விஜயபாஸ்கர், ராமமோகனராவ் வீட்டில் நடந்தது என்ன? ஸ்டாலின் அடுக்கடுக்கான கேள்வி

தற்போது, மத்திய அரசு நடத்தி வரும் விசாரணைகள் தேவையில்லை என்று நான் கூறவில்லை. ஆனால்.....

இன்று மே 1 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு, தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின், சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்காவில் உள்ள நினைவுத் தூணிற்கு மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், “தொழிலாளர்களின் நலனுக்காக தொழிற்சங்கங்கள் மட்டுமே பாடுபடுகின்றன. விவசாயிகள் பிரச்சனைகளை தீர்ப்பதற்காகவே அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்பட்டது. விவசாய உழைப்பாளர்களை காப்பாற்ற தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறினார்.

பின், சமீப காலமாக தமிழக ஆளுங்கட்சியின் முக்கிய பிரமுகர்களின் பலரது வீடு மற்றும் அலுவலகங்களில் தொடர் சோதனைகள் நடத்தப்பட்டு வருவது குறித்து எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த ஸ்டாலின், “அமைச்சர் விஜயபாஸ்கர், ராமமோகன ராவ் வீட்டில் நடைபெற்ற சோதனைகளை அடுத்து, அதுகுறித்த விவரங்களை வெளியிடாதது ஏன்? எடுத்த நடவடிக்கைளை என்னென்ன? இந்த சோதனைகளை நடத்தியதற்கான பின்புலன் என்ன? அதில் கண்டுபிடிக்கப்பட்டது என்ன?

தற்போது, மத்திய அரசு நடத்தி வரும் விசாரணைகள் தேவையில்லை என்று நான் கூறவில்லை. ஆனால், இதுவரை நடத்திய சோதனைகளின் நிலை என்னவென்றுதான் நான் கேள்வி கேட்கிறேன். மாநில சுயாட்சி தத்துவத்தில் பா.ஜ.க தலையிடுகிறது” என குற்றம் சாட்டினார்.

முன்னதாக, மத்திய அரசைக் கண்டித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வீடியோவில், “ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளில் திமுக-வுக்கு எப்போதுமே உடன்பாடு உண்டு. ஆனால், வருமானவரித்துறை, அமலாக்கத்துறை என அனைத்துமே ஒரு கட்சியை உடைக்க முயற்சிப்பது ஏன்? அன்புநாதன் வீட்டில் சோதனை, திருப்பூரில் கண்டெய்னரில் ரூ.500 கோடி பறிமுதல், அதிமுக அரசின் மணல் ஊழல், சேகர்ரெட்டியின் மீது சிபிஐ, வருமான வரித்துறை நடத்திய சோதனைகளும் காணாமல் போயின.

ஆர்.கே நகர் இடைத் தேர்தல் சமயத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் மட்டும் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டது. அதில், வாக்காளர்களுக்கு ரூ.89 கோடி ரூபாய் வழங்க இருந்ததாக பட்டியல் கைப்பற்றப்பட்டது. அந்த பட்டியலில் இருந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் மீது சிறிய அளவிலான விசாரணையை கூட முன்னெடுக்காதது ஏன்?

தமிழகத்தில் பாஜகவை காலூன்ற வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அமைச்சர்கள் வீட்டில் சோதனை, ஐஏஎஸ் அதிகாரிகளை பீதியில் உறையவைத்தது ஏன்? தமிழக மீனவர்கள் பிரச்சனை, அண்டை மாநில நதிநீர் பிரச்சனையால் தமிழக மக்கள் பாதிப்பு உள்ளிட்ட எதிலும் மத்திய அரசு வேகம் காட்டவில்லை.

அதிமுக-வின் ஊழல் அணிகளை இணைப்பதற்காக எடுக்கக்கூடிய நடவடிக்கைகளில் ஒரு சதவீதம் கூட தமிழக மக்களின் பிரச்சனைகளை தடுக்க பாஜக தலைமையிலான மத்திய அரசு எடுக்கவில்லை. ஏன் பாதிக்கப்படுவது தமிழர்கள் என்பதால் தானா?

இவற்றையெல்லாம் பாஜக மறுக்கும் என்றால், இதுவரை அதிமுக அமைச்சர்கள் மீது நடத்தப்பட்டுள்ள சோதனைகள், அதில் கைப்பற்றப்பட்டுள்ள ஆதாரங்கள் அடிப்படையில் ஊழல் ஒழிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.

×Close
×Close