Advertisment

3 கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து; தமிழக மருத்துவ கல்வித் துறை அலட்சியம்: அன்புமணி அறிக்கை

'தமிழக அரசு உடனே முன்வந்து ரத்து செய்யப்பட்ட 3 மருத்துவக் கல்லூரிகளில் குறைகளை சரி செய்து மாணவர் சேர்க்கைக்கு அனுமதி பெற வேண்டும்' என பா.ம.க தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Tamil Nadu 3 medical colleges derecognised, Anbumani Ramadoss Tamil News

PMK leader Anbumani Ramadoss on Tamil Nadu 3 medical colleges derecognised Tamil News

க.சண்முகவடிவேல்

Advertisment

திருச்சி கி.ஆ.பெ.அரசு மருத்துவக்கல்லூரி உள்பட 3 மருத்துவக்கல்லூரியின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும், தமிழக அரசு உடனே முன்வந்து ரத்து செய்யப்பட்ட 3 மருத்துவக் கல்லூரிகளில் குறைகளை சரி செய்து மாணவர் சேர்க்கைக்கு அனுமதி பெறவும், மாணவர்களின் அச்சத்தை போக்கிடுமாறும் முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ம.க தலைவருமான அன்புமணி ராமதாஸ் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

publive-image

தமிழக அரசுக்கு சொந்தமான சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி, திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றின் கட்டமைப்பு வசதிகளில் சுட்டிக்காட்டப்பட்ட சில குறைகள் சரி செய்யப்படாததைத் தொடர்ந்து அவற்றின் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான அங்கீகாரத்தை தேசிய மருத்துவ ஆணையத்தின் இளநிலை மருத்துவக் கல்வி வாரியம் ரத்து செய்திருக்கிறது. தேசிய மருத்துவ ஆணையத்தின் இந்த நடவடிக்கை கடுமையானது. அளவுக்கு அதிகமானது. தேவையற்றது ஆகும்.

தமிழகத்தின் 3 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள கைரேகை வழியான வருகைப் பதிவேட்டு கருவியில் விடுப்பு எடுத்த ஆசிரியர்களின் விவரங்கள் பதிவு செய்யப்படாதது, கண்காணிப்பு காமிராக்கள் சரியாக செயல்படாதது ஆகியவை தான் அங்கீகாரம் ரத்து செய்யபட்டதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. கைரேகை வழியான வருகைப் பதிவேடு, கண்காணிப்பு காமிராக்கள் ஆகியவற்றை தேசிய மருத்துவ ஆணையம் கட்டாயமாக்கியிருப்பதன் காரணத்தை நான் அறிவேன்.

அது நியாயமானதும் கூட. ஆனால், இதுகுறித்த இந்திய மருத்துவ ஆணையத்தின் அறிவிக்கைக்கு தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்ககம் விளக்கம் அளித்தும் கூட, அங்கீகாரத்தை ரத்து செய்து, மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைக்கும் அளவுக்கு தேசிய மருத்துவ ஆணையம் சென்றிருப்பது நியாயமல்ல. இது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்.

publive-image

தமிழகத்தில் அங்கீகாரம் ரத்து செய்யபட்டுள்ள 3 அரசு மருத்துவக் கல்லூரிகளும் புகழ்பெற்றவை. ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியும், திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் மருத்துவக் கல்லூரியும் மருத்துவத்துறையில் பல சாதனைகளை படைத்தவை. இந்தியாவில் மிகச்சிறப்பான கட்டமைப்பு வசதிகளைக் கொண்ட கல்லூரிகளில் குறிப்பிடத்தக்கவை. தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி கிராமப்புற மக்களுக்கு சேவை செய்யும் கல்லூரி ஆகும்.

இந்தக் கல்லூரிகளில் மொத்தமாக 500 எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை இடங்கள் உள்ளன. மிக எளிதாக சரி செய்து விடக் கூடிய குறைகளை காரணம் காட்டி, இவற்றின் அங்கீகாரத்தை ரத்து செய்தால் அது தமிழகத்தில் மருத்துவக் கல்வியை வழங்குவதில் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி விடும்.

மருத்துவக் கல்லூரிகளில் குறைகளை சரி செய்யும்படி தேசிய மருத்துவ ஆணையம் சுட்டிக்காட்டிய பிறகும், இந்த விவகாரத்தில் தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்ககம் அலட்சியமாக இருந்திருக்கக் கூடாது. தேசிய மருத்துவ ஆணையத்தின் இளநிலை மருத்துவக் கல்வி வாரியத்தின் முடிவை எதிர்த்து தேசிய மருத்துவ ஆணையத்தில் மேல்முறையீடு செய்யும் உரிமை தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு உண்டு.

எனவே, சம்பந்தப்பட்ட 3 மருத்துவக் கல்லூரிகளிலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ள குறைகளை உடனடியாக சரி செய்து, இளநிலை மருத்துவக் கல்வி வாரியத்தின் முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும். 3 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் 2023-24ம் கல்வியாண்டில் 500 இடங்களிலும் மாணவர் சேர்க்கை நடைபெறுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்திட வேண்டும்." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திருச்சி கி.ஆ.பெ.மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் டாக்டர் நேருவிடம் தொடர்புகொண்டபோது, "மருத்துவக்கல்லூரிக்கான முதலாமாண்டு மாணவர்களுக்கான சேர்க்கை குறித்த அங்கீகாரம் தொடர்பான கோப்புகள் மருத்துவ ஆணையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

publive-image

திருச்சி அரசு மருத்துவக்கல்லூரிக்கான அங்கீகாரம் ஏதும் ரத்து செய்யப்படவில்லை. தவறான தகவல், வழக்கமாகவே ஒவ்வொரு ஆண்டும் மருத்துவமாணவர்கள் சேர்க்கைக்கு முன்பு கல்லூரியில் உள்ள கட்டமைப்புகள், மாணவர்களின் விடுதிகள் குறித்து ஆய்வு செய்து அதன்படி, மீண்டும் அங்கீகாரம் வழங்குவது இயல்பு தான். அதற்கான நடவடிக்கைகள் தற்போது நடந்துக்கொண்டிருக்கின்றன, மாணவர்களும், பொதுமக்களும் அச்சப்படவேண்டிய அவசியமில்லை" என்று அவர் கூறினார்.

Tamilnadu Anbumani Ramadoss
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment