ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு : லண்டன் வரை எதிரொலித்த தூத்துக்குடி போராட்டம்

ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு எதிரான போராட்டம் வீரியம் பெற்றிருக்கிறது. தூத்துக்குடியில் மட்டுமல்லாமல், லண்டனிலும் தமிழர்கள் போராட்டம் நடத்தினர்.

ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு எதிரான போராட்டம் வீரியம் பெற்றிருக்கிறது. தூத்துக்குடியில் மட்டுமல்லாமல், லண்டனிலும் தமிழர்கள் போராட்டம் நடத்தினர்.

ஸ்டெர்லைட் தொழிற்சாலை, தூத்துக்குடி அருகே சிப்காட் வளாகத்தில் அமைந்திருக்கிறது. கடந்த 1996-ம் ஆண்டு பல்லாயிரம் கோடி முதலீட்டில் தூத்துக்குடியில் உருவான தொழிற்சாலை இது. ஸ்டெர்லைட் தொழிற்சாலையின் பிரதான பணி, தாமிரம் (காப்பர்) உற்பத்தி செய்வதுதான்.

ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் இருந்து வெளியாகும் நச்சுப் புகை தூத்துக்குடியில் சுற்றுச்சூழலை மாசு படுத்துவதாகவும், இதனால் மக்களுக்கு நோய்கள் உருவாகி வருவதாகவும் ஆரம்பம் முதல் புகார் கூறப்பட்டு வருகிறது. 1996 முதல் 2000-ம் ஆண்டு வரையிலான காலகட்டங்களில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக் குழு சார்பில் கடுமையான போராட்டங்கள் நடத்தப்பட்டன.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தொடர் போராட்டங்கள் நடத்தியதுடன், நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்து அவரே ஆஜராகி வாதாடினார். ஆனாலும் பல நெருக்கடிகளையும் எதிர்கொண்டு இன்னமும் ஸ்டெர்லைட் ஆலை நீடித்துக் கொண்டிருக்கிறது.

ஸ்டெர்லைட் விவகாரத்தில் இப்போது புதிய பிரச்னை என்னவென்றால், ஏற்கனவே அமைந்திருக்கிற அதே அளவுக்கு புதிதாகவும் ஸ்டெர்லைட் ஆலையை விரிவு செய்யும் பணிகள் நடக்கின்றன. அதாவது, தூத்துக்குடி ஆலையில் தாமிர உற்பத்தியை இரு மடங்காக அதிகரிக்கும் திட்டம் இது என கூறப்படுகிறது. இதனால் பெரும் அபாயம் சூழ்வதாக சுற்று வட்டார மக்கள் கொதிக்கிறார்கள்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராட்டம் நடத்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை மார்ச் 24-ம் தேதி அனுமதியளித்து உத்தரவிட்டது. கோர்ட் உத்தரவை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் இயக்கத்தினர் மற்றும் வியாபாரிகள், பொதுமக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன. ஷேர் ஆட்டோக்கள், மினி பஸ்களும் ஓடாததால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மாலையில் வி.வி.டி. சிக்னல் அருகில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. இதில் திரண்ட பல்லாயிரக்கணக்கான மக்கள் கூட்டம், தமிழ்நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு கொடுத்திருக்கிறார்.

தூத்துக்குடியில் வெடித்த போராட்டத்தின் தாக்கம், லண்டனிலும் எதிரொலித்தது. லண்டனில் அந்த ஆலையின் உரிமையாளரின் வீட்டின் முன்னால் தமிழர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் ஸ்டெர்லைட் ஆலையை விரிவுபடுத்த எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர். மேலும் கண்டன வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் வைத்திருந்தனர்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் அதிக கவனம் பெற்று வருவதால், போராட்டம் மேலும் வீரியம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close