ஸ்டெர்லைட் என்னிடம் டீல் பேசியது. நான் மறுத்துவிட்டேன் : பொன் ராதாகிருஷ்ணன்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தன்னிடம் பேரம் பேசியதாகவும் அதை மறுத்துவிட்டதாகவும் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையைத் தொடங்குவதற்கு முன்பே உண்ணாவிரதம் இருந்து எதிர்த்ததாகவும், இதற்காக ஸ்டெர்லைட் ஆலைப் பேசிய டீல்-ஐ தான் மறுத்துவிட்டதாகவும் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் காப்பர் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூட வேண்டும் என்று பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் பலர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தூத்துக்குடியில் நேற்று பல்வேறு திட்டங்களைத் துவக்கி வைத்த பின்னர் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஸ்டெர்லைட் ஆலைக் குறித்து அவர் கூறிய விவரங்கள் பரபரப்பை ஏற்படுத்தியது.

“ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து ஆரம்பத்தில் இருந்தே போராடியவன் நான். முந்தைய தேர்தலின் போது, ஸ்டெர்லைட் ஆலைச் சார்பில் எனக்கு பணம் கொடுத்த போது கூட அதைத் திருப்பி அனுப்பினேன். ஆனால் நான் பெட்டி வாங்கிவிட்டதாகப் பலரும் அவதூறு பரப்பி வருகிறார்கள். ஸ்டெர்லைட் ஆலை வருவதற்கு முன்பு 4 நாட்கள் நான் உண்ணாவிரதம் இருந்தேன். அன்று மக்கள் யாருமே ஆதரவு தர தயாராக இல்லை. அனைவருமே வேலைக் கிடைக்கும் என்றே நினைத்து இருந்தனர். அதனால் ஆலை எளிதாகத் துவங்கப்பட்டு விட்டது. அப்போது அந்த ஆலைத் தரப்பில் என்னிடம் டீல் பேசினர். அவர்கள் அணுகியபோதும், தேர்தல் செலவுக்காக எனக்கு பணம் கொடுத்த போதும் மறுத்தவன் நான்” என்று பொன் ராதாகிருஷ்ணன் கூறினார்.

இந்தத் திட்டத்தை அன்றைய மத்திய அரசு காங்கிரஸ் உட்பட திமுக மற்றும் அதிமுக ஒப்புக்கொண்ட பின்னரே ஆலைத் தொடங்கப்பட்டது. இன்று அந்த ஆலையை எதிர்த்து திமுக எதிர்ப்பு தெரிவிப்பது அபத்தமானது என்றும் அவர் கூறினார். மேலும் ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் மாநில அரசு கண்காணித்து வருகிறது. ஸ்டெர்லைட் ஆலையின் உண்மையான பிரச்சனை என்ன என்பதை மாநில அரசு ஆய்வு செய்து கவனத்துடன் இந்த விவகாரத்தை அணுக வேண்டும் என்றும் அவர் கூறினார்.

×Close
×Close