உங்களுக்கு தவறான தகவல் கொடுக்கப்பட்டுள்ளது! - ரஜினிக்கு ஸ்டெர்லைட் பதில்

ஸ்டெர்லைட் ஆலையால் கேன்சர் பாதிப்பு இல்லை என்று ரஜினிக்கு நிர்வாகம் சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாகவும், நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி அந்த ஆலையை மூடவேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்க பணிகள் நடந்ததால் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ளது. அ.குமரெட்டியாபுரம் கிராம பொதுமக்கள் இன்று 49வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்து வரும் போராட்டம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டரில் அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளார். அதில், “ஸ்டெர்லைட் தொழிற்சாலையால் மக்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்று 47 நாட்களா அவதிப்பட்டு போராடிக்கொண்டிருக்கும் போது, தொழிற்சாலை நடத்த அனுமதி கொடுத்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது புரியாத புதிராக உள்ளது” என்று பதிவிட்டு இருந்தார்.

இந்தச் சூழ்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையால் கேன்சர் பாதிப்பு இல்லை என்று ரஜினிக்கு நிர்வாகம் சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

அதில், எங்களது நிறுவனம் பற்றி உங்களுக்கு தவறான தகவல் அளிக்கப்பட்டுள்ளது. பொய்யான தகவல்களை யாரோ உங்களுக்கு அளித்துள்ளார்கள். வாழ்க்கை முறை மாற்றமே புற்றுநோய் வர காரணம் என பல்கலை ஆய்வுகள் கூறுகின்றன. காப்பரால் கேன்சர் ஏற்படும் என்பதற்கான ஆதாரம் இல்லை. ஸ்டெர்லைட் நிறுவனத்தை சுற்றியுள்ள 1 .கி.மீ .சுற்றளவில் 20 ஆண்டுகளாக மூத்த நிர்வாகிகள் வசித்து வருகின்றனர். சென்னை , காஞ்சிபுரம், கோவை,குமரி, திருவள்ளூர், கடலூர் மாவட்டத்தில்தான் புற்றுநோய் அதிகம் என்று ஆய்வுகள் கூறுகின்றன என்று அந்த நிறுவனம் பதில் அளித்துள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close