Advertisment

Tamil Nadu Assembly Election Updates: அரசுக்கு ரூ.500 கோடி இழப்பு; ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் மீது திமுக ஆளுநரிடம் புகார்

Tamil Nadu Assembly Election Live Updates : தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது.

author-image
WebDesk
New Update
Tamil Nadu Assembly Election Updates: அரசுக்கு ரூ.500 கோடி இழப்பு; ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் மீது திமுக ஆளுநரிடம் புகார்

Tamil News Live: தேர்தல், அரசியல், சமூகம் சார்ந்த செய்திகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம். உடனுக்குடன் செய்திகளை தமிழில் அறிந்துகொள்ள இந்தத் தளத்துடன் இணைந்திருங்கள்.

Advertisment

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது. தமிழகத்தில், 7 கோடியே 28 லட்சத்து அறுபத்தி ஒன்பதாயிரம் பேர் வாக்கு செலுத்த உள்ளனர். வாக்குப்பதிவுக்காக, 88,937 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் இதுவரை தேர்தல் விதிமுறைகளை மீறியதாக ரூ.428 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். மேலும் பூத் சிலிப் இல்லையென்றாலும் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் வாக்களிக்கலாம். காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை வாக்குபதிவு நடைபெறும். 50% வாக்குச்சாவடிகள் வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்படும். வாக்குச்சாவடிகளில் எத்தனை பேர் வரிசையில் இருக்கின்றனர் என்பதை தேர்தல் ஆணைய இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம். வாக்குச்சாவடி பணியாளர்களுக்கு கொரோனா பாதுகாப்பு உடை வழங்ப்படும் என்று தெரிவித்துள்ளார்

பத்து லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கியது எனது தலைமையிலான அரசு என எடப்பாடி பழனிச்சாமி, தனது தொகுதியில் இறுதிக்கட்ட பிரசாரத்தில் தெரிவித்துள்ளார். கொளத்தூரில் இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்ட திமுக தலைவர் ஸ்டாலின், உங்களுக்காக உழைக்க எனக்கு உத்தரவிடுங்கள் என மக்களிடம் கோரிக்கை விடுத்தார்.

தமிழகம் முழுவதும், நாளை நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு பாதுகாப்பு பணிகளில் 1.58 லட்சம் காவல் துறையினர் மற்றும் ஊர்காவல்ப் படை போன்ற பிரிவுகளின் கீழ் பணியாற்றுவோர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சென்னை காவல் துறைக்கு உட்பட்ட 30 சட்டமன்றத் தொகுதிகளில் மக்கள் பயமின்றி வாக்கு செலுத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக, சென்னை காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.

அனல் பறந்த தேர்தல் பிரசாரங்கள் நிறைவடைந்த நிலையில், தேர்தல் ஆணையம் சமூக வலைதளங்கள் மூலம் பிரசாரம் செய்ய தடை விதித்துள்ளது. மீறி பிரசாரம் செய்வோர் மீது, வழக்குப்பதிவு செய்யப்படும் என எச்சரித்துள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 21:47 (IST) 05 Apr 2021
    நடிகர் கார்த்திக் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

    நடிகர் கார்த்திக் உடல்நலக்குறைவு காரணமாக, மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயர் ரத்த அழுத்தம் மற்றும் மூச்சு திணறல் காரணமாக, சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 2 வாரங்களுக்கு முன்பு இதே போல, அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.



  • 20:25 (IST) 05 Apr 2021
    அரசுக்கு ரூ.500 கோடி இழப்பு; ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் மீது திமுக ஆளுநரிடம் புகார்

    சென்னை கோயம்பேட்டில் அரசு நிலத்தை தனியார் நிறுவனத்துக்கு ஒதுக்கியதில் முறைகேடு புகார் சந்தை மதிப்பைவிட குறைந்த விலைக்கு கொடுத்ததால் அரசுக்கு ரூ.500 கோடி இழப்பு ஏற்பட்டதாக திமுக குற்றம் சாட்டியுள்ளார்.

    இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம், ஆர்.பி.உதயகுமாருக்கு பல கோடி லஞ்சம் கைமாறியுள்ளதாகவும் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள அனுமதி கோரியும் ஆளுநரிடம் திமுக புகார் அளித்துள்ளது.



