இலங்கை கடற்படையின் மனித உரிமை மீறல் : சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர அனுமதி கேட்ட வழக்குத் தள்ளுபடி!

இலங்கை கடற்படையின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தை நாடக்கோரி தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இலங்கை கடற்படையின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தை நாடக்கோரி தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை பாதுகாக்க 1984ம் ஆண்டு கச்சத்தீவு ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் இதற்கு முரணாக இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்தும் தாக்குதல்களையும், மனித உரிமை மீறல்களையும் தடுக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை என பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 34 ஆண்டுகளாக மத்திய வெளியுறவு துறை அமைச்சகம், மனித உரிமை மீறல்களை தடுக்க தவறியுள்ளதால் இந்த விவகாரத்தை சர்வதேச நீதிமன்றத்துக்கு கொண்டு செல்ல மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டுமென ஃபிஷர்மேன் கேர் அமைப்பின் தலைவர் பீட்டர்ராயன் கடந்த ஆண்டு ஜூன் மாதம் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில், மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் இலங்கைக்கான துணை செயலாளர் பினோய் ஜார்ஜ் தாக்கல் செய்த பதில் மனுவில், சர்வதேச நீதிமன்ற சட்டத்தின்படி இரு நாடுகள் ஏற்றுக் கொள்ளும் பட்சத்திலோ அல்லது இரு நாடுகளுக்கு பிரச்சினை ஏற்பட்டால் சர்வதேச நீதிமன்றத்தை நாடலாம் என ஒப்பந்தம் இருந்தால் மட்டுமே சர்வதேச நீதிமன்றத்தை நாட முடியும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பிலோ, மத்திய – மாநில அரசுகள் தரப்பிலோ யாரும் ஆஜராகாததால், மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

×Close
×Close