Advertisment

திருநெல்வேலி திமுக.வுக்கு அசைன்மென்ட்: டார்கெட் இன்பதுரை

திமுக.வுடன் மோதலை இன்பதுரை புதுப்பித்து வந்ததால், மாவட்ட அளவில் அவரைத் தட்டிவைக்க திமுக ஆர்வம் காட்டுகிறது.

author-image
WebDesk
New Update
திருநெல்வேலி திமுக.வுக்கு அசைன்மென்ட்: டார்கெட் இன்பதுரை

மாநிலம் முழுவதுமே அதிமுக.வில் ஒரு ஹிட் லிஸ்டை தயார் செய்து வைத்திருக்கிறது திமுக. அமைச்சர்கள் வேலுமணி, ராஜேந்திர பாலாஜி எனத் தொடங்கி நீளும் அந்தப் பட்டியலில், திருநெல்வேலி பிரநிதியாக இடம் பெற்றிருப்பவர் எம்.எல்.ஏ இன்பதுரை.

Advertisment

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினரான இன்பதுரையை 2021 தேர்தலில் வீழ்த்த முன்னாள் எம்.எல்.ஏ அப்பாவுவை முழு வீச்சில் தயாராக உத்தரவிட்டிருக்கிறது திமுக தலைமை. அண்மையில் இன்பதுரையின் சொந்த ஊரான நவ்வலடியைச் சேர்ந்த முன்னாள் மாவட்டப் பஞ்சாயத்து தலைவி தேவகியை, திமுக.வில் ஸ்டாலின் முன்னிலையில் இணைத்து சபாஷ் பெற்றிருக்கிறார் அப்பாவு.

இதன் மூலமாக இன்பதுரையை அவரது பூர்வீக ஊரிலேயே வீழ்த்தியதாக புளகாங்கிதப்படுகிறது திமுக. ஆனால் அதிமுக தரப்போ, ‘மேற்படி தேவகி பல வருடங்களுக்கு முன்பே தேமுதிக.வுக்கு சென்றவர்தான். 2011 உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக வேட்பாளராக கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவியவர். அவர் போனதால், அதிமுக.வுக்கு ஒரு பாதிப்பும் இல்லை’ என்கிறது, கூலாக!

தொடர்ந்து இன்பதுரைக்கு எதிராக வேறு அஸ்திரங்களை கையில் எடுக்கிறது திமுக. குறிப்பாக அதிமுக.விலேயே சில எதிர்ப்பாளர்களை திமுக தரப்பு உசுப்பேற்றி வருவதாக சொல்கிறார்கள். முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளராக அறியப்படும் இன்பதுரைக்கு எதிராக, ஓபிஎஸ் தரப்பு பிரமுகர்கள் என கூறப்படும் சிலரை கொம்பு சீவும் பணிகள் நடந்தன.

ஆனால் இதற்கு துணை முதல்வர் ஓ.பி.எஸ்.ஸே முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். அண்மையில் அதிமுக பிரமுகர்களின் இல்ல நிகழ்ச்சிகளில் இங்கு பங்கேற்க வந்த ஓ.பி.எஸ்., கட்சிப் பிரமுகர்கள் பலரையும் அழைத்து ‘திமுக வலையில் விழாமல், ஒழுங்கா வேலையைப் பாருங்க’ என எச்சரித்துச் சென்றதாக கூறுகிறார்கள்.

உள்ளூர் நிகழ்ச்சிகளிலும்கூட ஸ்டாலினையும், கருணாநிதி குடும்பத்தையும் இன்பதுரை அதிகமாக விமர்சித்துப் பேசுவதுதான் இந்த ‘டார்கெட்’டுக்கான காரணம் என்கிறார்கள் உள்ளூர் அதிமுக.வினர். அதைத் தாண்டி, ஸ்டாலின் சென்னை மேயராக இருந்தபோதே இன்பதுரைக்கும், திமுக.வுக்குமான யுத்தம் தொடங்கிவிட்டதாகக் கூறுகிறார்கள், விவரம் அறிந்தவர்கள்.

சென்னை மேயராக இருந்த ஸ்டாலின், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து வேளச்சேரியில் வீடு கட்டியதாக ஒரு வழக்கு நீதிமன்றம் சென்றது. அந்த வழக்கில் ஸ்டாலினுக்கு எதிர்தரப்பு வழக்கறிஞராக நின்றவர், இன்பதுரை. 2016 தேர்தலில் வெறும் 49 வாக்குகள் வித்தியாசத்தில் ராதாபுரத்தில் இன்பதுரை வென்றபோது, திமுக தலைமை அதிர்ந்தது.

இன்பதுரைக்கு எதிராக தேர்தல் வழக்கை தொடுத்த முன்னாள் எம்.எல்.ஏ அப்பாவுவுக்கு திமுக வழக்கறிஞர் அணி அனைத்து வகைகளிலும் துணை நின்றது. சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த விவகாரம் தொடர்பாக மறு வாக்கு எண்ணிக்கை நடந்ததும், ‘இன்பதுரை, துன்பதுரை ஆகிவிட்டார்’ என கமெண்ட் அடித்தார் ஸ்டாலின்.

பின்னர் உச்ச நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்று வந்த இன்பதுரை, ‘நான் இப்போது பேரின்பதுரை ஆகிவிட்டேன். ஆனால் ஸ்டாலின் மீதான உச்ச நீதிமன்ற தேர்தல் வழக்கு தீர்ப்பு வரும்போது, அய்யாத்துரை என்கிற இயற்பெயரைக் கொண்ட அவர் அய்யோ துரை ஆகிவிடுவார்’ என்றார், கிண்டலாக! திமுக தலைமையை உசுப்பேற்றிய வார்த்தைகள் இவை!

கடைசியாக நடந்த சட்டமன்றக் கூட்டத் தொடரிலும் நீட் விவாதத்தில் பேசிய இன்பதுரை, நளினி சிதம்பரம் ‘நீட்’டுக்கு ஆதரவாக வாதாடியதைக் குறிப்பிட்டு திமுக- காங்கிரஸ் அணியை சாடினார். இது பின்னர் எடப்பாடி பழனிசாமி - மு.க.ஸ்டாலின் மோதலாக மாறியது. இப்படி அவ்வப்போது திமுக.வுடன் மோதலை இன்பதுரை புதுப்பித்து வந்ததால், மாவட்ட அளவில் அவரைத் தட்டிவைக்க திமுக ஆர்வம் காட்டுகிறது.

கடந்த முறை ராதாபுரத்தில் சொற்ப வாக்குகளில் வெற்றியைத் தவறவிட்ட அப்பாவுவே இந்த முறையும் வேட்பாளர் என்பதை திமுக.வும் முடிவு செய்துவிட்டது. முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பனை மாவட்டச் செயலாளராகக் கொண்டு இயங்கும் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக.வை இரண்டாகப் பிரிக்க, அண்மையில் திமுக தலைமை முடிவெடுத்தது. ஆவுடையப்பன் வசம் இருக்கும் ராதாபுரம், நாங்குனேரி தொகுதிகளை தனி மாவட்டமாக்கி முன்னாள் மாவட்டப் பஞ்சாயத்து தலைவர் கிரகாம் பெல்லை பொறுப்பாளர் ஆக்க முடிவு செய்யப்பட்டது.

கிரகாம் பெல்லும் ராதாபுரம் தொகுதியைச் சேர்ந்தவரே! தவிர, கட்சிக்குள் அப்பாவுவுக்கும், பெல்லுக்கும் அவ்வளவாக ஒத்துப் போகாது. பெல், கட்சியின் மாவட்டப் பொறுப்பாளர் ஆகும் பட்சத்தில் அவரே ராதாபுரம் வேட்பாளர் ஆகும் வாய்ப்பு இருந்தது. இதை தலைமையின் கவனத்திற்கு சிலர் எடுத்துச் சென்றதும், உடனடியாக அந்த நியமனத்தையே நிறுத்தி வைத்தது திமுக தலைமை. அப்பாவுவுக்கு திமுக தலைமை கொடுத்து வரும் முக்கியத்துவத்தின் அடையாளம் இது. இன்பதுரையை வீழ்த்துவதில் திமுக தலைமை காட்டும் வேகத்தின் அடையாளம் இது என்றும் கூறலாம்.

இவை ஒருபுறம் இருக்க... ஜெயலலிதாவின் வழக்கறிஞராக இயங்கிய ஜோதி, திடீரென திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசாவை காரசாரமாக விமர்சித்ததை திமுக தலைமை எதிர்பார்க்கவே இல்லை. உயர் நீதிமன்றத்தில் இன்பதுரையின் சீனியர்தான் ஜோதி. எனவே இதில் இன்பதுரையின் கைங்கர்யம் இருக்குமோ? என்கிற சந்தேகமும் திமுக தரப்புக்கு இருப்பதாக கூறுகிறார்கள்.

இதைத் தொடர்ந்து, திருநெல்வேலி கிழக்கு மாவட்டச் செயலாளரான ஆவுடையப்பனை தொடர்பு கொண்ட திமுக தலைமை, ‘அம்பாசமுத்திரத்தில் நீங்கள் ஜெயிப்பது எவ்வளவு முக்கியமோ, அதேபோல ராதாபுரத்தில் இன்பதுரையின் தோல்வியும் முக்கியம்’ என கறாராக உத்தரவிட்டிருப்பதாக சொல்கிறார்கள்.

ராதாபுரம் தொகுதியில் குடிநீர் பிரச்னைகள் முதல், நதிநீர் இணைப்புக் கால்வாய் திட்டம் வரை விரல் நுனியில் வைத்துப் பேசுகிறவர் அப்பாவு எம்.எல்.ஏ. அவரை எதிர்க்கும் இன்பதுரை தன் தரப்புப் பணிகளாக அணைக்கட்டுகள், சாலைகள், புதிய தாலுகா, நதிநீர் இணைப்புத் திட்டங்கள், இரண்டு கல்லூரிகள், வேளாண்மை கிடங்குகள் என பட்டியல் இடுகிறார். மீண்டும் ஒரு கடும் போட்டிக்கு ராதாபுரம் தயாராகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"

 

 

Dmk Admk Tirunelveli
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment