போலீஸ் என்னை நோக்கியும் சுடட்டும்; தாங்கிக்கொள்ள நான் தயார் : ஸ்டாலின் கொந்தளிப்பு

சென்னை தலைமை செயலகத்தில் அலுவல் ஆய்வு கூட்டத்தை புறக்கணித்த திமுக செயல் தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்துப் பேட்டியளித்தார்.

தமிழக சட்டப்பேரவை வரும் 29ம் தேதி கூட உள்ள நிலையில் இன்று அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தை திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் புறக்கணிப்பதாக கூறி வெளியேறினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து திமுக செயல் தலைவர் பேட்டியளித்தார். அப்பேட்டியில்,

இன்று நடைபெற இருக்கும் அலுவல் கூட்டத்தை திமுக மற்றும் காங்கிரஸ் புறக்கணித்து வெளியேற்றம் செய்துள்ளோம். ஏனென்றால், தூத்துக்குடியில் அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது. 12பேர் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் ஒப்புக்காக மாவட்ட ஆட்சியர் மற்றும் முக்கிய பொறுப்பில் உள்ளவர்களை மட்டும் தமிழக பணியிடம் மாற்றம் செய்துள்ளது. அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. வெறும் பணியிடம் மாற்றம் மட்டும் செய்துள்ளது ஏற்கக் கூடியதல்ல. துப்பாக்கிச் சூட்டில் பயிற்சி எடுத்த காவலர்களை மஃப்டியில் இறக்கியுள்ளனர்.

இந்த மாநிலம் எத்தனையோ ஆட்சிகளைப் பார்த்திருக்கிறது. அப்போது கூட துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளது ஆனால் இது போன்ற துயரங்கள் நிகழ்ந்ததில்லை. தற்போதைய ஆட்சி செயலற்றுள்ளது.

முதல்வர் தனது பதவியைக் காப்பாற்றிக்கொள்ள போராடுகிறார். பலியானவர்களைப் பற்றி அவருக்குக் கவலை இல்லை. எனவே தமிழக முதல்வர், துணை முதல்வர் மற்றும் டிஜிபி ராஜேந்திரன் உடனே பதவி ராஜினாமா செய்ய வேண்டும்.” என்று கூறினார்.

பின்னர் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்ததற்கு அரசியல் தலைவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதைக் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு “எந்த வழக்குப் பதிவு செய்தாலும் எதிர்கொள்வோம். அது மட்டுமல்ல அப்பாவி மக்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியது போல் என்னை நோக்கியும் சுடட்டும். தாங்கிக்கொள்ள நான் தயார்.” என்று ஸ்டாலின் பதிலளித்தார்.

×Close
×Close