களில் மக்கள் நலப் பிரச்னைகளுக்காக உரிய கொரோனா பரவல் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளோடு போராட்டம் நடத்தும்போது காவல்துறையினர் அனுமதி தர மறுத்தால் கோவை நிகழ்ச்சியை ஆதாரமாகக் காட்டி நாங்கள் நீதிமன்றத்திற்கு செல்ல வெண்டியிருக்கும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Dmk V Senthil Balaji Coimbatore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment