தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி எழுச்சி பெற்று வருவதால், வரும் சட்டசபை மற்றும் நகராட்சி தேர்தல்களில் அதிக இடங்களில் வெற்றி பெறுவோம் என்று பா.ஜ. கட்சியின் தேசிய தலைவர் ஜெயபிரகாஷ் நட்டா தெரிவித்துள்ளார்.
Advertisment
தமிழக பாஜக தலைவராக எல். முருகன் நியமிக்கப்பட்ட பின்னர் அக்கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் இந்த செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
இதில் பாஜகவின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா பேசியதாவது: தமிழகம் கோவில்கள் நிறைந்த பூமி. உயரிய பண்பாட்டைக் கொண்டது. தேச விடுதலைக்குப் பாடுபட்ட எண்ணற்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் மண் இது. உலகம் முழுவதும் தொழில் முனைவோர்களாக தமிழர்கள் திகழ்கின்றனர். தமிழர்களின் உயரிய பண்பாட்டுக்கு என் வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறேன். இனிவரும் காலங்களில் தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளிலும் சட்டசபையில் பாரதிய ஜனதா கட்சி கணிசமான இடங்களைக் கைப்பற்றும். நாம் நமது வாக்கு வங்கியை அதிகரிக்க வேண்டும்.
Advertisment
Advertisements
கொரோனா கால ஊரடங்கு என்பது அரசியல் கட்சிகளுக்கும் கூட ஊரடங்கு என்பதாகிவிட்டது. இருந்தபோதும் மக்களுக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து தமிழக பாரதிய ஜனதா கட்சி செயல்பட்டு வருகிறது. பிரதமர் மோடியின் சீரிய தலைமையில் கொரோனாவை எதிர்த்து நாம் போராடி வருகிறோம்.
தேசியத்துக்கு எதிரான ஒரு கட்சி தமிழகத்தில் இருக்கிறது என்றால் அது தி.மு.க. தான். தேசிய வளர்ச்சிக்கும், தமிழக வளர்ச்சிக்கும் அக்கட்சி தடையாக இருந்து கொண்டிருக்கிறது. நாட்டை பற்றிய அக்கறை இல்லை. உதாரணத்துக்கு கருப்பர் கூட்டம் சம்பவத்தை சொல்லலாம். அதனை அவர்கள் கண்டிக்கவே இல்லை. ஆனால் இந்த விவகாரத்தில் தமிழக பா.ஜனதா அழுத்தமான முத்திரையை பதித்து இருக்கிறது.
நாட்டின் வளர்ச்சி குறித்து கவலைப்படாத தி.மு.க. உள்பட தீயசக்திகள் இனி தமிழகத்தில் இருக்கவே கூடாது. வரும் காலகட்டத்தில் தமிழகத்தில் பா.ஜனதா முக்கியமான பங்கு வகிக்க இருக்கிறது. உள்ளாட்சி மன்ற, சட்டமன்ற மற்றும் பார்லிமென்ட் தேர்தல்களில் தமிழக பா.ஜனதா பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
புதிய தேசிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இதற்கு முன்பு, 1986-ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்டது. இதில், புள்ளிவிவரங்கள் மட்டுமே மாற்றமாகி இருந்தன. கல்விக்கான சாராம்சமோ அல்லது மாணவா்களை ஊக்கப்படுத்தும் வகையிலோ அம்சங்கள் இல்லை. ஆனால், இந்தியா விடுதலை பெற்ற்குப் பிறகு, முதல் முறையாக ஒரு சுதந்திரமான இந்திய தேசத்துக்கான கல்விக் கொள்கை வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக பாஜக நிா்வாகிகள் ஆழமான அறிந்து கொண்டு மக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும். தேசிய கல்விக் கொள்கையில் மாநில மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளதை தமிழக மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil