Tamil Nadu news today updates : தமிழகம் உட்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பது குறித்து முதல்வர் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. முதல்வர் தலைமையில், தலைமைச் செயலகத்தில் நடைபெறூம் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். இது தொடர்பான முழுமையான செய்திகளைப் படிக்க
ராஜ்யசபா தேர்தல்
தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில் போட்டியிட திமுகவினர் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர். திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ் மற்றும் என்.ஆர். இளங்கோ ஆகியோர் இன்று காலை வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளனர். வேட்புமனு தாக்கல் செய்ய 13ம் தேதி கடைசி நாளாகும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Highlights
2017-ம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.-க்கள் வாக்களித்தது தொடர்பாக அவர்களிடம் விளக்கம் கேட்டு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுத்துள்ளார்.
அமைச்சர் ஜெயக்குமார்: தமாகா-விற்கு எம்.பி. சீட் வழங்கியது ஆட்சி மன்றக்குழு எடுத்த முடிவு. அதிமுக-தேமுதிக கூட்டணி உறுதியாக உள்ளது; கூட்டணியில் எந்தப் பிரச்னையும் இல்லை. கூட்டணி கட்சிகளை திமுக உதாசினப்படுத்துவது போல் அதிமுக செய்யாது. அரசியலில் கருத்து மோதல் இருக்கலாம்; காழ்ப்புணர்ச்சி மோதல் இருக்கக்கூடாது” என்று கூறினார்.
டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு வழக்கில் லஞ்சம் கொடுத்து தேர்ச்சி பெற்றதாக கைது செய்யப்பட்ட 3 பேருக்கு ஜாமீன் மறுத்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ பெரியசாமி மீதான தேர்தல் விதிமீறல் வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விழுப்புரத்தில் அரசியல் ஆய்வுரை நிகழ்ச்சியில் பேசிய காந்திய மக்கள் கட்சி தலைவர் தமிழருவி மணியன், ரஜினி தன்னிடம் மாற்று அரசியல் என்று கூறுகிறீர்கள். மாற்று அரசியலின் முதல் படியிலாவது நான் கால்வைக்க வேண்டாமா என்று கேட்டுவிட்டு கட்சியையும் ஆட்சியையும் தனித்தனியாக பிரிக்க ரஜினி திட்டமிட்டுள்ளதாக கூறினார்.
ஆஃப்கானிஸ்தானின் புதிய அதிபர் அஷ்ரஃப் கானி பதவியேற்கும் நிகழ்ச்சியின்போது தலைநகர் காபுலில் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டுள்ளது.
அஷ்ரஃப் கானிக்கு போட்டியாக அப்துல்லா என்பவரும் அதிபராக சுயமாக பதவியேற்றுக்கொண்டதால் அந்நாட்டு அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கேரளாவில் பறவைக்காய்ச்சல் பரவிவரும் காரணத்தால் கொடியாத்தூர், வேங்கேரி, சாத்தமங்கலம் ஆகிய மூன்று பகுதிகளில் 20,000 கோழிகள் அழிக்கப் பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது
நாசா நடத்தும் போட்டியில் பங்கேற்று அமெரிக்கா செல்லயிருக்கும் , அருப்புக்கோட்டை எஸ்.பி.கே பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்த எஸ். லட்சுமி பிரியா அவர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளை சார்பாக ரூபாய் 1 லட்சம் வழங்கப்படும் என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துதுள்ளார்.
கொரொனோ வைரஸ் பரவுவதை தடுக்கும் பொருட்டு, அரசு பள்ளிகளில் இருக்கும் பயோமெட்ரிக் முறையில், வரும் 31 ஆம் தேதி வரை வருகை பதிவேடு செய்ய வேண்டாம் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும், இருமல், தும்மல் போன்ற அறிகுறிகள் இருந்தால் மாணவர்கள் பள்ளிக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சி.ஏ.ஏ போராட்டங்களில் பங்கேற்றவர்களின் புகைப்படங்கள் மற்றும் முகவரி உள்ளிட்ட தகவல்களை பேனர்களாக வைத்தது அநியாயத்தின் உச்சம் என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் கருத்து கூறியுள்ளது. மேலும் யோகி ஆதித்யநாத் அரசுக்கு கடுமையான கண்டனங்களும் இதற்காக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட இருக்கும் முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
சமூக நலப்பணிகளை பாராட்டி தமிழக அரசு சார்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அவ்வையார் விருதினை வழங்கினார். திருவண்ணாமலையை சேர்ந்த ரா. கண்ணகி என்பவருக்கு அவ்வையார் விருது வழங்கப்பட்டது.
சென்செக்ஸ் ஒரே நாளில் 2300 புள்ளிகள் சரிவடைந்துள்ளாது. நிஃப்டியும் ஒரே நாளில் 650 புள்ளிகள் குறைவு. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை சரிவால் பங்கு சந்தையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
மாநில திட்டக்குழு துணைத்தலைவராக முன்னாள் நிதி அமைச்சர் பொன்னையன் நியமனம். இந்த பதவி கேபினட் அந்தஸ்துக்கு நிகரானது. முன்னதாக, கே.பி. முனுசாமி ,மு.தம்பிதுரை , ஜி.கே. வாசன் ஆகியோரை மாநிலங்களவை உறுப்பினர்களாக அதிமுக அறிவித்தது.
தமிழக மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில் போட்டியிட இருக்கும் அதிமுக வேட்பாளர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி, அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் மற்றும் மக்களவை முன்னாள் துணை சபாநாயகர் மு.தம்பிதுரை மற்றும் கூட்டணிக் கட்சிகளில் இடம் பெற்றிருக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் ஆகியோர் எம்.பி. பதவிகளுக்கு போட்டியிடுகின்றனர்.
திமுகவின் பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் மறைந்ததை ஒட்டி கிளைக்கழக தேர்தல்கள் ஒருவாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக திமுக அறிக்கை வெளியிட்டுள்ளது.
ராஜ்யசபை உறுப்பினர்களுக்கான தேர்தலில் போட்டியிட திமுக வேட்பாளர்கள் திருச்சி சிவா, என்.ஆர். இளங்கோ, மற்றும் அந்தியூர் செல்வராஜ் உள்ளிட்டோர் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
ஜம்மு – காஷ்மீரின், ஷோபியன் மாவட்டத்தின் காஜ்புரா ரீபன் பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இந்திய குடியரசுக் கட்சித் தலைவர் டாக்டர் செ.கு.தமிழரசன் ரஜினிகாந்தை சந்தித்து பேசியுள்ளார். சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் வீட்டில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் தேர்தல் குறித்தும், கூட்டணி தொடர்பாகவும் இருவரும் ஆலோசனை செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் பிகானேர் காவல்நிலையத்தின் பின்புறம் நிறுத்தப்பட்டிருந்த ஜீப் மீது மர்மநபர்கள் குண்டு வீசிச் சென்றனர். இந்த நாச வேலையில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
தேனி மாவட்ட ஆவின் பால் கூட்டுறவு சங்க தலைவராக ஓ. ராஜா போட்டியின்றி தேர்வாகியுள்ளார்.
சட்டப் பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு இன்று நடைபெற்றது. க. அன்பழகன், கே.பி.பி.சாமி, காத்தவராயன் ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு புதன்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது.
கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து சட்டப்பேரவையில் பேச வேண்டும் என்றும், எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று திமுக சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
ஒரு பேரல் கச்சா எண்ணெய்யின் விலை 31.02 டாலராக விற்பனை செய்யப்பட்டு வருகிறது; ச்சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை 30% குறைந்துள்ளது. ஒபெக் ஒப்பந்தத்தை ரஷ்யா நிராகரித்த காரணத்தாலும், கொரோனா எதிரொலியாலும் 29 ஆண்டுகள் இல்லாத அளவில் மிகப் பெரிய சரிவைக் கண்டுள்ளது கச்சா எண்ணெய்.
தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு தற்போது துவங்கி நடைபெற்றுக் கொண்டே உள்ளது.
ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் தலைமை ஆணையராக சஞ்சய் கோத்தாரியை நியமனம் செய்தது மத்திய அரசு. அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது காங்கிரஸ் கட்சி. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் அதீர் ரஞ்சன் சௌத்ரி பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் பதவிக்கு உயர்நிலை நியமனக்குழுவால் அவர் பரிசீலிக்கப்படவோ, பரிந்துரைக்கப்படவோ இல்லை என்றும் அந்த பதவிக்காக சஞ்சய் கோத்தாரி விண்ணப்பிக்க கூட இல்லை என்று மேற்கோள் காட்டியுள்ளார்.
பறவைக்காய்ச்சல் காரணமாக நீலகிரிக்கு கோழிகளை ஏற்றி வரும் வாகனங்களுக்கு தடை விதித்து அறிவித்துள்ளார் அம்மாவாட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீலகிரி – கேரளா எல்லையில் உள்ள 5 சோதனை சாவடிகளிலும், வாகனங்களுக்கு நோய் தடுப்பு மருந்து தெளிக்கபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம், தமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை கோரும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது மாஃபா பாண்டியராஜன், துணை முதல்வர் ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தனர். அரசுக்கு எதிராக ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 பேர் வாக்களித்த விவகாரத்தில் விளக்கம் கேட்டு சட்டப்பேரவை தலைவர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்ட ஆம்பூர் அருகே வீட்டில் கள்ளநோட்டு அச்சடித்த இரண்டு நபர்களை தமிழக மற்றும் மகாராஷ்ட்ரா காவல்துறையினர் கைது செய்தனர். ரூ. 7,55,700 கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 104.6 அடியாக உள்ளது. நீர் இருப்பு – 70.9 டிஎம்சி ஆகும். நீர்வரத்து – 116 கனஅடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் – 1000 கனஅடியாக உள்ளது.
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 25காசுகள் குறைந்து ரூ.73.33-க்கும், டீசல் விலை 26 காசுகள் குறைந்து 1 லிட்டர் ரூ.66.75க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.