Tamil Nadu News Updates: கோவை மாவட்டம் மதுக்கரை அருகே தனியார் குடோனில் பதுங்கி இருந்து வனத்துறையினருக்கு 5 நாள்களாக போக்கு காட்டிய சிறுத்தைப்புலி சிக்கியுள்ளது. கூண்டுக்குள் வைக்கப்பட்ட உணவை எடுக்க வந்த போது பிடிப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா கேட் பகுதியில் நேதாஜி சிலை
டெல்லியில் உள்ள இந்தியா கேட் பகுதியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலை நிறுவப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.பிரதமரின் அறிவிப்புக்கு, மகள் அனிதா போஸ், நேதாஜியின் பேரன்கள் சுகதா போஸ் மற்றும் சந்திர குமார் போஸ் ஆகியோர் பாராட்டி உள்ளனர்.
பெட்ரோல், டீசல் அப்டேட்
சென்னையில் 79 ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. பெட்ரோல் லிட்டர் 101.40 ரூபாய்க்கும், டீசல் 91.43 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
கொரோனா அப்டேட்
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அமெரிக்காவில் 6.76 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரான்ஸில் 4 லட்சம் பேர் , இந்தியாவில் 3.35 லட்சம் பேர், இத்தாலியில் 1.79 லட்சம் பேர், பிரேசிலில் – 1.68 லட்சம் பேர், ஸ்பெயினில் – 1.41 லட்சம் பேர், ஜெர்மனியில் – 1.38 லட்சம் பேர், அர்ஜென்டினாவில் – 1.18 லட்சம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொடரை கைப்பற்றிய தென் ஆப்பிரிக்கா
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் வென்று தொடரை கைப்பற்றியது தென் ஆப்பிரிக்கா. 288 ரன் இலக்கை எளிதாக சேசிங் செய்து வெற்றிப்பெற்றது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
வடக்கு பாகிஸ்தான் நிலப்பரப்பில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி எதிரொலி வடமேற்கு இந்தியாவில் நாளை மற்றும் நாளை மறுநாள் புழுதி புயல் வீச வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நடப்பாண்டின் ஐபிஎல் தொடர் மார்ச் இறுதியில் தொடங்கி மே இறுதி வரை நடைபெறும் என்றும் தொடர் முழுவதும் இந்தியாவில் நடத்துவதில்தான் உறுதியாக உள்ளோம் என்றும் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா கூறியுள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி வாக்குச்சாவடிகள், வாக்கு எண்ணும் மையங்களில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே ஒலிப்பெருக்கிகளுக்கு அனுமதி என்றும், வேட்பாளர்கள் செலுத்த வேண்டிய டெபாசிட் தொகை இரட்டிப்பாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர் மற்றும் கட்சி பெயரில் சுவரொட்டி ஒட்ட தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மேலும் 30,744 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனாவிலிருந்து இன்று மேலும் 23,372 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளது. தற்போது 1.94 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்
5 மாநில தேர்தல் – பிரசாரம், பேரணிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் ஜனவரி 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பொதுக்கூட்டங்களில் 500 பேர் வரை பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், வீடுவீடாக பிரசாரம் மேற்கொள்வதற்கு 10 பேருக்கு அனுமதி அளித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கேரளாவில் ஒரேநாளில் 45,136 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தொற்று பாதிப்புக்கு இன்று 70 பேர் பலியாகியுள்ள நிலையில், கேரளாவில் கொரோனா தொற்றுக்கு 2.47 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்
நடிகை பாலியல் வழக்கில் திலீப்பை கைது செய்ய ஜன.27 வரை இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், நடிகர் திலீப்பிடம் 3 நாட்கள் விசாரணை நடத்த குற்றப்பிரிவுக்கு கேரள உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் தலைவராக பூச்சி எஸ்.முருகன் அவர்களை நியமித்து மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். அதேபோல் பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழக தலைவராக துறைமுகம் காஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
குடியரசு தின விழாவின் நிறைவில் இசைக்கப்படும் ’Abide with me’ என்ற காந்தியின் விருப்ப பாடலை நீக்கியது மத்திய அரசு. 2020ல் பாடல் நீக்கப்பட்ட போது கடும் எதிர்ப்புகள் எழுந்ததால் 2021ல் பாடல் இடம்பெற்றது; தற்போது மீண்டும் இந்தாண்டு பாடல் நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தஞ்சையில் மாணவி விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், நீதிமன்ற உத்தரவுப்படி மாணவியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து மாணவியின் உடல் சொந்த ஊரான அரியலூருக்கு கொண்டு செல்லப்படுகிறது
2022-ம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க உள்ள வீரர்களின் பட்டியல் தற்போது பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இதில் டி20 கிரிக்கெட் ஜாம்பவான் கிறிஸ் கெய்ல் பெயர் இடம்பெறவில்லை. ஏலத்தில் பங்கேற்க அவர் விண்ணப்பிக்காததால், அவரது பெயர் இடம்பெறவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனால் நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடரில் கிறிஸ் கெய்ல் விளையாடமாட்டார் என்று கூறப்படுகிறது. இந்த தகவல் கெய்ல் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரை இந்தியாவிலேயே நடத்த பிசிசிஐ முடிவு என தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக மும்பை மற்றும் புனேவில் பார்வையாளர்களின்றி போட்டியை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
உ.பி சட்டமன்ற தேர்தலில் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கர்ஹால் சட்டமன்றத் தொகுதியில் போட்டி என அறிவிக்கப்பட்டுள்ளது. உ.பி.யில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்ற முனைப்பில் நானும், என் கட்சியினரும் போட்டியிடுகிறோம் என அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்
வாடகை பாக்கி ரூ.13.39 லட்சத்தை 2 வாரங்களில் பசுபதீஸ்வரர் கோயில் நிர்வாகத்துக்கு செலுத்த வேண்டும். வாடகையை செலுத்தாவிடில் ஆக்கிரமிப்பாக கருதி நடவடிக்கை எடுக்கப்படும் என சேலம் – மேச்சேரி பேரூராட்சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது
மும்பை டார்டியோ கட்டிடத்தில் நிகழ்ந்த தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 2 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
மேகதாது அணை உள்ளிட்ட நீர் பங்கீட்டு விவகாரங்கள் தொடர்பாக, கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில், சட்ட வல்லுனர்கள் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
இட ஒதுக்கீடு என்பது தகுதி – திறமைக்கான முரண்பாடாக இல்லாமல் அனைவருக்கும் பங்கிட்டு அளிக்கும் உரிய ஏற்பாடே!'' என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு என்பது திராவிடர் இயக்கமும், தந்தை பெரியாரும் கூறி வந்தவையே. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இத்தீர்ப்பை வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதிகளைப் பாராட்டுகிறோம் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ஜம்மு-காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பியவுடன், மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என மக்களவையில் உறுதி அளித்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
கோவையில் தனியார் குடோனில் பதுங்கியிருந்த சிறுத்தை புலியை இன்று பத்திரமாக பிடித்த வனத்துறையினர் அதை, பொள்ளாச்சி டாப் ஸ்லிப் வனப்பகுதியில் விட்டனர்.
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை முன்னிட்டு, நாளை ஆம்னி பேருந்துகள் இயங்காது என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
டிஜிட்டல் வடிவில் இந்தியா ஒரு புரட்சியை கண்டு வருகிறது. டிஜிட்டல் உட்கட்டமைப்பு ஒவ்வொரு கிராமத்தையும் சென்றடைய வேண்டும். அரசின் சேவைகள் மக்களுக்கு நேரடியாக அவர்களின் வீடுகளுக்கே சென்றடைய வேண்டும். எந்தவொரு மாவட்டமும் பின்தங்கி விடக் கூடாது. மத்திய, மாநில அரசுகள் ஒன்றிணைந்து இந்த சவாலை சந்திக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்
தமிழகத்தில் நாளை முழு ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
செம்மொழி சிறப்புகளை உலகெங்கிலும் கொண்டு செல்லும் வகையில், முதல் கட்டமாக தென்கிழக்கு ஆசிய நாட்டிலுள்ள 5 பல்கலை,. செம்மொழி தமிழ் இருக்கை அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ரயிலில் சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், சத்தமாக பேசினாலோ, அதிக ஒலியுடன் பாட்டு கேட்டாலோ அபராதம் விதிக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் கைதாகி, குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்தனர். இந்நிலையில், ராஜகோபாலனை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்ட நபர்கள் தங்களுக்கான பூஸ்டர் டோஸை 3 மாதங்கள் கழித்த பிறகே செலுத்த வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
மேடவாக்கம் – சோழிங்கநல்லூர் சாலை இனி செம்மொழி சாலையாக செயல்படும் என்று கலைஞர் மு. கருணாநிதி செம்மொழி தமிழ் விருதுகள் வழங்கும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்
குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் புதிய திட்டங்கள் தொடக்கம், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை அலுவலக கட்டடம், சிவகங்கை மாவட்டம், கழனிவாசல் கிராமத்தில் புதிய வீடுகள் கட்டும் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக முதல்வர் துவங்கி வைத்தார்.
பண்பாட்டின் அடையாளமாக தமிழ் திகழ்கிறது. தமிழை செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என்ற கனவை நிறைவேற்றியவர் கருணாநிதி. தமிழ் என்றாலே இனிமை தான் என்று முதல்வர் பேச்சு
செம்மொழி விருதை அதிமுக அரசூ வழங்கவில்லை என்பதை நான் அரசியலாக்க விரும்பவில்லை. தமிழுக்கும், தமிழறிஞர்களுக்கும் பெருமை சேர்த்தது திமுக ஆட்சி தான் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
அடுத்த 30 ஆண்டுகளில் கடலில் உள்ள மீன்களின் அளவைக் காட்டிலும் ப்ளாஸ்டிக் குப்பைகளின் எண்ணிக்கை அதிக அளவில் இருக்கும் என்று பிரிட்டிஷ் சூழலியல் ஆய்வு நிறுவனம் எச்சரிக்கை செய்துள்ளது.
அறிகுறி இல்லாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார் முன்னாள் பிரதமர் தேவகவுடா. அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் நலமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் 2022 மெகா ஏலத்திற்கு 1,214 வீரர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். 318 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 1,214 பேர் பதிவு செய்துள்ளதாக ஐபிஎல் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 உயர்ந்து ஒரு சவரன் ரூ.36,704-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தமிழ்நாட்டில் கொரோனா இறப்பு சதவீதம் மிக்குறைவாக இருப்பது மன நிறைவாக உள்ளது. தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் தான் கொரோனா பாதிப்பால் உயிரிழக்கின்றனர். கொரோனா பாதித்த 6% பேர் தான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் மீதம் உள்ள 94% சதவீதம் பேர் வீட்டுத்தனிமையில் இருக்கின்றனர் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் மும்பை டார்டியோ பகுதியில் உள்ள 20 மாடி கடிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த 13 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 37 ஆயிரத்து 704 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 488 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரே நாளில், 2 லட்சத்து 42 ஆயிரத்து 676 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
பிரியங்கா சோப்ரா, நிக் ஜோனஸ் தம்பதி வாடகைத் தாய் மூலம் பெற்றோர் ஆகியுள்ளனர். வாடகைத்தாய் மூலம் குழந்தையை வரவேற்றுள்ளோம் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் என சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் இன்று 50 ஆயிரம் இடங்களில் 19ஆவது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. சென்னையில் மட்டும் 1600 இடங்களில் நடக்கவுள்ள முகாமில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும செலுத்தப்படவுள்ளது.