Advertisment

சாமானியர்களுக்கும் பொறுப்பு: தமிழக காங்கிரஸில் சாதனையா? வேதனையா?

காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர்களாக பெரிய எண்ணிக்கையில் அறிவித்திருப்பது குறித்து காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.

author-image
Balaji E
New Update
tamil nadu congress comittee, congress president ks alagiri, தமிழ்நாடு காங்கிரஸ், பொறுப்பாளர்கள் நியமனம், கேஎஸ் அழகிரி, congress appointed new party functionaries from common men, tamil nadu congress, congress party, tamil nadu assembly elections 2021

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தமிழக காங்கிரஸில் சாமானிய தொண்டர்களுக்கு மாநில, மாவட்ட பொறுப்பு அளித்து சத்தமில்லாமல் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். இன்றைய அரசியல் சூழலில் பணம், பதவி, அரசியல் பின்புலம் இருப்பவர்களுக்கே அரசியல் கட்சிகளில் பதவி, தேர்தல்களில் சீட்டு என்று மாறிவிட்ட நிலையில், காங்கிரஸ் கட்சியில் கட்சிக்காக உழைத்த நூற்றுக்கும் மேற்பட்ட சாமானியர்களுக்கு புதிய முகங்களுக்கு மாநில, மாவட்ட பொறுப்புகள் அளிக்கப்பட்டிருப்பது தமிழக அரசியலில் கவனம் பெற்றுள்ளது.

Advertisment

கே.எஸ்.அழகிரி தமிழ்நாடு காங்கிரசுக்கு தலைவராக நியமனம் செய்யப்பட்ட பிறகு, கடந்த 2 ஆண்டுகளாக தமிழக காங்கிரஸின் முகம் மாறித்தான் வருகிறது.

மாநிலத்தில் ஆளும் அதிமுகவையும் மத்தியில் ஆளும் பாஜகவையும் எதிர்த்து திமுக போராட்டம் நடத்தும்போது ஒரு கூட்டணி கட்சியாக திமுக கூட்டங்களில் கலந்துகொள்பவர்களாக இருந்த காங்கிரஸ் கட்சியினர் கடந்த சில மாதங்களாக தனி ஆர்ப்பாட்டங்களையும் ஏர்க்கலப்பை பேரணிகளையும் நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியினர் நடத்தும் தனித்த போராட்டங்கள் மூலம் கவனம் பெற்று வருகின்றனர். இது எல்லாம் கே.எஸ்.அழகிரி வருகைக்கு பிறகான மாற்றம் என்று சில காங்கிரஸ் பொறுப்பாளர்கள் கூறுகிறார்கள்.

தமிழகத்தில் வருகிற மே மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுவதால் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் கட்சியில் மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள், தேர்தல் குழு என்று பொறுப்பாளர்களை நியமித்து வருகின்றன.

மத்தியில் ஆளும் பாஜக ஒருபுறம் மாற்று கட்சிகளில் உள்ள அரசியல் தலைவர்களையும் சினிமா பிரபலங்களையும் கட்சியில் இணைத்து வருகிறது. ஆனால், அதற்கு மாறாக, காங்கிரஸ் கட்சியில், இதுவரை வெளியே தெரியாத, எந்த அரசியல் பின்புலமும் இல்லாத, கட்சிக்கு உழைத்த சாமானிய தொண்டர்கள் 200க்கும் மேற்பட்டோர்களை மாநில, மாவட்ட பொறுப்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக காங்கிரஸ் கட்சி என்றாலே கோஷ்டி பூசல், முக்கிய தலைவர்களின் பரிந்துரை இருந்தால் மட்டுமே கட்சியில் பதவி என்றிருந்த நிலையில், எப்படி புதியவர்களுக்கு, சாமானிய தொண்டர்கள் 200க்கும் மேற்பட்டவர்களுக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது குறித்து காங்கிரஸ் கட்சியினரிடம் பேசினோம்.