  • 20:17 (IST) 05 Apr 2021
    தமிழகத்தில் எந்த இடத்திலும் தேர்தல் ரத்து இல்லை - சத்ய பிரதா சாகு

    தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு, “தமிழகத்தில் ஒரு சில இடங்களில் தேர்தல் ரத்து என்ற தகவலில் உண்மை இல்லை. அது தொடர்பாக எந்த முடிவும் தேர்தல் ஆணையம் எடுக்கவில்லை” என்று கூறினார்.



  • 20:11 (IST) 05 Apr 2021
    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,672 பேருக்கு கொரோனா; 11 பேர் உயிரிழப்பு

    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,672 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9 லட்சத்து 3 ஆயிரத்து 497 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் இன்று ஒரே நாளில் 11 பேர் உயிரிழந்தனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.



  • 18:16 (IST) 05 Apr 2021
    தேர்தல் அன்று தொழில் நிறுவனங்கள் ஊதியத்துடன் விடுமுறை அளிக்காவிட்டால் நடவடிக்கை

    தேர்தல் அன்று தொழில் நிறுவனங்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழிலாளர் நலத்துறை ஆணையர் எச்சரிக்கை தெரிவித்துள்ளார். விடுமுறை அளிக்கத் தவறும் நிறுவனம் மீது புகாரளிக்க மாநில, மாவட்ட அளவிலான கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம் என்று தொழிலாளர் நலத்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.



  • 17:48 (IST) 05 Apr 2021
    தளி தொகுதியில் கர்நாடகா பாஜக எம்.எல்.ஏ.க்கள் கலவரச் சூழல் ஏற்படுத்த முயற்சி - முத்தரசன்

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிருஷ்ணகிரி மாவட்டம், தளி தொகுதியில் கர்நாடகா பாஜக எம்.எல்.ஏ.க்கள் கலவரச் சூழல் ஏற்படுத்த முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும், கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள் மூலம் தொகுதிகளில் பணப்பட்டுவாடா செய்யப்படுகிறது என்று முத்தரசன் குற்றம் சாட்டியுள்ளார்.



  • 17:44 (IST) 05 Apr 2021
    ஏப்ரல் 8ஆம் தேதி மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை

    கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், ஏப்ரல் 8ஆம் தேதி மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மகாராஷ்டிரா, தமிழகம் உட்பட சில மாநிலங்களில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.



  • 16:44 (IST) 05 Apr 2021
    கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு

    திருச்சி மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் கே.என்.நேரு மீது முசிறி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு வாட்ஸ் அப்பில் ஆபாசமாகவும் மிரட்டும் வகையில் பேசியதாகவும் தேர்தல் அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில், 4 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.



  • 15:36 (IST) 05 Apr 2021
    பூத் சிலிப் இல்லாவிட்டாலும் வாக்களிக்கலாம்

    பூத் சிலிப் இல்லையென்றாலும், வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்கலாம் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு தெரிவித்துள்ளார்.



  • 15:14 (IST) 05 Apr 2021
    மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் ராஜினாமா

    ஊழல் புகாரில் சிக்கிய மகாராஷ்டிரா மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் தனது பதவியை ராஜினாமா செய்தார். காவல்துறையினர் மாமூல் வசூலித்து மாதந்தோறும் ரூ.100 கோடி தர அனில்தேஷ்முக் நிர்பந்தித்ததாக முன்னாள் காவல் ஆணையர் பரம்பீர் சிங் ஊழல் புகார் கூறியிருந்தார். அனில் தேஷ்முக் மீதான புகாரில் சிபிஐ விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், ராஜினாமா செய்துள்ளார்.



  • 14:38 (IST) 05 Apr 2021
    சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழப்பு

    சிவகாசி அருகே எம்.துரைச்சாமிபுரம் பகுதியில் ராஜேஷ் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் உராய்வு காரணமாக திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஆலையில் இருந்த ஐந்து அறைகள் தரைமட்டமாகின. தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர். அதற்குள் இந்த விபத்தில் தர்மராஜ் என்ற தொழிலாளி உயிரிழந்தார். மேலும், இருவர் காயங்களுடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



  • 14:26 (IST) 05 Apr 2021
    மாயமான ஏனாம் சுயேட்சை வேட்பாளர் காயங்களுடன் மீட்பு

    புதுச்சேரி மாநிலத்தில் ஏனாம் சட்டபேரவை தொகுதிக்கு சுயேட்சையாக போட்டியிடும் பிரசாத் பொம்மடி ஏப்ரல் 1ஆம் தேதி முதல் காணாமல் போனார். இந்நிலையில் அவர் கோதாவரி ஆற்றுப்பகுதியில் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். அவருக்கு ஏனாம் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.



