ஏற்கனவே இங்கு இருக்கும் பன்றிகள் போதும்; ரஜினியை மீண்டும் சீண்டும் சு.சுவாமி!

பல ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த மே மாதம், தனது ரசிகர்களை நேரடியாக சந்தித்து ஃபோட்டோக்கள் எடுத்துக் கொண்டார் ரஜினிகாந்த். அப்போது ரசிகர்களிடம் “போர் வரும் போது பார்த்துக் கொள்ளலாம்” என தனது அரசியல் பிரவேசம் குறித்து சூசகமாக பேசினார்.

ரஜினியின் இந்த அரசியல் பிரவேசம் குறித்த பேச்சை பலரும் விமர்சித்து வருகின்றனர். பல ஆண்டுகளாகவே அப்படித் தான் சொல்லுகிறார். இப்போது அவரால் அரசியலில் ஜொலிக்க முடியாது. அந்த காலம் முடிந்து விட்டது என சிலர் எதிர்மறையாகவும், சிலர் நேர்மறையாகவும் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

இத்தகைய அரசியல் பரபரப்புகளுக்கிடையே, கபாலி கூட்டணியின் அடுத்த படமான “காலா” படபிடிப்பில் ரஜினி தீவிரமாக பணிபுரிந்து வருகிறார். நடிகர் ரஜினிகாந்தின் 164-ஆம் படம் ‘காலா’. தனுஷ் தயாரிப்பில், பா.ரஞ்சித் இயக்கும் இந்த படத்தில் ரஜினியுடன் சமுத்திரக்கனி உள்பட பலர் நடித்து வருகிறார்கள். அரசியல் பிரவேசம் குறித்த பேச்சுகளுக்கிடையே இந்த படப்பிடிப்பு நடந்து வருவதால், படம் குறித்த விஷயங்களும், ரஜினியின் செயல்பாடுகளும் உற்று நோக்கப்படுகின்றன.

மும்பையில் முதற்கட்ட காலா படப்பிடிப்பில் கலந்து கொண்ட சூப்பர்ஸ்டார் ரஜினி, சில நாட்கள் ஓய்வுக்கு பின்னர், வழக்கமான உடல் பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றார். இதனையடுத்து, சூதாட்ட விடுதியில் ரஜினி இருப்பது போன்ற புகைப்படத்தை தனது டுவிட்டரில் பகிர்ந்த பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி,”ரஜினிகாந்த் 420 அமெரிக்காவில் உள்ள கேசினோ சூதாட்ட விடுதிக்கு தனது உடல்நலத்தை மேம்படுத்துவதற்கு சென்றுள்ளார்” என விமர்சித்திருந்தார். மேலும், ‘அவருக்கு அமெரிக்க டாலர்கள் எங்கிருந்து வருகிறது? என அமலாக்கத்துறை விசாரணை நடத்த வேண்டும்’ எனவும் அந்த டுவிட்டர் பதிவில் சுவாமி குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு ரஜினி ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்ததோடு, சு.சுவாமியை கடுமையாக விமர்சிக்கவும் தொடங்கினர்.

இந்நிலையில், இன்று மீண்டும் தனது ட்விட்டரில் ரஜினி குறித்து சு.சுவாமி காட்டமாக பதிவிட்டுள்ளார். அதில், “இந்திய மீனவர்களுக்கு இலங்கை கடுமையான சிக்கல்களை தருகிறது. இந்த ரஜினிகாந்த் 420, தனது கேசினோ நடவடிக்கைகளை விட்டுவிட்டு, கொழும்பிற்கு பறந்து சென்று மீனவர்களை விடுவிப்பாரா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், “முட்டாள் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என விரும்புகிறார், அவர் அதை செய்ய தகுதியுள்ளவர் என்று நிரூபித்துக் காட்டச் சொல்லுங்கள். இங்கே ஏற்கனவே நிறைய பன்றிகள் உள்ளன. எங்களுக்கு மற்றொன்று தேவையில்லை” என்ற டீவீட்டை சுப்பிரமணியன் சுவாமி ரீ-ட்வீட் செய்துள்ளார்.

×Close
×Close