வெளி மாநிலங்களில் ஒதுங்கிய மீனவர்களை மீட்க பொறுப்பு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் : முதல்வர் உத்தரவு

வெளி மாநிலங்களில் ஒதுங்கிய தமிழக மீனவர்களை அழைத்து வர ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்து தமிழ்நாடு முதல் அமைச்சர் எடப்பாடி க.பழனிசாமி உத்தரவிட்டார்.

வெளி மாநிலங்களில் ஒதுங்கிய தமிழக மீனவர்களை அழைத்து வர ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்து தமிழ்நாடு முதல் அமைச்சர் எடப்பாடி க.பழனிசாமி உத்தரவிட்டார்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:

‘ஒகி’ புயலினால் பாதிப்படைந்த கன்னியாகுமரி மாவட்டத்தில் உடனடியாக மீட்பு, நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டு, அப்பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

முக்கியமாக, காணாமல் போன மீனவர்களை மீட்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை ஆய்வு செய்து, அதை மேலும் முடுக்கிவிடுவதற்காக 6-ந் தேதியன்று (நேற்று) கடற்படை, விமானப்படை மற்றும் இந்திய கடலோர காவல் படை அதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விரிவான ஆலோசனை மேற்கொண்டார்.

மீன்பிடிக்கச் சென்று ஒகி புயலினால் கரை திரும்ப முடியாமல் உள்ள மீனவர்களை மீட்க தமிழ்நாடு அரசு, இந்திய கடற்படை, இந்திய விமானப்படை மற்றும் இந்திய கடலோர காவல் படையினருடன் இணைந்து எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக பெரும்பாலான மீனவர்கள் மீட்கப்பட்டு அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஆழ்கடல் மீன்பிடிப்பிற்கு சென்ற மீனவர்களில் சிலர் இன்னமும் கரை திரும்பவில்லை என்பது மாவட்ட நிர்வாகம் செய்து வருகிற கணக்கெடுப்பின்போது மீனவர்களின் உறவினர்கள் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த மீனவர்கள் அனைவரையும் பத்திரமாக மீட்பதற்கான தீவிர தேடுதல் மற்றும் மீட்புப் பணியை கடலோர காவல் படையும், இந்திய விமானப்படையும், இந்திய கடற்படையும் கூட்டாக இணைந்து அரபிக்கடல் பகுதியில், அனைத்து மீனவர்களும் மீட்கப்படும் வரையிலும் தீவிர மற்றும் தொடர் தேடுதல் மேற்கொள்ள வேண்டும் என்று முதல்-அமைச்சர் வலியுறுத்தினார்.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த காணாமல் போன நாட்டுப் படகு மீனவர்களை கண்டுபிடித்து மீட்பதற்கு தூத்துக்குடியில் அமைந்துள்ள கடலோர காவல் படையினர், கன்னியாகுமரி மாவட்ட கடலோர பகுதி முழுவதும், வான் வழி மற்றும் கடல் வழியாக தீவிர மற்றும் தொடர் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டது.

காணாமல் போன மீனவர்களின் குடும்பத்தினருக்கு தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் குறித்து உடனடி தகவல் வழங்க கன்னியாகுமரி மாவட்டம், கிராத்தூர் கிராமத்தில் தமிழ்நாடு மீன் வளத்துறை உதவி மையம் ஒன்றை அமைத்துள்ளது.

இம்மையத்துடன் ஒருங்கிணைந்து இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படை உதவி மையம் ஒன்றை, தமிழ் பேசும் அலுவலர்களைக் கொண்டு அமைத்து, தேடுதல் மற்றும் மீட்புப்பணிகள் குறித்த முன்னேற்ற விவரங்களை மீனவர்களின் குடும்பத்தினருக்கு அவ்வப்போது தெரிவிக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

சென்னையில் செயல்பட்டு வரும் கிழக்கு பிராந்திய இந்திய கடலோர காவல் படை மற்றும் இந்திய கடற்படை நிலையங்கள், தெற்கு மற்றும் மேற்கு பிராந்திய நிலையங்களுடன் ஒருங்கிணைந்து தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.

மேலும், இந்த மீனவர்களுக்கு தேவையான உணவு, மருத்துவ உதவி மற்றும் எரி எண்ணெய்யை இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல் படையினர் உடனடியாக வழங்க வேண்டும் என்றும் முதல்-அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களின் நீண்ட நாளைய கோரிக்கைகளான பிரத்யேக கடலோர காவல் படை நிலையம் ஒன்றை ஹெலிகாப்டர்கள் மற்றும் இறங்குதள வசதிகளுடன் கன்னியாகுமரி மாவட்டத்தில் விரைவில் நிறுவி, தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொள்ள துரித நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டார்.

அண்டை மாநிலங்களில் கரை சேர்ந்துள்ள மீனவர்கள் பத்திரமாக தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்புவதற்கு ஏதுவாக விசைப்படகு ஒன்றுக்கு 750 லிட்டர் டீசல் எரி எண்ணையும், நாட்டுப்படகு ஒன்றுக்கு 200 லிட்டர் எரி எண்ணையும், உணவுப்பொருட்கள் வாங்குவதற்காக படகிலுள்ள மீனவர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் வீதம் சிறப்பினமாக வழங்க வேண்டும் என்றும் முதல்-அமைச்சர் உத்தரவிட்டார்.

மேலும், மீனவர்களை அவர்களது படகுகளுடன் அவரவர் சொந்த ஊர்களுக்கு சம்பந்தப்பட்ட மாநில அரசு உதவியுடன் கொண்டுவந்து சேர்க்கும் பணியை மேற்கொள்ள ஏதுவாக, மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் டாக்டர் சந்தோஷ் பாபுவை கர்நாடகா மாநிலத்திற்கும், ஷம்பு கல்லோலிகரை மராட்டிய மாநிலத்துக்கும், சந்திரகாந்த் பி.காம்ளேயை குஜராத்துக்கும், அருண் ராயை கேரள மாநிலத்திற்கும், ஏ.ஜான் லூயிசை லட்சத்தீவு யூனியன் பிரதேசத்திற்கும் அனுப்பும்படி முதல்-அமைச்சர் ஆணையிட்டார்.

இந்தக்கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மீன்வளம் மற்றும் பணியாளர் நிர்வாகச் சீர்திருத்தத்துறை அமைச்சர் டி.ஜெயகுமார், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை மற்றும் நிதித்துறை (கூடுதல் பொறுப்பு) கூடுதல் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி, வருவாய் நிர்வாக ஆணையர் கொ.சத்யகோபால், பொதுத்துறை (பொறுப்பு) செயலாளர் பி.செந்தில்குமார், பேரிடர் மேலாண்மை ஆணையர் ராஜேந்திர ரத்னூ மற்றும் பொதுத்துறை கூடுதல் செயலாளர் மைதிலி கே.ராஜேந்திரன், இந்திய கடற்படையின் (தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி) ரியர் அட்மிரல் அலோக் பட்நாகர், இந்திய விமானப்படையின் ஸ்டேஷன் கமாண்டர் சுந்தர் மணி, கிழக்கு பிராந்திய கடலோர காவல் படையின் ஐ.ஜி. ராஜன் பர்கோத்ரா, இந்திய கடற்படை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் அதிகாரி ஷ்யாம் சுந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

×Close
×Close