  • 14:17 (IST) 05 Apr 2021
    சாலை வசதி இல்லை - வாக்குப்பெட்டிகளை தலையில் சுமந்த ஊழியர்கள்

    நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட போதமலைக்கு சாலை வசதி இல்லாததால் அங்குள்ள வாக்குச்சாவடிகளுக்கான இயந்திரங்களை ஊழியர்கள் தலையில் சுமந்து சென்றனர்.  கீழூர், கெடமலை மலைகிராமங்களில் உள்ள 1,200-க்கும் மேற்பட்ட வாக்காளர்களுக்கு அங்கு இரண்டு வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மலைகிராமங்களுக்கு சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டுமென பல ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துவரும் நிலையில், இதுவரை சாலை வசதி செய்து தரபடவில்லை. இதனால் வாக்குப்பதிவு இயந்திரங்களை ஊழியர்கள் தலையில் சுமந்து சென்றனர்.



  • 14:03 (IST) 05 Apr 2021
    கொரோனா தடுப்பூசிகளுக்கு 4 மாநிலங்களில் தட்டுப்பாடு

    இந்தியாவில் கொரோனா தொற்று தீவிரமாக பரவிவருகிறது. இதற்கான தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், சத்தீஸ்கர், ஹரியானா, ஒடிசா மற்றும் தெலங்கானா ஆகிய 4 மாநிலங்களில் கொரோனா நோய் தடுப்பு மருந்துகள் குறைந்த அளவே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் அங்கு தினமும் தடுப்பூசி போட்டுக் கொள்வோரின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. ஆனால் இன்றைய தேவைக்கு மட்டுமே அங்கு தடுப்பூசி கைவசம் உள்ளதாக மாநில அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் தெலங்கானா மற்றும் ஒடிசாவில் கைவசம் உள்ள தடுப்பு மருந்துகளும் 3 நாட்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும் என்றும் அந்தந்த மாநில அரசு தரப்பில் மத்திய அரசிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹரியானா மாநிலத்திலும் தடுப்பு மருந்து குறைவாகவே உள்ளது. இதனால், கொரோனா நோய் தடுப்பு மருந்துகளுக்கு 4 மாநிலங்களில் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.



  • 13:48 (IST) 05 Apr 2021
    புதுச்சேரியில் தொடரும் 144 தடை உத்தரவு - தேர்தல் நடத்தும் அதிகாரி விளக்கம்

    புதுச்சேரி மாநில சட்டசபைக்கு நாளை வாக்குபதிவு நடைபெற உள்ள நிலையில் அங்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், புதுச்சேரியில் போடப்பட்டுள்ள 144 தடை உத்தரவு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்காது என்று மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளார்.



  • 13:35 (IST) 05 Apr 2021
    தமிழகத்தில் இதுவரை ரூ.428 கோடி பறிமுதல் - தலைமை தேர்தல் அதிகாரி

    தமிழகத்தில் இதுவரை தேர்தல் விதிமுறைகளை மீறியதாக ரூ.428 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். மேலும் பூத் சிலிப் இல்லையென்றாலும் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் வாக்களிக்கலாம். காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை வாக்குபதிவு நடைபெறும். 50% வாக்குச்சாவடிகள் வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்படும். வாக்குச்சாவடி பணியாளர்களுக்கு கொரோனா பாதுகாப்பு உடை வழங்ப்படும் என்று தெரிவித்துள்ளார்.



  • 13:25 (IST) 05 Apr 2021
    ஐபில் போட்டிகள் திட்டமிட்டபடி நடக்கும் - கங்குலி தகவல்

    மகாராஷ்டிராவில் கொரோனா தொற்றின் பரவல் அதிகமாக உள்ளதன் காரணமாக மாநில அரசு பல்வேறு வழிகாட்டு விதிமுறைகளை அமல்படுத்தி உள்ளது. இந்த நிலையில், “ஐபிஎல் திட்டமிட்டபடி நடக்கும்” என்று கங்குலி தெரிவித்துள்ளார். மும்பையில் இந்த சீசனின் முதல் சில லீக் போட்டிகள் நடைபெற உள்ளது. இதனிடையே, டெல்லி கேபிடல்ஸ் அணியின் ஆல் ரவுண்டர் அக்சர் படேல், பெங்களூரு அணி வீரர் தேவ்தத் படிக்கல், சென்னை அணியின் நிர்வாகி ஒருவர் மற்றும் மும்பை மைதானத்தின் ஊழியர்கள் என ஐபில் தொடரோடு தொடர்பில் உள்ளவர்கள் சிலர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.



  • 13:17 (IST) 05 Apr 2021
    பாலிவுட் நடிகை பூமி பெட்னேகருக்கு கொரோனா

    கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று பாலிவுட் நடிகர்களான அக்‌ஷய் குமார் மற்றும் கோவிந்தாவுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் இன்று பாலிவுட் நடிகை பூமி பெட்னேகருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.



  • 13:13 (IST) 05 Apr 2021
    தலைமை செயலகத்தில் கல்வித்துறை முதன்மை செயலாளர் ஆலோசனை

    கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைப்பது தொடர்பாக தலைமை செயலகத்தில் கல்வித்துறை முதன்மை செயலாளர் ஆலோசனை நடத்திவருகின்றனர். இதில், கல்வித்துறை ஆணையர் வெங்கடேஷ், பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன், தேர்வுத்துறை இயக்குனர் உஷாராணி உள்ளிட்டோர் பங்கேற்பு



  • 13:10 (IST) 05 Apr 2021
    பேரறிவாளன் விடுதலை வழக்கில் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

    ராஜீவ் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் பேரறிவாளனை விடுவிக்க கோரி அவரது தாயார் அற்புதம்மாள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். பேரறிவாளனை ஆளுநரே விடுதலை செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் அறிவுறித்தியத நிலையில் ஆளுநர் தனக்கு அந்த அதிகாரம் இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் பதிலளித்தார். தற்போது இந்த விவகாரத்தில் தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.



  • 12:44 (IST) 05 Apr 2021
    புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்தவேண்டும்

    புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த தேர்தல் ஆணையருக்கு உச்சநீதிமன்றம் இறுதிக்கெடு கொடுத்துள்ளது. புதுச்சேரி வார்டு மறுவரையறை பணிகளையும் 4 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்றும் புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தமால் இருப்பது வருந்தத்தக்கது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.



  • 12:18 (IST) 05 Apr 2021
    வாக்காளர் பட்டியலிலிருந்து சசிகலாவின் பெயர் நீக்கம்?

    சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலிலிருந்து சசிகலாவின் பெயர் நீக்கம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. போயஸ் இல்ல முகவரியில் ச‌சிகலாவுக்கு வாக்குரிமை இருந்த நிலையில், போயஸ் இல்லம் அரசுடைமையாக்கப்பட்டதால் பட்டியலிலிருந்து பெயர் நீக்கம் என்றும் தற்போது தி.நகர் இல்லத்தில் உள்ள முகவரியில் இருந்து வாக்காளர் பட்டியலில் பெயரை இணைக்க விண்ணப்பிக்கவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.



  • 12:04 (IST) 05 Apr 2021
    வாக்களிக்கும் போது மாஸ்க் கட்டாயம்

    கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போவதனால், நாளை மக்கள் வாக்களிக்கச் செல்லும்போது கட்டாயம் மாஸ்க் அணியவேண்டும் என்றும் வாக்குச்சாவடிகளில் தனிமனித இடைவெளியைக் கடைபிடிக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கியுள்ளார். மேலும், வாக்குப்பதிவின்போது கடைசி ஒருமணி நேரத்தில், கொரோனா பாதித்தவர்கள் வாக்களிக்கலாம் என்று தெரிவித்தார்.



  • 11:42 (IST) 05 Apr 2021
    தேர்தலையொட்டி முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள்!

    தமிழகத்தில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுவதையொட்டி, அதற்கான முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் 235 கம்பெனி துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். சென்னையைப் பொருத்தவரை 18 கம்பெனி துணை ராணுவத்தினர் உட்பட 30000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். மேலும், 3000 சிசிடிவி கேமிராக்கள் வாக்குச்சாவடி மையங்களில் பொருத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.



  • 11:29 (IST) 05 Apr 2021
    தேர்தலுக்கு பிறகு ஊரடங்கு என்ற தகவலை நம்ப வேண்டாம் - ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ்

    தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்த பின், மீண்டும் முழு ஊரடங்கு என்ற தகவலை நம்ப வேண்டாம் என, சுகாதாரத் துறை செயலாளார் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அத்தியாவசியற்ற திட்டங்களுக்கு மட்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.



  • 09:35 (IST) 05 Apr 2021
    பெரியாருக்குப் பதில் மோடியா? - ப.சிதம்பரம் கண்டனம்

    தமிழ்நாட்டில், பெரியாரிய கொள்கைகளை ஒழிக்கவே பாஜக வந்திருக்கிறது என பேசிய பாஜக நாடாளுமன்ற உறுப்பினரின் பேச்சுக்கு திராவிட கட்சியான அதிமுக, கண்டனம் தெரிவிக்காதது ஏன் என ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். தந்தை பெரியாருக்குப் பதிலாக, மோடியை தங்கள் தலைவராக, ஆசானாக, வழிகாட்டியாக ஈபிஸ்-ஓபிஎஸ் தலைமையிலான அதிமுக ஏற்றுக் கொண்டு விட்டதா எனவும் வினவி உள்ளார்.



  • 09:23 (IST) 05 Apr 2021
    இந்தியாவில் ஒரு லட்சத்தை கடந்த தினசரி கொரோனா பாதிப்பு!

    நாடு முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாம் அலை தீவிரமடைந்து வரும் நிலையில், தினசரி பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளது. குறிப்பாக, மஹாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும், கடந்த 24 மணி நேரத்தில் 57000 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.



  • 08:45 (IST) 05 Apr 2021
    பறக்கும் படையினரின் கார் விபத்து; தலைமை பெண் காவலர் பலி!

    வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிகளுக்கு உள்பட்ட, பி.கே.புரம் பகுதியின் தேர்தல் பறக்கும் படையினர் குடியாத்தம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த லாரி எதிர்பாராத விதமாக மோதியதில் தலைமை பெண் காவலர் மாலதி உயிரிழந்தார். உடனிருந்த மத்திய காவல்படையை சேர்ந்த காவலரும், ஒளிப்பதிவாளரும் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



  • 08:38 (IST) 05 Apr 2021
    விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விற்பனை!

    சென்னையில் தொடர்ந்து ஆறாவது நாளாக, விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.92.58 மற்றும் டீசல் ரூ.85.88 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.



  • 08:35 (IST) 05 Apr 2021
    தேர்தல் பாதுகாப்பு பணிகளில் 1.58 காவலர்கள்; தேர்தல் ஆணையம்

    நாளை நடைபெற உள்ள தேர்தல் வாக்குப்பதிவு மற்றும் கண்காணிப்பு பணிகளில் தமிழக காவல்துறை மற்றும் ஆயுதப்படை போலீசார் 74,162 பேர் உள்பட 1 லட்சத்து 58 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.



  • 08:31 (IST) 05 Apr 2021
    திமுக வேட்பாளரின் நண்பர் வீட்டில் 35 லட்சம் பறிமுதல்!

    நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வெங்கடாசலத்தின் நண்பர் வீட்டில், பணப்பட்டுவாடா செய்வதாக எழுந்த புகாரின் அடிப்படையில், தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தினர். சோதனையில், 35 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.



  • 08:17 (IST) 05 Apr 2021
    பயமின்றி வாக்கு செலுத்தலாம்; சென்னை காவல் ஆணையர்

    சென்னையில் பொதுமக்கள் பயமின்றி வாக்குகளை செலுத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக, சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். சென்னை காவல்துறைக்கு உள்பட்ட 30 சட்டமன்றத் தொகுதிகளில் பாதுகாப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, சென்னையில் உள்ள 327 பதற்றமான வாக்குச்சாவடிகளில் மூன்றடுக்கு பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.



  • 08:06 (IST) 05 Apr 2021
    தமிழகத்தில் நாளை வாக்குப்பதிவு!

    தமிழகத்தின் 16 வது சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது. தமிழகத்தில், 7 கோடியே 28 லட்சத்து அறுபத்தி ஒன்பதாயிரம் பேர் வாக்கு செலுத்த உள்ளனர். மாநிலம் முழுவதும் வாக்குப்பதிவிற்காக, 88,937 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.



Tamilnadu Tamilnadu Election 2021 Tn Assembly Election
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment