Advertisment

கோவை மாணவி தற்கொலை; நீதி கேட்டு பெற்றோர், மாணவர்கள் போராட்டம்

Students protest for justice on kovai student suicide: கோவையில் ஆசிரியரின் பாலியல் தொல்லை காரணமாக மாணவி தற்கொலை; உடலை வாங்க மறுத்து, நீதி கேட்டு பெற்றோர், உறவினர்கள், சக மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டம்

author-image
WebDesk
New Update
கோவை மாணவி தற்கொலை; நீதி கேட்டு பெற்றோர், மாணவர்கள் போராட்டம்

கோவையில் பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை செய்துக் கொண்ட பள்ளி மாணவியின் உடலை வாங்க மறுத்து, மாணவியின் மரணத்திற்கு காரணமான அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள், சக மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Advertisment

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 17 வயது மாணவி 11 ஆம் வகுப்பு படித்து வந்தார். அப்போது ஆன்லைன் வகுப்பில் இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி என்பவர் மாணவியிடம் ஆபாசமாக பேசியதாக தெரிகிறது. ஆனால் மாணவி பயத்தின் காரணமாக இதனை வெளியே சொல்லவில்லை. பின்னர் நேரடி வகுப்புகள் தொடங்கியதும், ஆசிரியரின் பாலியல் தொல்லை அதிகரித்துள்ளது. எனவே மாணவி பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார். பள்ளி நிர்வாகம் மாணவியை சமாதானம் செய்துள்ளனர். ஆனால் ஆசிரியர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில் அந்த மாணவி, தனக்கு இந்தப் பள்ளியில் தொடர்ந்து படிக்க தனக்கு விருப்பமில்லை எனக்கூறி வேறு பள்ளியில் சேர்த்து விடுமாறு தனது பெற்றோரிடம் உள்ளார். இதையடுத்து அவரது பெற்றோர் மாணவியை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள மாநகராட்சிப் பள்ளியில் கடந்த செப்டம்பர் மாதம் சேர்த்தனர்.

இந்தநிலையில் மாணவி கடந்த சில மாதங்களாக மிகுந்த மன உளைச்சலுடன் இருந்ததாகக் கூறப்படுகிறது. சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத போது மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வீட்டுக்குத் திரும்பிய பெற்றோர் தங்களது மகள் தூக்கில் தொங்குவது கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாணவி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து உக்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பின்னர், இந்த வழக்கு உக்கடம் காவல் நிலையத்தில் இருந்து கோவை மேற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது.

போலீசார் நடத்திய விசாரணையில், மாணவி தற்கொலைக்கு முன்பு எழுதி வைத்த கடிதம் ஒன்று கைப்பற்றப்பட்டதாகவும், அதில் இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி (வயது 31) உள்பட 3 பேரின் பெயர்களை மாணவி குறிப்பிட்டு இருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் மாணவியின் செல்போனை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில் ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி மாணவியிடம் வாட்ஸ்அப்பில் பாலியல் தொல்லை அளித்ததற்கான ஆதாரங்கள் மற்றும் அவருடன் பேசிய ஆடியோ ஆதாரங்களையும் போலீசார் கைப்பற்றினர்.

பின்னர் மாணவியின் தற்கொலைக்கு காரணமான ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தியை போலீசார் நேற்று (நவம்பர் 12) மாலை கைது செய்து, அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரை சிறப்பு நீதிமன்றத்தில் இரவு ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி ஆசிரியரை வருகிற 26- ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து காவல்துறையினர் ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தியை உடுமலைப்பேட்டையில் உள்ள சிறையில் அடைத்தனர். 

இதற்கிடையில், தற்கொலை செய்து கொண்ட மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு, பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளி நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி உறவினர்கள் மாணவியின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து மாணவியின் பெற்றோர் தரப்பில் கூறுகையில், மாணவிக்கு ஆசிரியர் கொடுத்த பாலியல் தொல்லை குறித்து நாங்கள் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தோம். ஆனால் அவர் அந்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அவரும் மாணவியின் தற்கொலைக்கு காரணமாக உள்ளார். அவரையும் போலீசார் கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இதனையடுத்து மேற்கு அனைத்து மகளிர் போலீசார் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் மாணவி தற்கொலை செய்வதற்கு முன்பு எழுதிய கடிதத்தில் மாணவி இதற்கு முன்பு வசித்த வீட்டின் பக்கத்து வீட்டில் வசிக்கும் முதியவர், பள்ளித் தோழியின் தந்தை  மற்றும் பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் ஆகியோரின் பெயரைக் குறிப்பிட்டு யாரையும் சும்மா விட்டுவிடக்கூடாது என குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், அந்த 2 பேரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கும் மாணவியின் தற்கொலைக்கும் காரணம் உள்ளதா? அவர்கள் மாணவிக்கு ஏதாவது பாலியல் தொல்லை கொடுத்தார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

இதற்கிடையே, மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் பள்ளித் தலைமை ஆசிரியர் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சக மாணவர்கள் உயிரிழந்த மாணவியின் வீட்டின் அருகே இன்று (நவம்பர் 13) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மாணவியின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட பள்ளியை மூட வேண்டும் என்றும் மாணவர்கள் வலியுறுத்தினர்.

இந்த நிலையில் பள்ளி தலைமையாசிரியர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Coimbatore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment