Advertisment

இரு கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டாலும்… பொதுத் தேர்வு எழுதிய மாணவி… ஸ்டாலின் பாராட்டு!

விபத்தில் இரு கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டாலும் பொதுத் தேர்வு எழுதிய மாணவி சிந்து அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளார். மாணவியைப் பாராட்டிய முதல்வர் ஸ்டாலின் மாணவி சிந்துவின் முழு சிகிச்சைக்கான செலவையும் அரசே ஏற்கும் என்று அறிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
12 exam, student sindhu, stalin, மாணவி சிந்து, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு, முதல்வர் ஸ்டாலின், tamilnadu

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் நேற்று எப்போதும் இல்லாத அளவில் 32,000 மாணவர்கள் ஆப்செண்ட் ஆகியிருந்த நிலையில், விபத்தில் இரு கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டாலும் பொதுத் தேர்வு எழுதிய மாணவி சிந்து அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளார். மாணவியைப் பாராட்டிய முதல்வர் மு.க. ஸ்டாலின் மாணவி சிந்துவின் முழு சிகிச்சைக்கான செலவையும் தமிழக அரசே ஏற்கும் என்று அறிவித்துள்ளார்.

Advertisment

தமிழகத்தில் நேற்று 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கியது. கொரோனா காரணமாக, இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தேர்வு எழுதுவதால், தேர்வு அச்சமாக இருந்தது என்று சில மாணவர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். எப்போதும் இல்லாத அளவில் நேற்றைய தேர்வில் 32,000 மாணவர்கள் தேர்வுக்கு வரவில்லை என்ற தகவல் வெளியானது. அதே நேரத்தில், ஒரு விபத்தில் இரு கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டாலும் தந்தையின் உதவியுடன் தேர்வு மையத்துக்கு வந்து படுத்துக்கொண்டே தேர்வு எழுதிய மாணவி சிந்து அனைவரின் கவனத்தையும் பாராட்டையும் பெற்றுள்ளார். இரு கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டாலும் ஆர்வத்துடன் தேர்வு எழுதிய மாணவி சிந்துவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பாராட்டு தெரிவித்ததோடு, மாணவியின் முழு சிகிச்சைக்கான செலவையும் தமிழக அரசே ஏற்பதாக அறிவித்துள்ளார்.

சென்னை, கோடம்பாக்கத்தைச் சேர்ந்தவர் மாணவி சிந்து. இவர் கடந்த 2020-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தோழி வீட்டின் மாடியிலிருந்து தவறுதலாக கீழே விழுந்ததில், அவருடைய இரண்டு கால் மூட்டுகளும் கடுமையாக சேதமடைந்தன. முகத்தின் தாடையின் ஒரு பகுதி முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. முன்வரிசையில் இருந்த பற்கள் முழுமையாகக் கொட்டிவிட்டன.

மாணவி சிந்து உயிருக்கு ஆபத்தான நிலையில், ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிந்துவுக்கு இரண்டு பெரிய அறுவை சிகிச்சைகள் உட்பட சுமார் 10-க்கும் மேற்பட்ட அறுவைச் சிகிச்சைகள் செய்யப்பட்டது. இதனால், மாணவி சிந்து தற்போது எழுந்து நிற்கும் நிலைக்கு வந்திருக்கிறார். ஆனாலும், மாணவி சிந்துவால் நடக்க முடியாத நிலை உள்ளது. அதே நேரத்தில் மாணவி சிந்துவால், ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருக்கவும் முடியாது.

இந்த நிலையில்தான், மாணவி சிந்து தனது 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை நேற்று எழுதினார். சிந்துவின் தந்தை தேர்வு மையத்துக்கு தூக்கிக்கொண்டு வந்தார். மாணவி சிந்துவும் ஆர்வத்துடன் தேர்வு எழுதினார். இரு கால்களிலும் எலும்பு முறிவு நீண்ட நேரம் அமர்ந்திருக்க முடியாது என்றாலும், ஆர்வத்துடன் வந்து 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவி சிந்துவை அனைவரும் பாராட்டினார்கள்.

இதுகுறித்து, சிந்துவின் தந்தை சக்தி ஊடகங்களிடம் பேசுகையில், சிந்துவிற்கு சிகிச்சை அளிக்க போதிய நிதி இல்லை. டீ விற்பனை செய்யும் தன்னால் பெருந்தொகையை ஏற்பாடு செய்ய முடியாது என்பதால் தனது மகளின் மேல் சிகிச்சைக்கு அரசு உதவ வேண்டும். எனக் கோரிக்கை விடுத்திருந்தார்.

விபத்தில் இரு கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டு நடக்க முடியாத சூழ்நிலையிலும் மாணவி சிந்து ஆர்வத்துடன் வந்து தேர்வு எழுதியதும், அவருடைய தந்தை கோரிக்கை விடுத்த செய்தியும் ஊடகங்களில் வெளியாகி முதலமைச்சரின் கவனத்தை பெற்றது.

இதையடுத்து, மாணவி சிந்துவைப் பாராட்டிய முதல்வர் மு.க. ஸ்டாலின் மாணவி சிந்துவின் மருத்துவச் செலவை தமிழக அரசே ஏற்கும் என்று அறிவித்திருக்கிறார்.

இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், “வினைத்திட்பம் என்பதொருவன் மனத்திட்பம்!” கடுமையான நெருக்கடிகளின்போதுதான் ஒருவரின் மனவுறுதி வெளிப்படும். விபத்தில் கால் எலும்புகள் முறிந்தாலும் நம்பிக்கையும் கற்கும் ஆர்வமும் முறியாமல் தேர்வுகளை எழுதிவரும் மாணவி சிந்துவைக் கண்டு பெருமிதம் கொள்கிறேன்.

தடைகள் வரினும் சோர்ந்து போகாமல் எதையும் முயன்று பார்க்கும் மனவலிமையை சிந்துவைப் பார்த்து மாணவர்கள் கைக்கொண்டு, தேர்வுகளைத் துணிவுடன் எதிர்கொள்ள வேண்டும்!

மீண்டும் வாலிபால் ஆடவேண்டும் என்ற சிந்துவின் ஆசையை நிறைவேற்றத் தேவையான மருத்துவச் செலவுகளை அரசே ஏற்கும்” என்று தெரிவித்துள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Tamilnadu Cm Mk Stalin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment