சென்னை ஈ.சி.ஆரில் உள்ள வி.ஜி.பி பொழுதுபோக்கு பூங்காவில் சிறுமி மற்றும் அவரது சகோதரியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஊழியர் சுரேந்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை அடுத்துள்ள ஈ.சி.ஆர் பகுதியில் வி.ஜி.பி பொழுதுபோக்கு பூங்கா உள்ளது. இது பிரபலமான பூங்காவாகும். இங்கு கடந்த 17-ம் தேதி சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர் தன்னுடைய 19 மற்றும் 16 வயதுடைய இரண்டு மகள்களுடன் தீம் பார்க் சென்றுள்ளார். அப்பொழுது நீர் சறுக்கு பகுதியில் மூத்த மகளும், இளைய மகளும் சறுக்கி விளையாடிய போது அங்கு பணியில் இருந்து ஊழியர் ஒருவர் மகள்களிடம் தவறாக நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
உடனடியாக வி.ஜி.பி நிர்வாகத்திடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில் நடவடிக்கை ஏதும் எடுக்காததால் பாதிக்கப்பட்ட பெண்களின் தாய் நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து வி.ஜி.பி ஊழியரான சுரேந்திரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
விசாரணையில் பாலியல் தொல்லை கொடுத்ததை ஒப்புக்கொண்ட நிலையில் சுரேந்தர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதுதொடர்பாக விஜிபி நிர்வாகத்திடமும் விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் கூறப்படுகிறது.