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தொகுதி, முத்துப்பேட்டை ஒன்றியத்தில் ஒரு சாதாரண குடும்ப பின்னணியில் இருந்து காங்கிரஸ் கட்சியில் செயல்பட்டு வந்த தாஹிர் காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தாஹிரை தொடர்புகொண்டு கேட்டபோது, “முதலில் நம்மை மாதிரி சாதாரண ஒரு சாமானியனுக்கு மாநில பொறுப்பு வழங்கப்படுகிறது என்றால், நிச்சயமாக நம்ப முடியவில்லை. நான் என்றைக்கும் பொறுப்புக்கு ஆசைப்பட்டதில்லை. கட்சிக்காக ஒரு குறிப்பிட்ட பகுதியில் கட்சியை வளர்க்க வேண்டும் என்ற எண்ணத்தோடு உழைத்திருக்கிறோம். இதுவரை நான் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரியை நேரில் சந்தித்ததுகூட கிடையாது. ஆனாலும், கட்சியில் என்னுடைய செயல்பாட்டைப் பார்த்து கூப்பிட்டு பொறுப்பு கொடுத்திருக்கிறார்.

நான் அடிப்படையில் ஒரு சமூக செயல்பாட்டாளர். ஒரு 30 ஆண்டுகளாக வேலை செய்து வருகிறேன். நீர்நிலை பாதுகாப்பு, ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், முதியோர் ஓய்வூதியம் பெற்றுத் தருதல் என செயல்பட்டு வந்துள்ளேன். இது எல்லாம் அவர்கள் கவனத்துக்கு சென்றதால்தான் மாநில செயலாளர் பொறுப்பு கொடுத்திருக்கிறார்கள். நிச்சயமாக நான் இதை எதிர்பார்க்கவில்லை. காங்கிரஸ் கட்சியில் எப்போதும் இல்லாத அளவில் நிறைய சாமானியர்களுக்கு பொறுப்பு வழக்கப்பட்டுள்ளது. இதனால், காங்கிரஸ் கட்சி அடிமட்ட அளவில் பரவுவதற்கு வழிவகுக்கும். இதன் மூலம் எனக்கு ஒரு உத்வேகம் ஏற்பட்டிருக்கிறது. என்னைப் பார்த்து மற்றவர்களும் அதே உத்வேகத்துடன் காங்கிரஸ் கட்சிக்கு வருவார்கள்.” என்று கூறினார்.

காங்கிரஸ் கட்சியில் உங்களுடைய அரசியல் செயல்பாடுகளை என்ன மாதிரி அமைத்துக்கொண்டிருக்கிறீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த தாஹிர், “மக்களுக்கு நிறைய பிரச்னைகள் இருக்கிறது. தேவைகளும் இருக்கிறது. நாளுக்கு நாள் அவர்களின் பிரச்னைகள் அதிகரித்து வருகிறது. அப்போது, மக்களுக்காக காங்கிரஸ் கட்சி களத்தில் போராடும்போது மக்கள் கட்சியை நோக்கி வருகிறார்கள். அந்த போராட்டங்களில் ஒரு 10 கோரிக்கை வைத்தால் 2 கோரிக்கைகள் நிறைவேறும். அதன் மூலம், காங்கிரஸ் மக்களின் ஆதரவைப் பெறுகிறது.” என்று கூறினார்.

காங்கிரஸ் மீது ஈடுபாடு வந்தது குறித்து கூறிய தாஹிர், “நேருவின் குடும்பம் மீதுள்ள ஈடுபாடுதான் காரணம். நான் ஒரு மதச்சார்பற்ற சிந்தனையுள்ளவன். நான் ஒரு இஸ்லாமிய குடும்பத்தில் இருந்து வந்தவன் என்பதால் என் பெயரை வைத்து என்னை இஸ்லாமியராகத்தான் பார்ப்பார்கள். அப்படித்தான் பார்ப்பார்கள். ஆனால், நான் என்னை அப்படி பார்ப்பது இல்லை. நான் இன்று இந்தியாவில் வாழ்கிறேன் என்றால் அதற்கு காங்கிரஸ்தான் காரணம். நாட்டின் முதல் பிரதமர் நேரு உருவாக்கிய மதச்சார்பற்ற சிந்தனைதான் இன்று நீங்களும் நானும் பேசிக்கொண்டிருப்பதற்கும் காரணம் என்று நினைக்கிறேன். இல்லாவிட்டால் நாடு பாகிஸ்தானைவிட மோசமாகப் போயிருக்கும். இன்றைக்கு முஸ்லிம்கள் இந்தியாவில் நல்லா இருக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் காங்கிரஸ்தான் காரணம். எவ்வளவுதான் மதவெறி சிந்தனைகள் இஸ்லாமியர்கள் தரப்பில் தூண்டப்பட்டாலும் இந்துக்கள் தரப்பில் தூண்டப்பட்டாலும் அதையெல்லாம் தாக்குப்பிடித்து நிற்கிறது என்றால், அதற்கு காங்கிரஸ் முதலில் போட்ட மதச்சார்பற்ற விதைதான் காரணம்” என்று கூறினார்.

