Today tamil nadu legislative assembly news in tamil: தமிழகத்தில், ‘ஹைட்ரோ கார்பன்’ உற்பத்தியை துவக்கி விட்டது போல, மாயையை ஏற்படுத்தி, மக்களின் அறியாமையை துாண்டிவிட்டு, போராட்ட களமாக்க முயற்சி செய்கிறீர்கள்,” என, தி.மு.க.,வினர் மீது, சட்ட அமைச்சர், சி.வி.சண்முகம் குற்றம் சாட்டினார். மேலும், ஹைட்ரோ கார்பன் திட்ட ஆய்வுக்கு, தி.மு.க., ஆட்சியில் அனுமதி அளிக்கப்பட்டதை, ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டினார். தமிழக அரசு, எந்த திட்டத்திற்கும் அனுமதி வழங்கவில்லை; எதிர்காலத்திலும் அனுமதி வழங்கப்படாது. ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு, அனுமதி வழங்கப்படாது. இந்த திட்டத்தை கடல் பரப்பில் செய்ய, மத்திய அரசு அனுமதி வழங்கி விடும். நிலப்பரப்பில் கனிமங்களை ஆய்வு செய்து, உற்பத்தி செய்ய, விதிமுறைகளின்படி, மாநில அரசு அனுமதி பெற வேண்டும். அப்போது தான் திட்டத்தை நிறைவேற்ற முடியும்; மாநில அரசு அனுமதி வழங்காது என அமைச்சர் சண்முகம் கூறினார்.
தி.மு.க.,வினருக்கு ஜாதகம் சரியில்லாததால் தான், மேலேயும் இல்லாமல், கீழேயும் இல்லாமல், இடையில் தொங்குகின்றனர்,” என, முதல்வர், பழனிசாமி சட்டசபையில் கிண்டலடித்தார். எங்களுக்கு, ஜாதகம் நன்றாக இருக்கிறது. அதனால் தான், நாங்கள் ஆட்சியில், நல்ல நிலையில் உள்ளோம். ஜாதகம் சரியில்லாததால் தான், நீங்கள் (தி.மு.க.) மேலேயும் இல்லாமல், கீழேயும் இல்லாமல், இடையில் தொங்கிக் கொண்டிருக்கிறீர்கள் என்று முதல்வர் மேலும் கூறினார்.
ஆட்சேபகரமற்ற பகுதியில் குடியிருப்போரை வரன்முறைப்படுத்தி, பட்டா வழங்க, அரசாணை பிறப்பிக்கப்பட்டது. தேர்தல் காரணமாக, மூன்று மாதங்களாக, நடைமுறைப் படுத்தப்படவில்லை. அரசு நிலங்களில், குடியிருப்போரை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் காலத்தை நீட்டிக்க, முதல்வர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுஉள்ளது. கடந்த நிதியாண்டில், 20 லட்சம் பேருக்கு பட்டா வழங்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதைத்தாண்டி, 23 லட்சம் பேருக்கு, பட்டா வழங்கப்பட்டுள்ளது என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
Live Blog
tamil nadu assembly news today live: சட்டசபை கூட்டத்தொடர் முடிவடையும் வரை, ஒவ்வொரு நாளும், சட்டசபையில், ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியினர் இடையே, காரசாரமான விவாதங்களும், மோதல்களும் அரங்கேறுவது உறுதி.
”உங்கள் கேள்விக்கு தான் விளக்கம் அளித்தேன்,” என, அமைச்சர் ராஜு சமாளித்தார். உடனே காளிமுத்து, ”நான் உங்களிடம், எந்த கோரிக்கையும் வைக்கவில்லை; முதல்வரிடம் தான் கோரிக்கை வைத்தேன். ஆனாலும், நீங்கள், திறமையான அமைச்சர் என்பதை, நிரூபித்து விட்டீர்கள்,” என்று கிண்டலடித்தார்.
சட்டசபையில் பேசிய திருவள்ளூர் எம்.எல்.ஏ. வி.ஜி.ராஜேந்திரன், டெங்கு ஆரம்பித்த திருவள்ளூரில், தற்போது, அதிகளவில் நோய் தொற்றுகள் ஏற்படும் சூழல் இருப்பதாக கூறினார்.
அதற்கு பதிலளிக்கும் வகையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது, டெங்கு ஆரம்பித்த இடம் மட்டுல்ல, அதை முடித்து வைத்து முதலாவது இடமும் திருவள்ளூர்தான் என்றார். கடந்த ஆண்டில் மட்டும், 12 ஆரம்ப சுகாதார நிலையங்களும், 8 ஆண்டுகளில் மொத்தம் 254 சுகாதார நிலையங்களும் கட்டப்பட்டுள்ளதாக பேசிய விஜயபாஸ்கர், கிராமப்புற சுகாதார சேவையை உறுதிப்படுத்தியதில் தமிழகம் முதன்மை மாநிலம் என்றார். 524 பணியிடங்கள் நாளை நிரப்பப்படுவதன் மூலம், காலிப் பணியிடமே இல்லாமல், சுகாதாரத் துறை திகழ்வதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
கஜா புயலில் வீடுகளை இழந்தவர்களுக்கு முதற்கட்டமாக 28 ஆயிரத்து 671 வீடுகள் கட்டுவதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், சட்டசபையில் உறுதி அளித்துள்ளார்.
அமெரிக்க படைப்புழு தாக்குதலுக்கு உள்ளான மக்காச்சோளத்திற்கு ரூ.186 கோடி நிவாரணம் அளிக்கப்பட இருப்பதாக 110வது விதியின் கீழ், முதல்வர் பழனிசாமி, சட்டசபையில் அறிவித்துள்ளார்.
இறவை பயிர் – ஹெக்டேருக்கு ரூ 13500, மானாவாரிப் பயிர் – ஹெக்டேருக்கு ரூ 7410 வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் ஆறுமுகசாமி ஆணையத்தின் முன்பு ஆஜராவேன் என்று துணை முதல்வர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார். ஜெயலலிதா, உடல்நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 72 நாட்களில் ஒருமுறை கூட அவரை நேரில் பார்த்தது இல்லை என்று பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் நாளைய எதிர்காலம் ஸ்டாலின் என்று திமுக எம்எல்ஏ செந்தில்பாலாஜி, சட்டசபையில் தெரிவித்தார். அதோடுவிடாமல், குனிந்து கும்பிடு போட்டு பதவியை பெற்றவர் ஸ்டாலின் அல்ல என்றும் அவர் கூறினார். செந்தில்பாலாஜியின் இந்த கருத்திற்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் முழக்கம் எழுப்பினர்.
அப்போது முதல்வர் பழனிசாமி கூறியதாவது, குனிந்து கும்பிடு போட்டு பதவியை பெற்றார்கள் என்று எங்களை தொடர்புபடுத்தி செந்தில்பாலாஜி பேசியது தவறு என்று முதல்வர் கூறினார்.
அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை எத்தனை முறை குனிந்து கும்பிடு போட்டு செந்தில்பாலாஜி பதவியை பெற்றார் என்பது அவருக்கு எனக்கு தெரியும் என்று துணை முதல்வர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
அதிமுக பிளவுபட்டபோது, தற்போதைய துணை முதல்வர் பன்னீர்செல்வம் பேசியது நினைவிருக்கிறதா என்று எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழில் வெளியாவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளும் என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் சட்டசபையில் தெரிவித்துள்ளார். எந்த மாநிலங்களிலிருந்து அதிக வழக்குகள் வருகிறதோ, அதனடிப்படையில் உச்சநீதிமன்றம் அந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக அமைச்சர் சண்முகம் தெரிவித்தார். உச்சநீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்கும் நடவடிக்கைகளில் தமிழக அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
பாதாள சாக்கடை திட்டம் தொடர்பாக, சட்டசபையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராமசாமி கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் வேலுமணி கூறியதாவது, பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்துவதில் சிக்கல் உள்ளது. கடந்த காலங்களில் செயல்படுத்தப்பட்ட 55 திட்டங்களில் 15 திட்டங்கள் கைவிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
சட்டசபையில், நேற்றைய தினத்தில், ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக, திமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்த நிலையில், இன்று (ஜூலை 4ம் தேதி) விளைநிலங்களில் உயர்மின் கோபுர திட்டம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர உள்ளது.
முதல்வர் துறைகளில், உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகளை, கேள்வி நேரத்தில் விவாதத்திற்கு எடுக்க வேண்டும்,” என, எதிர்க்கட்சி துணைத் தலைவர், துரைமுருகன், வேண்டுகோள் விடுத்தார்.
முதல்வர் பேசுகையில், ‘லோக்சபா தேர்தல் பிரசாரத்தின்போது, கர்நாடகாவில், காங்., தலைவர் ராகுல், மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால், மேகதாது அணை கட்டப்படும்; காவிரி மேலாண்மை ஆணையம் கலைக்கப்படும் என பேசியதை, ஏன் தமிழக காங்கிரசார் எதிர்க்கவில்லை’ என, கேள்வி எழுப்பி இருந்தார். சட்டசபையில், கேள்வி நேரம் முடிந்ததும், ராகுல் குறித்து முதல்வர் பேசியதற்கு, பதில் அளிக்க, காங்கிரஸ் – எம்.எல்.ஏ., பிரின்ஸ் அனுமதி கேட்டார். சபாநாயகர் தனபால், அனுமதி அளிக்கவில்லை.காங்., – எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் எழுந்து நின்று வலியுறுத்தியும், சபாநாயகர் அனுமதிக்கவில்லை. இதையடுத்து, காங்., – எம்.எல்.ஏ.,க்கள், சபையிலிருந்து ெவளியேறினர்.
தி.மு.க., – எம்.எல்.ஏ., செங்குட்டுவன், கூட்டுறவு சங்கங்களில் நடந்த முறைகேடுகள் குறித்து பேசினார். அதற்கு கூட்டுறவுத்துறை அமைச்சர், ராஜு பதில் அளித்தார். இரு தரப்பிலும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. எதிர்க்கட்சி துணைத் தலைவர், துரைமுருகன் பேச்சு, அவற்றுக்கு முத்தாய்ப்பாக அமைந்தது. ஆனால், இந்த பேச்சுக்கள் அனைத்தையும், சபைக் குறிப்பில்இருந்து நீக்குவதாக, சபாநாயகர் அறிவித்தார். அதை ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என, இரு தரப்பினரும் ஏற்றனர்.