விவசாயிகளின் பொருட்களை ஜப்தி செய்யக் கூடாது: உச்ச நீதிமன்றம்

விவசாயிகளிடம் கடன் வசூல் நடவடிக்கையின் போது அவர்களது பொருட்களை ஜப்தி செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விவசாயிகளிடம் கடன் வசூல் நடவடிக்கையின் போது அவர்களது பொருட்களை ஜப்தி செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுவரை காணப்படாத வறட்சியில் சிக்கி தமிழகமே பாலைவனம் போலாகி விட்டது. விளைச்சல் பொய்த்துப் போவது, விளைச்சல் நன்றாக இருந்தாலும் சரியான விலை கிடைக்காததால் வறுமைக்கு ஆளாவது உள்ளிட்ட காரணங்களால் விவசாய தற்கொலைகள் நிகழ்ந்து கொண்டிருகின்றன.

வறட்சி காரணமாக கருகிய பயிரை காண மனமில்லாமல், வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாமல் மாரடைப்பு வந்தும், விஷம் குடித்தும் தங்களை மாய்த்துக் கொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போகிறது.

விவசாய சாகுபடி பொய்த்துப் போய், ஏறத்தாழ 200-க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் அதிர்ச்சியால் மாரடைப்பு ஏற்பட்டும், தற்கொலை செய்து கொண்டும் உயிரிழந்துள்ளார்கள். ஆனால், வறட்சி காரணமாக விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளவில்லை என தமிழக அரசு அண்மையில் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. “மற்ற மாநிலங்களில் வேறு ஏதேனும் காரணமாக விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டாலும், அவர்கள் வறட்சி காரணமாகத் தான் தற்கொலை செய்து கொண்டார்கள் என அம்மாநில அரசுகள் கூறி வரும் நிலையில், தமிழக அரசின் இது போன்ற கருத்தை தெரிவிக்கிறது” என பல்வேறு தரப்பினரும் விமர்சித்தனர்.

விவசாயிகள் வாங்கிய கடனை செலுத்த முடியாமல் தற்கொலை செய்து வரும் சூழலில், அவர்களிடம் கடனை வசூல் செய்கிறோம் என்ற பெயரில் பொருட்களை அதிகாரிகள் ஜப்தி செய்யும் நடவடிக்கையும் அதிகரித்து வருகிறது.

உதாரணமாக கடந்த ஆண்டில், தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த பாலன், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த அழகர் ஆகியோருக்கு நடைபெற்ற சம்பவங்களை குறிப்பிடலாம். அதிகாரிகளும், காவல் துறையினரும் சேர்ந்து விவசாயி பாலனிடமிருந்து டிராக்டரை வலுக்கட்டாயமாக பறிமுதல் செய்த வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த அதிர்ச்சி அடங்குவதற்குள்ளாக, அதே கடன் தவணை தாமதத்திற்காக டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டதால் விவசாயி அழகர் தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில், தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலையை தடுக்க, வங்கிகள் விவசாயக் கடனை தள்ளுபடி செய்ய உத்தரவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், கடன் வசூல் நடவடிக்கையின் போது விவசாய பொருட்களை ஜப்தி செய்யக் கூடாது என உத்தரவிட்டது. மேலும், கடன்களை வசூலிக்கும் போது கண்டிப்புடன் நடக்கக்கூடாது. விவசாயிகள் நலன் சார்ந்த பிரச்னைகளில் முன்னெச்சரிக்கையாக செயல்பட வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

×Close
×Close