விசிக சார்பில் செப். 21-ல் மாநில சுயாட்சி மாநாடு : பினராயி விஜயன், நாராயணசாமி, மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

விசிக சார்பில் செப்.21-ல் மாநில சுயாட்சி மாநாடு நடக்கிறது. இதில் பினராயி விஜயன், நாராயணசாமி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

விசிக சார்பில் செப்.21-ல் மாநில சுயாட்சி மாநாடு நடக்கிறது. இதில் பினராயி விஜயன், நாராயணசாமி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும் ‘டிரென்டிங்’காக ஒரு பிரச்னையை கையிலெடுப்பதில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கை தேர்ந்தவர். 2016 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு, ‘தமிழகத்தில் கூட்டணி ஆட்சி’ என்கிற கோஷத்தை முன்வைத்து அணி திரட்டினார் இவர். அதுவே பின்னர் மக்கள் நலக் கூட்டணியாக பரிணாமம் பெற்றது.

தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி ஜெயிக்காவிட்டாலும், திமுக வெற்றியை தடுத்ததில் அந்த அணிக்கு முக்கிய பங்கு உண்டு. அதேபோல 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை கருத்தில்கொண்டு தமிழகத்தில் பாஜக எதிர்ப்பணியை கட்டமைப்பதில் திருமா கவனம் செலுத்தி வருகிறார்.

vck, pinarayi vijayan,  v.narayanasamy, m.k.stalin, vck conference, thol.thirumavalavan

விசிக மாநாடு அழைப்பிதழின் ஒரு பகுதி

அதன் ஒருகட்டம்தான் திராவிட இயக்கங்களில் அடிநாத கொள்கையான, ‘மாநில சுயாட்சி’யை கையிலெடுத்து திருமாவே மாநாடு நடத்துகிறார். ‘மாநில சுயாட்சி மாநாடு’ என பெயரிடப்பட்ட இந்த மாநாடு செப்டம்பர் 21-ம் தேதி மாலை 4 மணிக்கு சென்னை, ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடக்கிறது.

இந்த மாநாட்டுக்கு பாஜக எதிர்ப்பு நிலையில் உள்ள தென் மாநில முதல்வர்களை அழைக்க திருமா முடிவெடுத்தார். அதன்படி கர்நாடகா முதல்வர் சித்தராமையா, கேரள முதல்வர் பினராயி விஜயன், புதுவை முதல்வர் நாராயணசாமி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. குறிப்பாக சித்தராமையாவை பெங்களூருவுக்கு நேரடியாக சென்று அழைத்தார் திருமா.

ஆனால் சித்தராமையா வர வாய்ப்பில்லை என திருமாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அவரது சார்பில் பிரதிநிதியும் அனுப்பி வைக்கப்படவில்லை. எனவே சித்தராமையா பெயர் இல்லாமலேயே அழைப்பிதழ் தயாராகியிருக்கிறது.

மாநாட்டுக்கு திருமாவளவன் தலைமை தாங்குகிறார். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி முன்னிலை வகிக்கிறார். விசிக பொதுச்செயலாளர் சிந்தனைச்செல்வன் வரவேற்புரையாற்றுகிறார். மற்றொரு பொதுச்செயலாளர் ரவிக்குமார் நோக்கவுரையாற்ற இருக்கிறார். கேரள முதல்வர் பினராயி விஜயன் தொடக்கவுரை நிகழ்த்துகிறார். புதுவை முதல்வர் நாராயணசாமி சிறப்புரை ஆற்றுகிறார்.

இந்த மாநாட்டில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நிறைவுரையாற்றுகிறார். தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன், மமக தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள். நிறைவில் விசிக பொருளாளர் முகம்மது யூசுப் நன்றி கூறுகிறார்.

×Close
×Close