வார்டு வரையறை பணிகள் முடிக்காமல் உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியாது! - மாநில தேர்தல் ஆணையம்

அரசு அறிக்கை அளித்த பிறகு அதற்கு ஒப்புதல் அளிக்க எவ்வளவு காலம் ஆகும்?

வார்டு வரையறை பணிகள் முடிக்காமல் உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியாது என மாநில தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை கடந்தாண்டு நவம்பர் மாதம் 14 ஆம் தேதிக்குள் நடத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை அமல்படுத்த வில்லை என்றும் தேர்தல் தொடர்பான அறிவிப்புகள் மற்றும் தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் முறையாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையர் மற்றும் செயலாளர்க்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில் இது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று நீதிபதி எம். சத்யநாராயணன் சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மாநில தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.எஸ் வைத்தியநாதன் வார்டு வரையறை பணிகள் இன்னும் முடிவடையவில்லை தெரிவித்தார். வார்டு வரையறைகள் நடைபெற்று வருவதாகவும் ஊரகப் பகுதிகள் மற்றும் கிராம அளவிலான வார்டுகளை வரும் 15 ஆம் தேதிக்குள் முடிக்கபடும் எனவும் அது குறித்த விபரங்களை தமிழக அரசுக்கு தெரிவிக்கபடும் எனவும். அதேபோன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கான வார்டு வரையறைகளை ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் முடித்து அது தொடர்பான விபரங்களை தமிழக அரசிடம் அறிக்கை அளிக்கப்படும்.

அந்த அறிக்கையின் அடிப்படையில் தமிழக அரசு இட ஒதுக்கீடு உள்ளிட்டவைகள் அமல்படுத்தப்படும் அது தொடர்பான விவரங்களை அடுத்த ஆறு வாரங்களில் தமிழக அரசு பரிசீலிக்கும் எனவும், மாநில தேர்தல் ஆணையம் அளிக்கும் அறிக்கையின் தமிழக அரசு ஏற்றுக் கொண்டு ஒப்புதல் அளித்த பிறகு அடுத்த 3 மாதங்களில் தேர்தல் நடத்துவதற்கான தேர்தல் அறிவிப்பாணையை மாநில தேர்தல் ஆணையம் வெளியிடும் என வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் ஏற்கனவே நீதிமன்றம் போதிய கால நிர்ணயம் செய்து அதற்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என அறிவித்து இருந்தது ஆனால் மாநிலத் தேர்தல் ஆணையத்தின் இந்த வாத்த்தை பார்த்தால் 2019 ஆம் ஆண்டு கூட தேர்தலை நடத்தி முடிக்க முடிந்தமாட்டார்கள் என தெரிகிறது என்று கருத்து தெரிவித்தனர்.

வார்டு மறுவரையறை செய்யாமல் தேர்தலை நடத்த முடியாது எனவும், 1991ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி தேர்தலை நடத்த அனுமதி அளிக்கும் சட்டப்பிரிவை அரசு ரத்து செய்துள்ளதால் தேர்தல் ஆணையத்தின் கைகள் கட்டி போடப்பட்டுள்ளதாகவும் மாநில தேர்தல் ஆணையத்தின் வழக்கறிஞர் தெரிவித்தார்.

வார்டு வரையறை பணிகள் ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் முடிக்கபடும் எனவும் வார்டு வரையறை பணிகளை முடிக்காமல் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த முடியாது என தெரிவித்தார்.

தமிழகத்தில் தற்போது உள்ளாட்சி அமைப்புகளில் எந்த வார்டும் இல்லை என்றும் வார்டு மறுவரையறை செய்யாமல் உள்ளாட்சி தேர்தலை நடத்த கூடாது என்று திமுக தான் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்துள்ளது என வாதிட்டார்.

அப்போது நீதிபதிகள் தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரத்திடம், மாநில தேர்தல் ஆணையம் அரசு அறிக்கை அளித்த பிறகு அதற்கு ஒப்புதல் அளிக்க எவ்வளவு காலம் ஆகும் என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த அரசு வழக்கறிஞர் அறிக்கை கிடைத்த பிறகு அதனை ஆய்வு செய்த பிறகே தெரிவிக்க முடியும். மாநில தேர்தல் ஆணையம் அறிக்கை அளிக்கபட்டும் என்றார்.

அப்போது திமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத மாநில தேர்தல் ஆணையத்தை கலைக்க வேண்டும் என தெரிவித்தார்.

இதனையடுத்து வழக்கின் விசாரணையை நாளைக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close