scorecardresearch

தைரியம், திறமை இருந்தால் பெட்ரோல் விலை உயர்வுக்கு அண்ணாமலை போராட்டம் நடத்தட்டும்: செந்தில் பாலாஜி

கோவையில் 10 சட்டமன்ற உறுப்பினர்களும் எதிர்கட்சியை சேர்ந்தவர்கள், ஆனாலும் அரசு பணி நடைபெறுகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்த்து போராட்டம் நடத்திவிட்டு, பாஜக பிற போராட்டங்களை நடத்தட்டும் – அமைச்சர் செந்தில் பாலாஜி

Senthil Balaji says can BJP protest against Petrol Diesel price hike: பா.ஜ.க.,விற்கு தைரியமும் திறமையும் இருந்தால் பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் விலை உயர்வுக்கு முதலில் போராட்டம் நடத்திவிட்டு, பின்னர் அடுத்த கட்ட பிரச்சினைகள் குறித்து போராட்டம் நடத்தட்டும் என அமைச்சர் மின்சாரத்துறை செந்தில் பாலாஜி விமர்சித்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் திருச்சி சாலையில் உள்ள சுங்கம் பகுதியில் உள்ள வாலாங்குளம் வடிகால் வசதியினை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று ஆய்வு மேற்கொண்டார்.

இதையும் படியுங்கள்: பெங்களூரு சிறையில் நிர்வாணமாக நிறுத்தி வீடியோ… ‘நடமாடும் நகைக்கடை’ ஹரி நாடார் கதறல்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்தாண்டு பெய்த மழையினால் வாலாங்குளத்தில் அதிகப்படியான நீரின் வரவு இருந்ததால் குளத்தில் இருக்கும் நீர் போக மீதம் இருக்கக்கூடிய நீர் வெளியேற்ற வேண்டிய சூழ்நிலை இருக்கும்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மிகக் குறுகலாக இரண்டு குழாய்கள் மட்டுமே பதிக்கப்பட்டு, அந்த குழாய்கள் வழியாக வெளியேற வேண்டிய நீர் அதைவிட அதிகமாக வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டால் குளத்தில் மிகப்பெரிய உடைப்பு ஏற்படும் என கடந்தாண்டு ஆய்வு செய்தபோது தெரிய வந்தது. இதை முதல்வர் கவனத்திற்கு எடுத்து சென்று இதற்காக புதிய திட்டமிடல் வேண்டும் என ஆலோசனை மற்றும் உத்தரவுகளைப் பெற்று புதிதாக வடிவமைக்கப்பட்டு திருச்சி சாலையில் சுங்கம் சந்திப்பிலிருந்து சங்கனூர் பள்ளம் வரை ஏறத்தாழ 2.1 கிலோமீட்டருக்கு வாலாங்குளத்திலிருந்து வெளியேறும் வெள்ள நீரை 9கோடி ரூபாய் மதிப்பீட்டில் வடிகால் கட்டுவதற்கான நிதிகள் ஒதுக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்திற்கான டெண்டர் முடிக்கப்பட்ட பின் பணிகள் தொடங்கப்பட உள்ளது என கூறினார்.

கோவையின் வளர்ச்சிக்காக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் என்னென்ன குறைகள் உள்ளதோ அதை சரி செய்து அதற்கான நிதிகளை பெற்று முழுவதுமாக மக்களுடைய பயன்பாட்டிற்கு கொண்டுவரும் அளவிற்கு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

இடையர்பாளையம், வடவள்ளி, மருதமலை போன்ற பகுதிகளில் மின் அளவீடு கணக்கெடுக்க வரும் ஊழியர்கள் சரியான முறையில் கணக்கெடுக்க வருவதில்லை என்ற குற்றச்சாட்டிற்கு பதிலளித்த அமைச்சர், இரண்டு நாட்களுக்குள் கமிட்டி அமைத்து மின் ஊழியர்கள் கணக்கெடுக்க வராத இடங்கள் குறித்து ஆய்வு செய்ய உத்திரவிடுகிறேன் எனவும் அப்படி பணிக்கு வராமல் இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.

கோவை மாவட்டத்தில் வால்பாறையில் மட்டும் அதிக அளவில் மழை இருந்தது பாதிப்புகள் வரும் என சந்தேகிக்கப்பட்டது. ஆனால் பாதிப்புகள் இல்லை. மின் விநியோகத்திலும் பாதிப்புகள் இல்லை சீரான மின் விநியோகம் வழங்கப்படுகிறது. இருந்தபோதிலும் முதலமைச்சர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடமும் நேரடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு மழை வெள்ள பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார். ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டார். முகாம்களில் தங்கி இருந்த பொதுமக்களிடமும் தொலைபேசி வாயிலாக பிரச்சனைகள் குறித்து பேசி தேவைகளைக் கேட்டு அதற்கான உத்தரவுகளையும் வழங்கி உள்ளார் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

மேலும் கையிருப்பில் ஒரு லட்சத்து 33 ஆயிரம் மின்கம்பங்கள் உள்ளது. அதேபோல பழுதடைந்த 35 ஆயிரம் மின் கம்பங்கள் பழுது பார்க்கப்பட்டுள்ளது. 10ஆயிரம் கிலோ மீட்டர் அளவுக்கு மின் கம்பிகள் கையிருப்பில் உள்ளது. அதேபோல 10 லட்சத்தி 77 ஆயிரம் மின் கம்ப பணிகள் சரி செய்யப்பட்டு நிறைவு பெற்றுள்ளது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

கோவை மாவட்டத்தில் வளர்ச்சி மற்றும் குறைபாடுகள் குறித்து ஆய்வு மேற்க்கொள்ளப்பட்டு வருகிறது. நீதிமன்றம் உத்தரவு அடிப்படையில் ஆக்கிரமிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் தவறான செய்திகளை ஊடகங்கள் வெளியிடுகின்றனர். குடியிருப்பு பகுதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றம் பொதுமக்கள் கதறல் என செய்தி போடுறீங்க என்று செந்தில் பாலாஜி கூறினார்.

தொடர் விபத்து நடைபெறும் சுங்கம் திருச்சி மேம்பாலம் குறித்து ஐ.ஐ.டி குழுவினர் விரைவில் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்பித்தவுடன் பணிகள் தொடங்கும். கோவையில் 200 கோடி அளவிற்கு பணிகள் நடைபெற்று வருகிறது. தெற்கு தொகுதியில் தான் 9 கோடிக்கு வடிகால் பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

வருகின்ற 24 ம் தேதி கிணத்துகடவில் 82 ஆயிரம் பேருக்கு அரசு நலத்திட்டங்களை வழங்குகிறார் முதலமைச்சர் ஸ்டாலின். விடுபட்ட சாலைகளுக்கு கணக்கெடுப்பு எடுக்கப்பட்டு வருகிறது. அதற்கும் நிதி ஒதுக்க முதலமைச்சர் தயராக இருக்கிறார். விமான விரிவாக்கத்திற்கு ஆட்சிக்கு வந்த 14 மாதங்களில் 1132 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

அட்டுக்கல் பிரச்சினைக்கு பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் போராட்டம் நடைபெறும் என பா.ஜ.க.,வினர் தெரிவிப்பதற்கு பதிலளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, பா.ஜ.க.,வினர் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வுக்கு முதலில் போராட்டம் நடத்திவிட்டு, அடுத்த கட்ட பிரச்சினைகள் குறித்து பேசி போராட்டம் நடத்தட்டும். தைரியமும் திறமையும் இருந்தால் 410 ரூபாய் சிலிண்டர் 1120 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 54 ரூபாய்க்கு விற்ற டீசல் 94 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதற்குப் போராட்டம் நடத்தட்டும் என்று கூறினார்.

கோவையில் 10 சட்டமன்ற உறுப்பினர்களும் எதிர்கட்சியை சேர்ந்தவர்கள், ஆனாலும் அரசு பணி நடைபெறுகிறது. எல்லா மாவட்டங்கள் போன்றே நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Senthil balaji says can bjp protest against petrol diesel price hike