அதே போல, திண்டுக்கல் மத்திய மாவட்ட காங்கிரஸ் தலைவராக மணிகண்டன் என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார். 37 வயதான மணிகண்டன் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர்களிலேயே தான்தான் இளையவர் என்று கூறுகிறார். இதற்கு முன்பு திண்டுக்கல் நகர காங்கிரஸ் தலைவராக இருந்துள்ள மணிகண்டன், திண்டுக்கல் காங்கிரஸின் கோட்டை அதை மீண்டும் உறுதி செய்வோம் என்று நம்பிக்கையுடன் கூறுகிறார்.

தன்னை திண்டுகல் மத்திய மாவட்ட காங்கிரஸ் தலைவராக அறிவிக்கப்பட்டிருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த மணிகண்டன், வருகிற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பாஜகவுக்கு எதிராக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடுவோம் என்று கூறினார்.

மணிகண்டனின் செயல்பாடுகளைப் பார்த்துதான் அவருக்கு மாவட்ட தலைவர் பதவி வழங்கப்பட்டிருப்பதாகக் கூறினார்.

திண்டுக்கல்லில் 1936ம் ஆண்டு குப்புசாமி ஐயர் என்பவர் திண்டுக்கல் நகரத்தின் மையப்பகுதியில் தனக்கு சொந்தமான 10,000 சதுர அடி நிலத்தை காங்கிரஸ் கட்சிக்கு எழுதி கொடுத்திருக்கிறார். ஆனால், அது காலப்போக்கில், மற்றவர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வந்துள்ளது. திண்டுக்கல்லில் 84 ஆண்டுகளுக்கு முன்பு குப்புசாமி ஐயர் காங்கிரஸ் கட்சிக்கு 10,000 சதுர அடி நிலத்தை எழுதிக் கொடுத்த ஆவணம் கிடைத்த பிறகு, பல போராட்டங்களை நடத்தி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அந்த நிலத்தை மீட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியிடம் ஒப்படைத்துள்ளார். இன்றைக்கு அந்த இடத்தின் மதிப்பு 10 கோடி ரூபாய் என்று கூறி மலைக்க வைக்கிறார் மணிகண்டன்.

நிச்சயமாக வருகிற சட்டமன்றத் தேர்தலில் திண்டுக்கல் தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு கேட்டு வெற்றி பெறுவோம் அதிக வாக்குகளில் காங்கிரஸ் கட்சியை வெற்றி பெறச் செய்வோம் என்று மணிகண்டன் உறுதி கூறுகிறார்.

அதே போல, காங்கிரஸ் கட்சியில் மாநில செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ள திட்டக்குடியைச் சேர்ந்த அன்பரசுவிடம் பேசினோம். அன்பரசு திட்டக்குடியில் ஒரு காலணி கடை வைத்துள்ளார். 50 வயதாகும் அன்பரசு தான் 30 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் இருப்பதாக பெருமையுடன் கூறுகிறார். கல்லூரி படிக்கும் காலத்திலேயே மறைந்த காங்கிரஸ் தலைவர் வள்ளல் பெருமான் மூலம் காங்கிரஸ் கட்சிக்கு வந்ததாகக் கூறுகிறார்.

காங்கிரஸ் கட்சியில் மாநில செயலாளர் பொறுப்பு அளித்திருப்பது புதிய உத்வேகத்தை அளித்திருப்பதாகக் கூறும் அன்பரசு, “இதுவரை காங்கிரஸ் கட்சியில் எந்த பொறுப்பிலுமே இருந்ததில்லை. ஆனால், தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்காக பணியாற்றி வருகிறேன். நான் மட்டுமே தனியாக திட்டக்குடி பகுதியில் 5,000 பேர்களை காங்கிரஸ் கட்சியில் சேர்த்து உறுப்பினர் அட்டை அளித்திருக்கிறேன். இப்படி எல்லாருமே செயல்பட்டால் காங்கிரஸ் பலம் பெற்றுவிடும். வருகிற சட்டமன்றத் தேர்தலில் எங்கள் தொகுதியில் மட்டுமில்லாமல் காங்கிரஸ் கட்சி நிற்கும் மற்ற தொகுதிகளுக்கு சென்று பிரச்சாரம் செய்வோம். காங்கிரஸ் வெற்றி பெற கடுமையாக உழைப்போம்” என்று கூறுகிறார்.

தொடர்ந்து பேசிய அன்பரசு, “காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இந்த முறை எப்போதும் இல்லாத அளவில் 80 சதவீதம் பொறுப்பாளர்களை சாமானியர்களை, கட்சிக்காக உழைத்தவர்களை நியமனம் செய்துள்ளார். காங்கிரஸில் இது ஒரு பெரிய சாதனை” என்று  கூறினார்.

வேலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் தலைவராக பேரணாம்பட்டுவைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து சுரேஷ் கூறியதாவது: “இதற்கு முன்பு நான் பேரணாம்பட்டு நகர காங்கிரஸ் தலைவராக இருந்துள்ளேன். ஆரம்பத்தில் நான் மாணவர் காங்கிரஸில் இருந்தேன். அப்போது எவ்வளவும் கடுமையாக உழைத்தாலும் நகர மாணவர் காங்கிரஸ் தாண்டி மாவட்ட  மாணவர் காங்கிரஸ் பொறுப்புக்கு செல்ல முடியாது. ஆனால், இப்போது, காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி என்னைப் போன்ற சாமானியர்களுக்கு பொறுப்பு அளித்துள்ளார். இதுவரை நான் கட்சி என்ன பணி சொன்னாலும் அதை சிறப்பாக செய்து வந்துள்ளேன். கட்சிப் பணி மட்டுமல்லாமல் மக்கள் பிரச்னை என்னவாக இருந்தாலும் நான் மக்களுக்காக களத்தில் நின்று இருக்கிறேன். உதாரணத்துக்கு, பேரணாம்பட்டு பேருந்து நிலையம், இப்போது இருக்கிற இடத்தில் இருந்து நகரத்துக்கு வெளியே 5 கி.மீ தொலைவில் போட்டார்கள். இதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். நான் பேரணாம்பட்டு பேருந்து நிலையம் மீட்புக் குழு என்று ஒன்றை ஆரம்பித்து 2018ல் இருந்து அனைத்துக் கட்சி நிர்வாகிகளை ஒருங்கிணைத்து போராடினேன். அதுமட்டுமில்லாமல், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நீதிமன்ற உத்தரவுப்படி பேருந்து நிலையத்தை மீண்டும் பழைய இடத்துக்கே கொண்டு வந்தேன். வேலூர் மாவட்டத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் நிறையபேர் இருக்கிறார்கள். சிலர் ஒதுங்கி இருக்கிறார்கள். நான் அவர்களை விழுதுகளைத் தேடி என்ற திட்டத்தின் மூலம் சந்தித்து கட்சியில் மீண்டும் கொண்டுவர திட்டமிட்டுள்ளேன். வேலூர் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் அனைவரையும் அரவனைத்து செல்வேன்” என்று கூறினார்.

தலித் சமூகத்தைச் சேர்ந்த சுரேஷ், பேரணாம்பட்டுவில் மக்கள் பிரச்னை எதுவாக இருந்தாலும் தான் எல்லா மக்கள் போராட்டங்களையும் முன்னின்று நடத்துவதாகக் கூறுகிறார். தன்னுடைய செயல்பாடுகளைப் பார்த்து காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மாவட்ட தலைவர் பொறுப்பு அளித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தலைவர் கட்சியில் அதிகாரத்தை பரவலாக்கியிருக்கிறார். கட்சியில் உழைத்தால் பொறுப்பும் அங்கீகாரமும் கிடைக்கும் என்பது இந்த அறிவிப்பின் மூலம் ஏற்பட்டுள்ளது. புதிய தலைமுறையினருக்கு ஒரு உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாங்கள் தொடர்ந்து அதிமுக மற்றும் பாஜகவின் மக்கள் விரோத செயல்களை மக்களிடம் எடுத்துச் சொல்லி போராட்டங்களை நடத்தி வருகிறோம். மோடி அரசு வந்ததிலிருந்து விவசாயிகள், கூலி தொழிலாளிகளுக்கு எந்த வாய்ப்புகளும் இல்லாமல் போய்விட்டது. இங்கே பெரும்பாலும் தோல் தொழிற்சாலைகள்தான் அவை எல்லாம் பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி, கொரொனா பொதுமுடக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. மக்கள் அதிமுக, பாஜக மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள். மக்களின் கோபத்தை முன்வைத்து நாங்கள் தீவிரமாக தேர்தலில் பிரச்சாரம் செய்வோம்” என்று கூறினார்.

135 ஆண்டு வயதாகும் காங்கிரஸ் கட்சியில் 47 ஆண்டுகளாக காங்கிரஸ் தொண்டனாக இருக்கிறேன் என்று பெருமையாக கூறும் திருச்சியைச் சேர்ந்த ஜி.கே.முரளிதரன், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஜி.கே.முரளிதரன் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழுக்கு கூறியதாவது, “காங்கிரஸ் கட்சியில் சாமானியர்களை பொறுப்பாளர்களாக நியமித்திருப்பது காமராஜருக்கு பிறகு கே.எஸ்.அழகிரி காலத்தில்தான் நடந்துள்ளது. அறிவிக்கப்பட்ட பொறுப்பாளர்களில் 80 சதவீதம் பேர் சாமானிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். பெரிய பண பலம், அரசியல் பின்புலம் இல்லாதவர்கள். இவர்கள்தான் காங்கிரஸ் கட்சியின் பலம். தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்களையெல்லாம் அடையாளம் கண்டு பொறுப்புகளை வழங்கியுள்ளார். இது காங்கிரஸ் கட்சியில் நிகழ்ந்துள்ள பெரிய மாற்றம், பெரிய சாதனை” என்று கூறினார்.

கே.எஸ்.அழகிரி காங்கிரஸ் பொறுப்பாளர்களாக பெரிய எண்ணிக்கையில் அறிவித்திருப்பது குறித்து காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம், “காங்கிரஸ் கமிட்டி எந்த நோக்கமும் இல்லாமல் இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் கூட்டமாக பொறுப்பாளர்களை அறிவித்துள்ளது. 32 துணை தலைவர்கள், 57 பொதுச் செயலாளர்கள், 104 மாநில செயலாளர்கள் அறிவிக்கப்பட்டிருகிறார்கள். இவர்களில் யாருக்கும் எந்த அதிகாரமும் இருக்காது. பொறுப்பும் இருக்காது என்று விமர்சித்து ட்வீட் செய்துள்ளர்.

இதற்கு காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக எதிர்வினையாற்றி வருகின்றனர். இது குறித்து கார்த்தி சிதம்பரமும் விளக்கம் அளித்து, இப்படி பெரிய அளவில் பொறுப்பாளர்களை அறிவித்துள்ளது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து, ஜி.கே.முரளிதரன் கூறுகையில், நாட்டின் சுதந்திரத்துக்காக போராடிய காங்கிரஸ் கட்சியில் சாமானியர்களுக்கு பொறுப்பு அளிக்கும்போதுதான் கட்சி மீது நம்பிக்கை வரும். அந்த நம்பிக்கையை கே.எஸ்.அழகிரி அளித்துள்ளார். காங்கிரஸ் கட்சி கே.எஸ்.அழகிரி அமைத்துள்ள இந்த பாதையில் தொடர்ந்து பயணிக்க வேண்டும். அவருக்குப் பிறகும் கட்சி இதை தொடர வேண்டும். அப்போதுதான் கட்சிக்கு நல்லது. இல்லாவிட்டால், அதை நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை” என்று ஜி.கே.முரளிதரன் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியின் முடிவை தீவிரமாக ஆதரிக்கிறார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, பெரிய எண்ணிக்கையில் சாமானியர்களை கட்சி பொறுப்பாளர்களாக நியமித்திருப்பது காங்கிரஸ் தொண்டர்களுக்கு ஒரு பெரிய உற்சாகத்தையும் உத்வேகத்தையும் அளித்திருக்கிறது என்று பெரும்பாலான காங்கிரஸ் தொண்டர்கள் பாராட்டி வருகின்றனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment