கருணாநிதியை ‘அப்புறப்படுத்த’ நினைத்த புலிகளை ஸ்டாலின் ஆதரிப்பதா? காங்கிரஸ் திடீர் கேள்வி

கருணாநிதியை அப்பறப்படுத்தி விட்டு வேறு ஒருவரை அந்த இடத்தில் அமரவைக்க விடுதலைப்புலிகள் முயற்சித்தாக கருணாநிதியே அறிவித்து, அதனால் திமுக பிளவு பட்டதை நாடே அறியும்...

கருணாநிதியை ‘அப்புறப்படுத்த’ நினைத்த புலிகளை ஆதரிப்பதா? என ஸ்டாலினுக்கு காங்கிரஸ் திடீர் கேள்வி எழுப்பியிருக்கிறது.

விடுதலைப் புலிகள் மீதான தடையை ஐரோப்பிய யூனியன் நீதிமன்றம் கடந்த 26-ம் தேதி நீக்கியது. இதற்கு பழ.நெடுமாறன், டாக்டர் ராமதாஸ், வைகோ, முத்தரசன், தொல்.திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் வரவேற்பு தெரிவித்ததோடு, இந்தியாவிலும் தடையை நீக்கவேண்டும் என கோரிக்கை வைத்தனர். தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலினும் விடுத்த அறிக்கையில் மேற்படி உத்தரவை வரவேற்றதுடன், ‘ஈழத் தமிழர்களின் உரிமைப் போரில் இது முக்கிய திருப்புமுனை. இனியாவது ஈழத்தமிழர்களுக்கு அரசியல் தீர்வு கிடைக்க சர்வதேச சமூகமும் இந்திய அரசும் உதவவேண்டும்’ என கோரிக்கை வைத்தார்.

ஸ்டாலினின் இந்த அறிக்கை, காங்கிரஸ் வட்டாரத்தில் சலசலப்புகளை கிளப்பியிருக்கிறது. குறிப்பாக முன்னாள் எம்.பி.யான கே.எஸ்.அழகிரி தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறார். அவர் தனது முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது..

‘விடுதலைப்புலிகளின் மீதான தடையை நீக்க மத்திய அரசு முன் வர வேண்டும் என தளபதி மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார் .இதற்கு வலுசேர்க்கும் வகையில் ஐரோப்பிய யூனியன் நடவடிக்கையை மேற்கோள் காட்டியுள்ளார். விடுதலைப்புலிகளால் ஐரோப்பிய யூனியனுக்கு பெரிய பாதிப்பு ஏதுமில்லை .ஆனால் இந்தியாவிற்கான பாதிப்பு மிகப்பெரியதாகும் .

ஏன் ! ஒருகாலத்தில் முத்தமிழ் அறிஞர் கலைஞரையே அப்பறப்படுத்தி விட்டு வேறு ஒருவரை அந்த இடத்தில் அமரவைக்க விடுதலைப்புலிகள் முயற்சித்தாக கலைஞரே அறிவித்து அதனால் திமுகவே பிளவு பட்டதை நாடே அறியும் . காஷ்மீரில் செயல்படும் தீவிரவாதிகளை காஷ்மீர மக்களின் நலனோடு ஒப்பிடக்கூடாது. அதேபோல் விடுதலைப்புலிகளை இலங்கைத் தமிழ்களின் நலனோடும் இணைக்ககூடாது.

தீவிர வாதிகள் எப்போதும் மக்கள் நலனுக்கு எதிரானவர்கள் என்பது ‘வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம்’ என்று பிரகடனப்படுத்திய திமுக விற்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. இலங்கைத்தமிழர்களின் நலன்களைப் பாதுகாக்க, போராட யாழ்ப்பாணத்தில் பெரியவர் சம்மந்தம் தலைமையில் மிக வலுவான ஜனநாயக இயக்கம் உயிர்ப்பபோடு உள்ளது.

இலங்கைப் பிரச்சனையில் மத்திய அரசின் நிலையே திமுக வின் நிலை என கலைஞர் தெளிவாக கூறியுள்ளார். எனவே திமுக வின் நிலையில் மாற்றம் வரும் என நான் நினைக்கவில்லை. தளபதி ஸ்டாலின் வளர்ந்து வரும் தலைவர். ஒரு ஜனநாயக இயக்கத்தின் அடிப்படைத்தூண். தனிமனிதக் கொலைகளில் ஈடுபடுகின்ற அமைப்புகளால் உலகம் இன்று படுகின்ற சிரமங்களை தளபதி அறியாதவர் அல்ல. இலங்கைத் தமிழர்களுக்கு மட்டுமல்ல; உலகம் முழுவதுமுள்ள தமிழர்களுக்காக போராட தாய் தமிழகம் தயாராக இருக்கிறது – அதுவும் ஜனநாயக வழியில்!’ என குறிப்பிட்டிருக்கிறார் கே.எஸ்.அழகிரி.

இவரது பதிவுக்கு தி.மு.க. தரப்பில் இதுவரை ‘ரெஸ்பான்ஸ்’ இல்லை.

×Close
×Close