Advertisment

Tamil News Today: கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் உடலுக்கு இன்று இறுதி அஞ்சலி

Tamil Nadu Top News Today, Tamil Nadu Latest News: தமிழ்நாட்டில் 22.07.2022 இன்று நடந்த முக்கிய நிகழ்வுகளை சிறிய குறிப்பாக இங்கே காணலாம்

author-image
WebDesk
New Update
Tamil News, Tamil News Today Latest Updates

Tamil News updates

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் இருந்து மாணவியின் உடலை அவரது பெற்றோர் பெற்றுக் கொண்டனர். மாணவியின் உடல், அவரது சொந்த ஊரான பெரிய நெசலூரில் இறுதிச் சடங்கு செய்யப்படுகிறது.

Advertisment

மாணவியின் இறுதிச் சடங்கில், அவரது உறவினர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் மட்டுமே பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வெளியூர் மக்கள் மற்றும் இயக்கங்களை சார்ந்தவர்கள் இறுதிச் சடங்கில் பங்கேற்கக் கூடாது என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

செஸ் ஒலிம்பியாட்- முதலமைச்சர் ஆலோசனை

செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடத்துவது தொடர்பாக தலைமை செயலகத்தில் நிதித்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காலை 10 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்துக்கு பிரிவுபசார விழா

நாட்டின் 14ஆவது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிரிவுபசார விழா இன்று டெல்லியில் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ள முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்கிறார்.

புதிய குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரௌபதி முர்மு ஜூலை 25ஆம் தேதி பதவியேற்றுக் கொள்கிறார்.

அமெரிக்காவில் போலியோ

வளர்ந்த நாடான அமெரிக்காவில் கிட்டத்தட்ட 9 ஆண்டுகளுக்கு பின்னர் போலியோ பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன என அந்நாட்டு சுகாதார துறை அதிகாரிகள் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளனர்.

காவிரி மேலாண்மை கூட்டம்

காவிரி மேலாண்மை வாரியத்தின் 16ஆவது கூட்டம் இன்று நடைபெறுகிறது.



  • 22:09 (IST) 22 Jul 2022
    மாணவியின் 2 பிரேத பரிசோதனை முடிவுகளையும் ஆய்வு செய்ய குழு அமைப்பு

    உயிரிழந்த கள்ளகுறிச்சி மாணவியின் 2 பிரேத பரிசோதனை முடிவுகளையும் ஆய்வு செய்ய உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து 3 ஜிப்மர் மருத்துவர்கள் கொண்ட ஆய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஜிப்மர் தடயவியல் துறை பேராசிரியர்கள் குஷ குமார் சாஹா, சித்தார்த் தாஸ், அம்பிகா பிரசாத் பத்ரா ஆகியோர் குழுவில் இடம்பெற்றுள்ளனர்



  • 22:07 (IST) 22 Jul 2022
    மாணவி ஸ்ரீமதியின் உடல் நாளை அடக்கம்

    கள்ளகுறிச்சி பள்ளி மாணவியின் இறுதிச்சடங்கு நாளை அவரது சொந்த ஊரான கடலூர், பெரியநெசலூரில் நாளை நடைபெற உள்ள நிலையல், இந்த இறுதி சடங்கில் வெளியூர் ஆட்கள் பங்கேற்க கூடாது என பெரியநெசலூரில் போலீசார் ஒலிப்பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.



  • 20:24 (IST) 22 Jul 2022
    தேசிய விருதுகள் பெற்ற திரைப்படங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

    தேசிய விருதுகள் பெற்ற திரைப்படங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். சமூகப் பொறுப்புணர்வு மிகுந்த முற்போக்கான படைப்புகள் திரைத்துறையை ஆளட்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.



  • 20:09 (IST) 22 Jul 2022
    எனக்கு ஆத்ம திருப்தி கொடுத்த திரைப்படங்கள் ராகவேந்திரா மற்றும் பாபா - ரஜினிகாந்த்

    சென்னை, நுங்கம்பாக்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் எனக்கு ஆத்ம திருப்தி கொடுத்த திரைப்படங்கள் ராகவேந்திரா மற்றும் பாபா படங்கள்தான் என்னுடைய ரசிகர்கள் சன்னியாசியாக மாறியுள்ளனர்; ஆனால் நான் இன்னும் நடிகராக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.



  • 19:14 (IST) 22 Jul 2022
    ஈபிஎஸ் தரப்புக்கு சசிகலா கண்டனம்

    சுயநலத்திற்காக நாடளுமன்றத்தில் அதிமுகவின் அங்கீகாரத்தையே அழிக்க நினைக்கிறார்கள் அதிமுகவின் ஒரே எம்.பி.யான ரவீந்திரநாத் செயல்படுவதை தடுக்கும் நடவடிக்கைகளை ஏற்க முடியாது என ஈபிஎஸ் தரப்புக்கு சசிகலா கண்டனம் தெரிவித்துள்ளார்.



  • 18:34 (IST) 22 Jul 2022
    கள்ளக்குறிச்சியில் சூரையாடப்பட்ட பள்ளியை மீண்டும் திறக்க நடவடிக்கை

    கள்ளக்குறிச்சியில் சூரையாடப்பட்ட பள்ளியை மீண்டும் திறக்க நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது தீக்கிரையான சான்​றிதழ்களை வழங்க நடவடிக்கை மாணவர்கள் தொடர்ந்து படிக்கவும் ஆலோசித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஆட்சியர் ஷ்ரவன் குமார் ஜடாவத் கூறியுள்ளார்.



  • 18:05 (IST) 22 Jul 2022
    68வது தேசிய திரைப்பட விருதுகள்: சூரரைப் போற்று 'பொம்மி'க்கு விருது

    சூரரைப் போற்று படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பொம்மி கதாபாத்திரத்தில் நடித்த அபர்ணா முரளிக்கு சிறந்த நடிகைக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.



  • 17:50 (IST) 22 Jul 2022
    ஐயப்பனும் கோஷியும் படத்திற்கு 4 விருதுகள்!

    சிறந்த இயக்குநர், சண்டை காட்சி, துணை நடிகர், பின்னணி பாடகி ஆகிய பிரிவுகளிலும் ஐயப்பனும் கோஷியும் படத்திற்கு விருதுகள் அறிவிப்பு



  • 17:47 (IST) 22 Jul 2022
    யோகி பாபு நடித்த மண்டேலா படத்திற்கு தேசிய விருது!

    யோகி பாபு நடித்த மண்டேலா படத்திற்கு சிறந்த வசனத்திற்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.



  • 17:34 (IST) 22 Jul 2022
    68வது தேசிய திரைப்பட விருதுகள்: சச்சிதானந்தனுக்கு சிறந்த இயக்குநர் விருது

    'ஐயப்பனும் கோஷியும்' படத்திற்காக சச்சிதானந்தனுக்கு சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.



  • 17:12 (IST) 22 Jul 2022
    68வது தேசிய திரைப்பட விருதுகள்: சிறந்த துணை நடிகர் விருது!

    ஐயப்பனும் கோஷியும் படத்திற்காக பிஜூ மேனனுக்கு சிறந்த துணை நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.



  • 17:01 (IST) 22 Jul 2022
    68வது தேசிய திரைப்பட விருதுகள்!

    சூரரை போற்று படத்திற்காக சிறந்த நடிகராக சூர்யா தேர்வு.

    சூரரை போற்று’ திரைப்படத்திற்காக ஜி.வி.பிரகாஷுக்கு சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருது

    மண்டேலா’ படத்திற்கு சிறந்த வசனத்திற்கான தேசிய விருது



  • 16:41 (IST) 22 Jul 2022
    68 ஆவது தேசிய திரைப்பட விருதுகள்: மத்திய அரசு அறிவிப்பு!

    68 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, 2020ம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கு பல்வேறு பிரிவுகளில் விருதுகளை அறிவிக்கிறது மத்திய அரசு.



  • 16:25 (IST) 22 Jul 2022
    செஸ் ஒலிம்பியாட்: பாதுகாப்பு பணியில் 4 ஆயிரம் போலீசார்; டி.ஜி.பி உத்தரவு!

    44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகின்ற ஜூலை 28-ந்தேதி முதல் ஆகஸ்ட் 10-ந்தேதி வரை மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது.

    இதனை முன்னிட்டு, வரும் 25-ந்தேதி முதல் ஆகஸ்ட் 10-ந்தேதி வரை மொத்தம் 100 காவல் ஆய்வாளர்கள், 380 காவல் உதவி ஆய்வாளர்கள், 3,520 காவலர்கள் என மொத்தம் 4,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    மொத்தம் 17 நாட்களுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு வழங்க சிறப்பு படியாக, ஒரு கோடியே 70 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக டி.ஜி.பி. சைலேந்திர பாபு அறிவித்துள்ளார்.



  • 15:54 (IST) 22 Jul 2022
    +1 துணைத் தேர்வு: 26ம் தேதி முதல் ஹால்டிக்கெட் பதிவிறக்கம்!

    +1 துணைத் தேர்வுகளுக்கான ஹால்டிக்கெட்டை வரும் 26ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் என்றும், +1 துணைத் தேர்வு ஆகஸ்ட் 2ம் தேதி முதல் 10ம் தேதி வரை நடைபெற உள்ளது என்றும் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.



  • 15:30 (IST) 22 Jul 2022
    இபிஎஸ் கடிதத்தை நிராகரிக்க கோரி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு ரவீந்தரநாத் எம்.பி. கடிதம்!

    எடப்பாடி பழனிச்சாமி தன்னை கட்சியிலிருந்து நீக்கியதற்கு எந்த ஒரு முகாந்திரமும் இல்லை என்றும், அவர் கூட்டிய பொதுக்குழுவிற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குகள் உள்ளன என்றும், இபிஎஸ் கடிதத்தை நிராகரிக்க வேண்டும் என்றும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு ரவீந்தரநாத் எம்.பி. கடிதம் எழுதியுள்ளார்.



  • 15:28 (IST) 22 Jul 2022
    3D முறையில் ஸ்கேன் செய்யப்படும் பள்ளி!

    வன்முறைக்குள்ளான கள்ளக்குறிச்சி பள்ளியை, சிறப்பு புலனாய்வு குழு 3D ஸ்கேனர் மூலம் ஸ்கேன் செய்து வருகின்றனர். ஸ்கேன் கருவி மூலம் குற்றவாளிகளின் தடயங்கள் ஸ்கேன் செய்யப்பட்டு வருகின்றனர்



  • 15:00 (IST) 22 Jul 2022
    அதிமுக அலுவலக மோதல் வழக்கு.. நீதிமன்றம் உத்தரவு

    அதிமுக தலைமை அலுவலக மோதல் வழக்கில், காவல்துறை பதிலளிக்கும் வரை அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் இபிஎஸ் ஆதரவாளர்களை கைது செய்யக் கூடாது என சென்னை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



  • 14:43 (IST) 22 Jul 2022
    சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது

    சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. தேர்வு முடிவுகளை http://cbse.results.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். நாடு முழுவதும் 20,93,978 மாணவர்கள் தேர்வு எழுதியிருந்த நிலையில் 19,76,668 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.



  • 14:20 (IST) 22 Jul 2022
    அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்-க்கு கொரோனா

    வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதியான நிலையில் விருதுநகரில் உள்ள தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்.



  • 13:57 (IST) 22 Jul 2022
    உக்ரைன் மாணவர்கள் கேள்விக்கு அமைச்சரின் பதில்

    வெளிநாடுகளில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்களை இந்திய கல்லூரிகளில் சேர்க்க விதிகளில் இடமில்லை என உக்ரைன் மாணவர்களின் கல்வி தொடர்பான கேள்விக்கு சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார் பதில் அளித்துள்ளார்.



  • 13:46 (IST) 22 Jul 2022
    ஈஷா மையத்தில் இளைஞர் தற்கொலை.. போலீஸ் விசாரணை

    கோவை ஈஷா யோகா மையத்தில் தற்கொலை செய்து கொண்ட ஆந்திர இளைஞர் ரமணா(28) எழுதி வைத்திருந்த கடிதத்தை கைப்பற்றி போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



  • 13:29 (IST) 22 Jul 2022
    இன்று கனமழைக்கு வாய்ப்பு

    தமிழகத்தில் இன்று திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி, கரூர், நாமக்கல் ஆகிய 23 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது



  • 12:54 (IST) 22 Jul 2022
    பொன்மாணிக்கவேலுக்கு எதிரான வழக்கு முக்கிய உத்தரவு

    சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக இருந்த பொன் மாணிக்கவேலுக்கு எதிரான குற்றச்சாட்டுகள். சிபிஜ விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. குற்றவாளிகளை தப்ப வைக்க போலீசார் மீதும், அறநிலைய துறையினர் மீதும் பொய் வழக்கு பதிந்ததாக குற்றச்சாட்டு.



  • 12:52 (IST) 22 Jul 2022
    மாணவியின் உடலை நாளை காலை 6 மணிக்கு பெற்றுக்கொள்கிறோம்- பெற்றோர் தரப்பு

    மாணவியின் உடலை நாளை காலை 6 மணிக்கு பெற்றுக்கொள்கிறோம். சென்னை உயர் நீதிமன்றத்தில் மாணவியின் பெற்றோர் தரப்பு சம்மதம். நாளை காலை உடலை பெற்றுக் கொண்டு, மாலைக்குள் இறுதிச் சடங்கை முடிக்க நீதிமன்றம் அறிவுறுத்தல்.



  • 12:37 (IST) 22 Jul 2022
    அதிமுக ஆட்சியின் நிர்வாக சீர்கேடு மின் கட்டணத்தை உயர்த்த காரணம்: அமைச்சர் செந்தில் பாலாஜி

    மத்திய அரசின் அழுத்தம், அதிமுக ஆட்சியின் நிர்வாக சீர்கேடு காரணமாகவே மின் கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலை. பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில்தான் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் மின் கட்டணம் குறைவு.

    - அமைச்சர் செந்தில் பாலாஜி



  • 12:35 (IST) 22 Jul 2022
    மக்களவை ஒத்திவைப்பு

    விலைவாசி உயர்வுக்கு எதிராக மக்களவையில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளி. எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு.



  • 11:41 (IST) 22 Jul 2022
    ஒரு மாதத்திற்குள் அறிக்கை: ஜிப்மருக்கு உத்தரவு

    மாணவி ஸ்ரீமதியின் பிரேத பரிசோதனை அறிக்கைகளை ஆய்வு செய்ய 3 பேர் கொண்ட ஜிப்மர் மருத்துவக்குழு அமைப்பு. ஒரு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய ஜிப்மர் மருத்துவக்குழுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.



  • 11:19 (IST) 22 Jul 2022
    உடலை நாளைக்குள் பெற்றுக்கொள்ள வேண்டும் - நீதிமன்றம் உத்தரவு

    மாணவியின் உடலை நாளை காலை 11 மணிக்குள் பெற்று கொள்ள வேண்டும் என்றும் இல்லாவிட்டால் காவல் துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் - நீதிபதி



  • 10:57 (IST) 22 Jul 2022
    திருச்சி சிவா மருத்துவமனையில் அனுமதி

    திமுக எம்பி சிவா உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள ஆர்எம்எல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.



  • 10:51 (IST) 22 Jul 2022
    இலங்கைக்கு புதிய பிரதமர்

    இலங்கை புதிய பிரதமராக தினேஷ் குணவரத்னே பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு அதிபர் ரணில் விக்கிரமசிங்கே பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

    இவர் மகிந்த ராஜபக்சவின் பொதுஜன பெர்முடா கட்சியை சேர்ந்தவர் ஆவார். இதற்கு முன்னர் அமைச்சராக பதவி வகித்துள்ளார்.



  • 10:01 (IST) 22 Jul 2022
    சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு

    சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. மாணவ- மாணவியர் தேர்வு முடிவுகளை cbse.results.nic.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.



  • 09:57 (IST) 22 Jul 2022
    பெட்ரோல், டீசல் விலை

    சென்னையை பொருத்தமட்டில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. பெட்ரோல் லிட்டர் ரூ.102.63 ஆகவும், டீசல் விலை ரூ.94.24 ஆக தொடர்கிறது.



Tamil Nadu Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment