சாஃப்ட்வேர் நிறுவன ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பு இல்லை : கனிமொழி எம்பி வேதனை

நாவலூர் அருகே வேலைக்குப் போய் விட்டு திரும்பும் ஒரு பெண், பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். பணி பாதுகாப்பு மட்டுமல்ல உயிர் பாதுகாப்பும் இல்லை.

சாஃப்ட்வேர் நிறுவன ஊழியர்கள் மட்டுமல்லாமல் எல்லா துறை பணியாளர்கள் பணி பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறார்கள் என்று திமுக எம்பி கனிமொழி பேசினார்.

பஸ் கட்டண உயர்வு கண்டித்து திமுக சார்பில் கடலூரில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில், திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அவரின் உரை பின்வருமாறு :

’’நம் பிள்ளைகள் படிக்க வேண்டும் என்பதில் அக்கறையோடு இருந்தார்கள். அனைவரும் ஒரே முறையில் கல்வி பெற வேண்டும் என்பதற்காகத்தான் சமச்சீர் கல்வியை அறிமுகப்படுத்தினார். ஆனால் அதை மேன்மைப்படுத்தவோ, கல்வித் தரத்தை உயர்த்தவோ, இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கல்வியை முடித்தவுடன் ஒரு மாணவனுக்கு வேலை கிடைக்கக் கூடிய கல்வித் திட்டத்தையா நாம் வகுத்திருக்கிறோம்?

வேலை வாய்ப்புகள் உருவாக தொழிற்சாலைகள் வேண்டுமா இல்லையா? ஆனால் எத்தனை தொழிற்சாலைகளை இந்த அரசு புதிதாக உருவாக்கியிருக்கிறது? திமுக ஆட்சியை விட, இந்த ஆட்சியில் அந்நிய நேரடி முதலீடு என்பது 51 சதவிகிதம் குறைந்துள்ளது. முதலீடு இல்லாமல் எப்படி தொழில் வளம் பெருகும்? இப்படி முதலீடோ, தொழிற்சாலைகளோ இல்லையென்றால், படிப்பை முடித்த நம் பிள்ளைகள் எங்கே செல்வார்கள்? மத்திய அரசு கூறுவது போல அவர்கள் பக்கோடாதான் போட முடியும்.

தொழில்வளர்ச்சிதான் இல்லை. இருக்கும் தொழில்களில் உள்ள தொழிலாளர்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள்? ஐடி எனப்படும் தகவல் தொழில்நுட்பத் துறையை எடுத்துக் கொள்வோம். நமது குடும்பங்களிலேயே உள்ள பல பிள்ளைகள் ஐடி நிறுவனங்களிலே வேலை பார்த்து வருகிறார்கள். அவர்கள் 35 வயதை எட்டியதும், வேலைகளில் இருந்து நீக்கப்படுகிறார்கள். இவர்களிலே பலர், வீட்டுக் கடன் வாங்கியுள்ளார்கள். பலர் வாகனக் கடன் வாங்கியுள்ளார்கள்.

சாஃப்ட்வேர் நிறுவனங்களிலே பணியாற்றும் அந்த இளைஞர்கள் சக்கையாக கசக்கிப் பிழியப்பட்டு, தங்களின் இளமைக்காலம் முடியும் அந்தத் தருவாயில் அவர்கள் நீக்கப்படுகிறார்கள். வேலையில்லாமல், வாங்கிய கடனையும் கட்ட முடியாமல் திணறுகிறார்கள். குடும்பம் நடத்த முடியாமல் தடுமாறுகிறார்கள். சிலர் தற்கொலைக்கு வரை சென்றுவிடுகிறார்கள். அந்த இளைஞர்களின் பணிப் பாதுகாப்புக்கு இந்த அரசு என்ன செய்துள்ளது?

இந்தத் துறை மட்டுமல்லாமல், பல்வேறு துறையைச் சேர்ந்த தொழிலாளர்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள். இந்தியாவில் பல பகுதிகளைச் சேர்ந்த தொழிலாளர்கள், எவ்வித பணிப் பாதுகாப்பும் இல்லாமல், உத்தரவாதம் இல்லாமல் கடுமையான நெருக்கடியை சந்தித்து வருகிறார்கள். அரசு பொதுத் துறை நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் கூட, பணிப் பாதுகாப்பு இல்லாத சூழலில் இருக்கிறார்கள். ஏனென்றால், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் பணியை மத்திய அரசு தீவிரமாக செய்து வருகிறது. தொழிலாளர்களுக்கோ, விவசாயிகளுக்கோ, மாணவர்களுக்கோ யாருக்கும் பாதுகாப்பில்லாத ஒரு சூழல் தற்போது நிலவி வருகிறது.

தற்போது சமூக வலைத்தளத்தில் இரு சம்பவங்களில் பெண்களிடம் நடந்த சங்கிலிப் பறிப்பு சம்பவத்தின் வீடியோ காட்சிகளை பார்த்திருப்பீர்கள். செயின் பறிக்கப்படுகையில் அது அறுபடாததால், அந்தப் பெண்கள் கீழே விழுகிறார்கள். ஈவு இரக்கமேயின்றி, அந்தப் பெண்களை அப்படியே இழுத்துச் செல்லும் காட்சிகளை நாம் கண்டோம். உயிருக்கு ஆபத்தான நிலையில் அந்தப் பெண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இன்று நாவலூர் அருகே வேலைக்குப் போய் விட்டு திரும்பும் ஒரு பெண், பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு, இரவு முழுவதும் சாலையோரம் கிடந்து, காலையில், சாலையோரம் சென்றவர்கள் பார்த்து, அவளை மருத்துவமனையில் சேர்த்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இது போல தொடர்ந்து நடைபெறும் சம்பவங்கள் பெண்கள் எப்படி பாதுகாப்பற்ற நிலையில், ஆபத்துக்களை சந்தித்து வருகிறார்கள் என்பதையே நமக்கு உணர்த்துகிறது.

இது போல சமூகத்தில் ஏறக்குறைய அனைத்து பிரிவினரும் ஆபத்துக்களை சந்தித்து வருகின்றனர். ஆனால் இந்த அரசாங்கமும், அதன் முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்வதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்கள்.” என்று கனிமொழி பேசினார்.

×Close
×Close