Advertisment

'அரசியல் களத்தில் 4 நடிகர்கள்… காவி(ய) மேடைக் கலைகள்..!' தமிழ்த் தேசியவாதிகளுக்கு சுப. உதயகுமாரன் திறந்த மடல்

அணு உலைக்கு எதிரான செயல்பாட்டாளர் சுப. உதயகுமாரன், தமிழ்த் தேசிய மூத்த தலைவர்களான பழ. நெடுமாறன், பெ. மணியரசன் உள்ளிட்ட அனைத்து தமிழ்த் தேசியவாதிகளுக்கு திறந்த மடல் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

author-image
WebDesk
New Update
SP Udhayakumaran open letter to all Tamil Nationalist, SP Udhayakumaran open letter, four actors in politics, Suba Udhayakumaran, சுப உதயகுமாரன், அரசியல் களத்தில் 4 நடிகர்கள், காவி மேடைக் கலைகள், தமிழ்த் தேசியவாதிகளுக்கு சுப. உதயகுமாரன் திறந்த மடல், tamilnadu politics, SP Udhyakumaran, Tamil Nationalists, P Maniyarasan, Pazha Nedumaran

அணு உலைக்கு எதிரான செயல்பாட்டாளர் சுப. உதயகுமாரன், தமிழக அரசியல் களத்தில் 4 நடிகர்கள், காவி(ய) மேடைக் கலைகள் அரங்கேறும் சூழ்நிலையில், தமிழ்த் தேசிய இயக்கங்கள் ஒன்றினைந்து செயல்பட தமிழ்த்தேசியத் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்து திறந்த மடல் எழுதியுள்ளார்.

Advertisment

சுப. உதயகுமாரன் தமிழ்த் தேசிய மூத்த தலைவர்களான பழ. நெடுமாறன், பெ. மணியரசன் உள்ளிட்ட அனைத்து தமிழ்த் தேசியவாதிகளுக்கு எழுதியுள்ள திறந்த மடலில் கூறியிருப்பதாவது:

நாள்: டிசம்பர் 15, 2022

அனுப்புனர்: சுப. உதயகுமாரன்

பெறுநர்: மூத்த தலைவர்களான ஐயா பழ. நெடுமாறன் அவர்கள், ஐயா பெ. மணியரசன் அவர்கள் உள்ளிட்ட அனைத்து தமிழ்த் தேசியவாதிகள்

பொருள்: தமிழ்த் தேசியவாதிகளின் ஒருங்கிணைப்பு தொடர்பாக.

வணக்கம். தமிழ்நாட்டு அரசியல் தலைகீழாகப் போய்க்கொண்டிருப்பது பற்றி நான் சொல்லி தாங்கள் அறிய வேண்டியதில்லை.

ஒரு பக்கம், ஒரு நடிகர், ‘திராவிட மாடல்’ அரசின் அடுத்தத் தலைமுறைத் தலைவர், நல்ல நாள் பார்த்து பதவியேற்று, நல்ல நேரம் பார்த்து கோப்பில் கையெழுத்திட்டு, பகுத்தறிவு, சுயமரியாதை, மூடநம்பிக்கை ஒழிப்பு போன்ற சித்தாந்தங்களை அடுத்த நிலைக்குக் கொண்டு போகிறார். அவருக்கு “தளபதி மகனே வருக, தமிழர்க்கு மேன்மை தருக” என்று சிலர் கட்டியம் கூறி வரவேற்கின்றனர்.

இன்னொரு பக்கம், இன்னொரு நடிகர் தன்னுடைய மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் கலந்தாலோசனையில் ஈடுபட்டு கமுக்கமாக காய் நகர்த்திக் கொண்டிருக்கிறார். வேறொரு வயதான நடிகரும் எதிர்வரும் சனவரி மாதம் மீண்டும் கட்சித் தொடங்கப் போவதாக உறுதிப்படுத்தப்படாதச் செய்திகள் உலா வருகின்றன.

மற்றொரு பக்கம் மற்றொரு நடிகர் தமிழ்த் தேசியம் எனும் விழுமியத்தையே அவர்தான் கண்டுபிடித்ததாகக் கூறிக்கொண்டு, அவரே, அவர் மட்டுமே, எட்டுக் கோடி தமிழர்களையும் சினிமா கதாநாயகன் பாணியில் தன்னந்தனியாக விடுதலைக்கு இட்டுச்செல்வேன் என்று வீரவசனம் பேசிக் கொண்டிருக்கிறார். குருக்களும், மூர்த்திகளும், உயர் துறைகளும் எழுதித் தரும் கதை-வசனத்தின் படி அவரின் படபிடிப்பு பிரமாதமாக நடந்து கொண்டிருக்கிறது.

‘நேர் நின்று மோத முடியாதவன், ஒளிந்து நின்று ஒடுக்கப் பார்ப்பான்’ என்பது போல, பாசிச சக்திகள் மேற்படி நடிகர்களில் யார் மீது சவாரி செய்தால், தமிழினத்தை எளிதாக, விரைவாக அடிமைப்படுத்தலாம் என்று கணக்குப் போட்டுக் கொண்டிருக்கின்றனர். தமிழ்ப்பாச நாடகம், தமிழ்நேய நடிப்பு, திருக்குறள் கூத்து என்று ஏராளமான காவி(ய) மேடைக்கலைகள் தினமும் அரங்கேற்றப்படுகின்றன.

திராவிட சினிமாக்காரர்கள் கைகளில் சிக்கிச் சீரழிந்து கிடக்கும் தமிழர் நாட்டை மீண்டும் சில சினிமா நடிகர்களே வந்து சினிமாப் பாணியில் சீரமைக்க வேண்டியத் தேவையில்லை. சினிமாப் புகழ், சினிமாப் பணம், தனிநபர் துதி, தில்லி ஆசீர்வாதம் என்றியங்கும் இவர்களுக்கெல்லாம் குறிக்கோள் அரசியல் அதிகாரம் பெறுவது மட்டுமேயன்றி, தமிழ் நாட்டுக்கும், தமிழருக்கும் கண்ணியமான, தன்னாட்சியோடு கூடிய வருங்காலத்தையும், நல்வாழ்வையும் அமைத்துத் தருவது அல்ல. அம்மாதிரி நோக்கங்கள் ஏதேனும் இருந்திருந்தால், அவர்களின் பேச்சுக்களில், செயல்பாடுகளில் சற்றேனும் சனநாயகத்தன்மை, திறந்தவெளித்தன்மை, கருத்துப்பரிமாற்றம் இருந்திருக்கும்.

இந்த நிலையில் வெறுமனே இருளையேப் பழித்துக் கொண்டிருப்பதற்கு பதிலாக, ஒரு சிறு மெழுகுவர்த்தியையாவது நாம் அனைவருமாக சேர்ந்து ஏற்றலாமே? தமிழகம் முழுக்க ஆங்காங்கே சிறு சிறு குழுக்களாக தனித்தனியாக இயங்கிக் கொண்டிருக்கும் அனைத்து தமிழ்த்தேசியக் குழுக்களையும், இயக்கங்களையும், ஆளுமைகளையும், களப்பணியாளர்களையும் ஒன்று திரட்டி, ஒரு நாள் ஓரிடத்தில் சந்திக்கச் செய்து, ஒரு பொது அடிப்படை வேலைத்திட்டத்தை உருவாக்கி, ஒன்றாய் நின்று களமாட உதவலாமே? இப்போது இல்லையென்றால், இனி எப்போது இதைச் செய்வது? நாம் இல்லையென்றால் வேறு யார் இதைச் செய்வார்கள்?

தயவுசெய்து இது குறித்து தாங்கள் சிந்தித்து, உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென்று அன்போடும், பணிவோடும் கேட்டுக் கொள்கிறேன். நன்றி!” என்று சுப. உதயகுமாரன் அழைப்பு விடுத்துள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Tamilnadu Suba Udayakumaran
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment