சென்னை காவல் நிலையத்தில் பரபரப்பு: சப் இன்ஸ்பெக்டர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

காவல் துறை உயர் அதிகாரிகள், சதீஷ் எழுதிய கடிதம் ஒன்றை கைப்பற்றியுள்ளனர்.

சென்னை அயனாவரம் காவல் நிலையத்தில், சப் இன்ஸ்பெக்டர் சதீஷ் குமார் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அயனாவரம் காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணிப்புரிந்து வந்தவர், சதீஷ் குமார்(33). இவரின் சொந்த ஊர், தஞ்சை மாவட்டம் மேலையூர் கிராமம். கடந்த 2011 ஆம் ஆண்டு காவல் துறையில் சேர்ந்தார். பயிற்சியில் இருந்த போதே, சதீஷ் தனது உயர் அதிகாரிகளால் நேரிடையாக எஸ்.ஐ.யாக தேர்வு செய்யப்பட்டவர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், நேற்று (6.3.18) இரவு, சதீஷ் இரவு பணியில் இருந்துள்ளார்.அப்போது, காவல் நிலையத்தில் இருந்த துப்பாக்கியை எடுத்து, தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறை உயர் அதிகாரிகள்,  சதீஷ் எழுதிய கடிதம் ஒன்றை கைப்பற்றியுள்ளனர்.

அதில், தனது தற்கொலைக்கு யாரும் காரணமில்லை என்று சதீஷ் குமார் தனது கைப்பட எழுதியுள்ளார். தற்கொலை செய்த சதீஷ் டி.பி.சத்திரம் காவலர் குடியிருப்பில் தனியாக வசித்து வந்துள்ளார். மன அழுத்தம் காரணமாக அவர், தற்கொலை செய்துக் கொண்டிருக்கலாம் என்று காவல் துறையினர் சந்தேகித்துள்ளனர். காவல் நிலைய வாசலில், சதீஷ் குமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக கடந்த வாரம், மதுரையை சேர்ந்த ஆயுதப்படை காவலர் அருள் சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் தற்கொலை செய்து கொண்டார். அருளின் தற்கொலை பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு காவலர் தற்கொலை செய்திருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை செய்துக் கொண்ட சதீஷ் குமாரின் உடல், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close