Advertisment

சசிகலா பரோலுக்கு தமிழக அரசு அனுமதிக்குமா?

சசிகலா பரோல், தமிழக போலீஸ் கைகளில் இருக்கிறது. இதன் காரணமாக பரோல் விவகாரத்தில் அரசியல் ரீதியான பார்வைகள் அதிகம் படிந்துள்ளன.

author-image
selvaraj s
புதுப்பிக்கப்பட்டது
New Update
vk sasikala seeking parole to see m.natarajan,sasikala parole on tamilnadu government hand, m.natarajan on treatment, vk sasikala at bengaluru jail

சசிகலா பரோல், தமிழக போலீஸ் கைகளில் இருக்கிறது. இதன் காரணமாக அரசியல் ரீதியான பார்வைகள் இதில் அதிகம் படிந்துள்ளன.

Advertisment

சசிகலா, தமிழக முதல்வர் பதவியை எதிர் நோக்கியிருந்தவர். அதிமுக.வின் பொதுச்செயலாளராகவும் நியமனம் செய்யப்பட்டிருந்தவர்! ஆனால் சொத்துக் குவிப்பு வழக்கு அவரது வாழ்க்கைப் பாதையை தலைகீழாக புரட்டிப் போட்டது.

சசிகலா, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, இளவரசி, ஜெ.வின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன் ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதித்து தனி நீதிபதி மைக்கேல் டி குன்ஹா தீர்ப்பு கொடுத்தார். கர்நாடக உயர்நீதிமன்ற அப்பீலில் நீதிபதி குமாரசாமி விசாரித்து, மேற்படி நால்வரையும் விடுவித்தார். பின்னர் உச்சநீதிமன்றம், குன்ஹாவின் தீர்ப்பை உறுதி செய்தது.

ஜெயலலிதா மறைந்துவிட்டதால், அவருக்கு இந்த வழக்கில் தண்டனை அறிவிக்கப்படவில்லை. சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் கடந்த பிப்ரவரி 15-ம் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். இந்தத் தீர்ப்பு தொடர்பாக சசிகலா தாக்கல் செய்த மறு சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதற்கிடையே பெங்களூரு சிறையில் விதிமுறைகளை மீறி பலர் அவரை சந்தித்ததாகவும், சசிகலாவே விதிகளை மீறி சிறையை விட்டு வெளியேறியதாகவும் சர்ச்சைகள் எழுந்தன. இதனால் தனது நெருங்கிய உறவினர்கள் ஓரிருவர் இறந்த தருணங்களில்கூட சசிகலா பரோல் கேட்டு விண்ணப்பிக்க வில்லை. அரசியல் ரீதியாக அவரது அணிக்கு தமிழகத்தில் பின்னடைவு ஏற்பட்ட தருணங்களிலும் அவர் தமிழகம் வர முயற்சிக்க வில்லை.

இந்தச் சூழலில் சசிகலாவின் கணவர் ம.நடராஜன், உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டு சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். கல்லீரம், கிட்னி, நுரையீரல் ஆகியன பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். அக்டோபர் 3-ம் தேதி இரவில் அவருக்கு கல்லீரல் மாற்று கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது. சிகிச்சைக்கு பிறகு அவர் தேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

நடராஜன் உடல் நிலையைத் தொடர்ந்து, சிறையில் இருந்து பரோலில் வெளியே வர முடிவெடுத்தார் சசிகலா. 15 நாட்கள் பரோல் கேட்டு கர்நாடக சிறை நிர்வாகத்திடம் சில தினங்களுக்கு முன்பே விண்ணப்பம் கொடுத்திருக்கிறார் அவர். பூஜை விடுமுறை காரணமாக அவரது விண்ணப்பத்தை பரிசீலிப்பதில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது.

வழக்கமாக இதுபோல கணவர் அல்லது மனைவி உடல்நிலை காரணமாக பரோல் கேட்டால், உடனே அனுமதி கொடுப்பது சிறை நிர்வாகத்தின் வழக்கம். ஆனால் சசிகலா சிறை விதிகளை மீறியதாக ஏற்கனவே புகார் உள்ளதால், இதில் சிறை நிர்வாகம் விதிமுறைகளை முழுமையாக கடைபிடிக்க முடிவு செய்தது.

பரோல் விண்ணப்பத்தில் ம.நடராஜனின் மருத்துவ சிகிச்சை தொடர்பான ஆவணங்களை சசிகலா இணைக்கவில்லை. அதையே காரணம் காட்டி, பரோல் விண்ணப்பத்தை கர்நாடக சிறைத்துறை தள்ளுபடி செய்தது. பிறகு உரிய ஆவணங்களுடன் மீண்டும் மனு செய்யும்படி கேட்டுக் கொண்டது. அதன்படி உரிய மருத்துவ ஆவணங்களை இணைத்து இரண்டாவது முறையாக சசிகலா பரோல் கேட்டு விண்ணப்பம் கொடுத்திருக்கிறார்.

இது ஒருபுறமிருக்க... சசிகலா கணவர் நடராஜன், நிஜமாகவே உடல் நிலை அதிகமாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகிறாரா?, சசிகலா பரோலில் தமிழகம் வருவதால் சட்டம்-ஒழுங்கு பிரச்னைகளுக்கு வாய்ப்பு இருக்கிறதா? என இரு கேள்விகளுக்கு பதில் தெரிவிக்கக் கோரி தமிழக அரசுக்கும் கர்நாடக சிறைத்துறை கடிதம் எழுதியிருக்கிறது.

ஆக, சசிகலாவின் பரோல் விடுதலை இப்போது தமிழக அரசின் கைகளில்! நடராஜனின் மருத்துவ விவகாரங்களைப் பொறுத்தவரை, அதை தமிழக அரசு மறுத்து கூற வாய்ப்பில்லை. காரணம், தமிழக அரசு மறுக்க முடியாத அளவுக்கு மருத்துவ ஆவணங்கள் இருக்கின்றன.

ஆனால் சசிகலாவின் தமிழக வருகைக்கு தமிழக போலீஸ் ‘கிரீன் சிக்னல்’ கொடுக்குமா? என்கிற கேள்விதான் இப்போது பிரதானமாக இருக்கிறது. தனிப்பட்ட முறையில் தனது கணவரை சந்திக்க வரும் சசிகலாவை தடுக்க முயற்சிப்பது சரியல்ல என்பதே தமிழக அமைச்சர்கள் பெரும்பான்மையினரின் கருத்தாக இருக்கிறது.

ஆனால் அப்படி தமிழக போலீஸ் கிரீன் சிக்னல் கொடுத்தால், ‘இந்த அரசு சசிகலாவுக்கு ஆதரவாக இன்னும் தொடர்வதாக’ அதிமுக தரப்பிலேயே சிலர் குமுற ஆரம்பிக்கலாம் என்கிற கருத்தும் இருக்கிறது. இதுதான் இந்த விவகாரத்தில் தமிழக அரசுக்கு இருக்கும் ஒரே சிக்கல்! இதில் தமிழக அரசு எடுக்கவிருக்கும் முடிவு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இது குறித்து கர்நாடக சிறைத்துறை அதிகாரி சோமசேகரன் இன்று நிருபர்களிடம் பேசுகையில், ‘உரிய ஆவணங்களை இணைத்து சசிகலா தரப்பில் மீண்டும் பரோல் விண்ணப்பம் கொடுத்திருக்கிறார்கள். அது பரிசீலனையில் இருக்கிறது. சசிகலாவை பரோலில் விடுவிப்பதால் ஏற்படும் விளைவுகள் குறித்து தமிழக போலீஸின் கருத்தைக் கேட்டு மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறோம். தமிழக போலீஸ் கருத்து வந்து சேர்ந்ததும், சசிகலாவுக்கு பரோல் கொடுப்பது குறித்தும் எத்தனை நாட்கள் பரோல் கொடுப்பது என்பது குறித்தும் முடிவு செய்யப்படும்’ என கூறினார்.

இதையும் தாண்டி, சசிகலா பரோல் பெற்று வருவார் என சசிகலா ஆதரவாளர்கள் எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள்.

 

M Natarajan Vk Sasikala
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment