Advertisment

சிவாஜி சிலையை மெரினா கடற்கரையிலேயே நிறுவ வேண்டும்: ஜி.கே வாசன்

சிவாஜி சிலையை சென்னை மெரினா கடற்கரையிலே நிறுவுவதற்கான உயர்பணிகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

author-image
Ganesh Raj
புதுப்பிக்கப்பட்டது
New Update
GK Vasan, Sivaji Statute, Actor Sivaji, Chennai Marina, TMC, GK Vasan,

சிவாஜி சிலையை இந்த வருட இறுதிக்குள் சென்னை மெரினா கடற்கரையிலே நிறுவுவதற்கான உயர்பணிகளை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.என தமாக தலைவர் ஜி.கே வாசன் வலியுறுத்தியுள்ளார்.

Advertisment

இது தொடர்பாக ஜி.கே வாசன் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் திறக்கும் நன்னாளிலே அவரது சிலை கடற்கரை சாலையிலே மீண்டும் நிறுவப்படும் என்பதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை தேதியுடன் வெளியிட வேண்டும்.

தமிழகத்தில் பிறந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நாடகத்திலும், சினிமாவிலும் திறம்பட நடித்தவர். இவர் தன் நடிப்பாற்றலால் கலைத்துறையையும், ரசிகர்களையும் தன் வசப்படுத்தியவர். திரையுலகில் தன்னிகரற்ற நடிகராக விளங்கிய சிவாஜி கணேசன் திரைத்துறையின் மூலம் இந்தியாவின் புகழை உலகிற்கு உணர்த்தியவர்.

திரைப்படங்களில் அவர் ஏற்று நடித்த பலதரப்பட்ட கதாபாத்திரங்களில் தனி முத்திரைப் பதித்தவர். இன்றைக்கும் கலைத்துறையிலே நடித்துக்கொண்டிருக்கின்ற அத்துனை பேருக்கும் சிவாஜி கணேசன் ஏதாவது ஒரு வகையிலே ஒரு ரோல்மாடலாக - முன்மாதிரியாக இருக்கிறார் என்பது நிசப்தமான உண்மை.

சிவாஜி கணேசன் தேசபக்தியுள்ள ஒரு இந்தியன் என்பதற்காகவும், நாட்டின் நல்ல பிரஜை என்பதற்காகவும் திரைத்துறையில் சிறந்து விளங்கியவர் என்பதற்காகவும் இவருக்கு மத்திய அரசு பத்ம ஸ்ரீ மற்றும் பத்ம பூஷன் ஆகிய விருதுகள் வழங்கி அங்கீகரித்தது. இந்திய அரசின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே எனும் விருது பெற்ற பெருமைக்குரியவர் இவர். மேலும் பிரான்ஸ் நாடு இவருக்கு செவாலியே விருது வழங்கி கவுரவப்படுத்தியது.

தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்று, பாராட்டப்பட்ட கலையுலக ஜாம்பவான் இவர். பல பல்கலைக்கழகங்கள் அவர்களுக்கு டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தது. தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகளும் அவர்களுக்கு போற்றுதலுக்குரிய பாராட்டுக்களை வழங்கியது.

சிவாஜி கணேசன் தேசிய எண்ணம் கொண்டவர். பெருந்தலைவர் காமராஜரை தலைவராக ஏற்று செயல்பட்டவர். அப்படிப்பட்ட ஒர் உன்னத தலைவர், சிறந்த நடிகர் சிவாஜி கணேசனுக்கு தமிழக அரசு மணிமண்டபத்தை எழுப்பி, அதனை சிவாஜி கணேசனின் 90-வது பிறந்த நாளான அக்டோபர் 1, ஞாயிற்றுக்கிழமை அன்று அதிகாரபூர்வமாக திறக்கப்படுகிறது.

எனவே சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபத்தை திறக்கும் மரியாதைக்குரியவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் பாக்கியசாலிகள் மட்டுமல்ல கலைத்துறையின் வரலாற்றில் இடம்பெறப் போகும் வாய்ப்பையும் பெறுகிறார்கள்.

நடிகர் திலகம் நடிப்புலகில் பல்கலைக்கழகம். எனவே சென்னை மெரினா கடற்கரையிலே இருந்து எடுக்கப்பட்ட சிவாஜி கணேசனின் திரு உருவச்சிலையை அவரது புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையிலே அதே கடற்கரையிலேயே அரசியல் தலைவர்கள், அறிஞர்கள், புலவர்கள், ஆன்மீகவாதிகள் ஆகியோருக்கு திரு உருவச்சிலையை அமைத்திருக்கும் இடத்தின் அருகிலேயே ஒரு மையப்பகுதியை தேர்ந்தெடுத்து மீண்டும் சிவாஜி கணேசனின் திரு உருவச்சிலையை நிறுவுவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை தமிழக அரசு இந்த மணிமண்டபம் திறக்கும் நன்னாளிலே அறிவிக்க வேண்டும்.

மேலும் சிவாஜி சிலையை இந்த வருட இறுதிக்குள் சென்னை மெரினா கடற்கரையிலே நிறுவுவதற்கான உயர்பணிகளை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும். இது தமிழக அரசு தமிழக கலைத்துறைக்கு செய்யும் போற்றுதலுக்குரிய பணியாக அமையும்.

இவ்வாறு ஜி. கே வாசன் தெரிவித்துள்ளார்.

Tmc Gk Vasan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment