Tamil News Today : கொரோனா வைரஸின் 2-வது அலை பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக ஜுன் 7-ம் தேதி வரை தமிழகத்தில் நீட்டிக்கப்பட்ட முழு ஊரடங்கு இன்று அமலுக்கு வந்தது. அதன்படி, ஆன்லைன் அல்லது தொலைப்பேசி வாயிலாக மளிகைப் பொருட்களை ஆர்டர் பெற்று அவற்றைக் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வீடுகளில் வழங்க அனுமதி அளிக்கப்பட்டது. அதேபோல வாகனங்கள், தள்ளுவண்டிகளில் காய்கறி, பழங்களுடன் மளிகைப்பொருட்களையும் விற்பனை செய்யலாம் என்றும் அரசு அறிவித்தது. ரேசன் கடைகள் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை செயல்படும் என்றும், இ-காமர்ஸ் நிறுவனங்கள் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரையும் செயல்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 56 பேருக்குக் கருப்பு பூஞ்சை நோய் உறுதி
மே 17 முதல் 27-ம் தேதி வரை 42 பேருக்குக் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 31 பேர் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கு, தனி வார்டு கொடுக்கப்பட்டு, கண் மருத்துவம், காது, மூக்கு, தொண்டை நிபுணர்கள், பொதுநலம் மருத்துவர்கள் கொண்ட மருத்துவக் குழு தீவிர சிகிச்சை அளித்து வருவதாக மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
ஜூன் 3 முதல் தென்மேற்கு பருவமழை
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளதால், ஜூன் 3 முதல் காற்றுடன் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், அடுத்த 5 நாட்களுக்கு ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம் மற்றும் திருச்சூர் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருச்சூர், கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு, பத்தனம்திட்டா பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் டீசல் விலை
சென்னையில் பெட்ரோல் விலை 25 காசுகள் உயர்ந்து, ஒரு லிட்டர் ரூ.95.76-க்கும் , டீசல் விலை 25 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் ரூ.89.90-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
ஜூன் மாத ரேஷன் பொருட்களை பெற டோக்கன் விநியோகம் செய்யப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. நாளை முதல் 4 நாட்களுக்கு வீடுகளுக்கு சென்று டோக்கன் வழங்கப்படும் என்றும், நியாய விலை கடை ஊழியர்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு, வீடுகளுக்கு சென்று டோக்கன் வழங்குவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை ஈஞ்சம்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நடிகர் அஜித்குமார் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல். போலீசார் நடத்திய சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிய வந்துள்ளது
தமிழகத்தில் ஒரே நாளில் 27,936 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் இன்று மட்டும் 478 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 20.96 லட்சமாக உயர்ந்துள்ளது. மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 24,232 ஆக உயர்ந்துள்ளது.
மேற்கு வங்க தலைமைச் செயலாளர் அலபன் பந்த்யோபத்யாய் ஒய்வு பெற்றுள்ளார். அவர் முதலமைச்சர் மம்தாவின் ஆலோசகராக செயல்பட உள்ளார். முன்னதாக அவரை மத்திய அரசு, மத்திய அரசு பணிகளுக்கு அழைத்திருந்தது.
தடுப்பூசி பதிவுக்கு மாற்று கொள்கை வேண்டும் என கட்டாய கோவின் பதிவு குறித்து உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மேலும் தடுப்பூசி கொள்முதல் கொள்கை பற்றி மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
முதல் தவணை கொரோனா நிதி ரூ.2,000 பெற அவகாசத்தை தமிழக அரசு நீட்டிப்பு செய்துள்ளது. முதல் தவணை கொரோனா நிவாரணம் பெறாதவர்கள் ஜூன் மாதம் பெற்றுக்கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
கொரோனா தடுப்பூசி பிரச்சினையை தீர்க்க மாநிலங்கள் ஒன்றாக நிற்க வேண்டும் என பாஜக அல்லாத 11 மாநில முதல்வர்களுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார். அதில், தடுப்பூசியை, மத்திய அரசு இலவசமாக விநியோகிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மாநிலங்கள் கூட்டாக முன் வைக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவல் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், “கொரொனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையை குறைத்து காட்டியதாக குற்றச்சாட்டு இல்லை. கொரோனா பாதித்தவர்கள், பலியானவர்கள் புள்ளி விவரங்களை வெளியிடுவது அவமானமல்ல” என்று தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.
சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன்: “தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணி முடங்கும் அபாயம் உள்ளது. தற்போது கையிருப்பில் உள்ள தடுப்பூசிகள் 2 நாட்களுக்கு மட்டுமே போதுமானது. தடுப்பூசி கொள்முதல் செய்ய தமிழக அரசு பணம் செலுத்திய பிறகும் தடுப்பூசி விநியோகம் தாமதமாகிறது. 2 நாடகளுக்குள் மத்திய அரசு தடுப்பூசிகள் வழங்கினால் மட்டுமே தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடைபெறும். மே மாதத்துக்கான கொரோனா தடுப்பூசி 1.60 லட்சம் டோஸ் இன்னும் வர வேண்டியுள்ளது” என்று கூறினார்.
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் கைது செய்யப்பட்ட பத்மசேஷாத்ரி பள்ளி கராத்தே பயிற்சியாளர் கெபிராஜை ஜூன் 14ம் தேதி வரை சிறையில்
அடைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது.
சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்: “இதுவரை தமிழகத்திற்கு 96.18 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன. நேற்று வரை 87 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. 4.93 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளது. கையில் உள்ள தடுப்பூசிகள் நாளையுடன் தீர்ந்து விடும். 1.74 லட்சம் தடுப்பூசிகள் மத்திய அரசு இந்த மாதத்திற்கு தர வேண்டி உள்ளது. ஜூனில் 42.58 லட்சம் தடுப்பூசிகள் ஒதுக்கப்படும் என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. ஜூன் 2வது வாரத்தில் தடுப்பூசிகள்
கிடைக்கப்பெறும். தடுப்பூசிக்கு உலகளாவிய டெண்டர் கேட்டுள்ளோம். ரூ.3.5 கோடிக்கு ஆர்டர் கேட்டுள்ளோம்” என்று கூறினார்.
திருக்கோயில்களில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு 10 கிலோ அரிசி, 15 வகை மளிகைப் பொருட்களுடன் 4,000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும் என இந்து அறநிலையத்துறை அறிவித்துள்ளது.
கொரோனாவால் பாதித்தவர்களுக்கு மதுரையில் இலவசமாக வாகன சேவை வழங்கும் ஓட்டுநர்களுக்கு சசிகலாவின் சகோதரர் திவாகரனின் மகன் ஜெய் ஆனந்த் ரூ. 1,00,000 நிதியுதவி செய்துள்ளார்.
துணிகர, வீர சாகச செயல்களுக்கான கல்பனா சாவ்லா விருதுக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் http://awards.tn.gov.in என்ற இணையதள முகவரி வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
பாலியல் புகாரில் போக்சோ சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலலின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அவரை 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க, காவல்துறை சார்பில் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இணையதள சேவை இல்லாத சாமானிய மக்களால் கொரோனா தடுப்பூசிக்கு ஆன்லைனில் எவ்வாறு முன்பதிவு செய்ய இயலும் எர்ன மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வியை எழுப்பி உள்ளது.
பொது விநியோகத் திட்டத்திற்காக பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் கொள்முதல் செய்வதற்கான டெண்டருக்கு மதுரை கிளை நீதிமன்றம் விதித்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக, ஆந்திராவில் வரும் ஜூன் 10ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலையின் தாக்கத்தை தற்போதைக்கு கணிக்க முடியாது உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
குற்றம் மட்டுமே சொல்லாமல் மத்திய அரசிடம் இருந்து தடுப்பூசிகள் பெற்றுத்தர தமிழக பாஜக முயற்சி செய்யவேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்திற்கு கருப்பு பூஞ்சை நோய் சிகிச்சைக்கு பயன்படும் 680 ஆம்போடெரிசின் – பி மருந்து குப்பிகளை ஒதுக்கி மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கினை அறிவித்துள்ளது பீகார் மாநிலம். இந்த ஊரடங்கு ஜூன் 8ம் தேதி வரை நீடிக்கும் என்றும் அறிவிப்பு
பார்படா தீவுகளில் இருந்து டொமினிக்கா குடியரசுக்கு தப்பிச் சென்ற வைர வியாபாரி மெஹூல் சோக்ஸி உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குஜராத் வைர வியாபாரிகளான இவரும், இவருடைய உறவினர் நீரவ் மோடியும் இந்திய அரசால் தேடப்பட்டு வரும் பொருளாதார குற்றவாளிகள் ஆவார்கள்.
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிகளுக்கான தட்டுப்பாடுகள் நிலவி வரும் சூழலில் மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகளுடன், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பிற்பகல் 3.30 மணிக்கு ஆலோசனை நடைபெற உள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கிருஷ்ணகிரி, தர்மபுரி, விழுப்புரம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, சேலம், பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
குழந்தை திருமணத்தை நடத்துபவர்கள் மற்றும் ஊக்குவிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கீதா ஜீவன் எச்சரிக்கை. குழந்தை திருமணத்தை தடுக்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார் அவர்.
மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு தடுப்பூசிகளை பாஜக தமிழகத் தலைவர் எல். முருகன் பெற்றுத் தர வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார். அப்போது தான் தமிழக மக்கள் மீது உண்மையான அக்கறை கொண்டுள்ளீர்கள் என்று அர்த்தம்.
நடமாடும் மளிகைக் கடைகளை இன்று அமைச்சர்கள் சுப்பிரமணியன் மற்றும் சேகர்பாபு துவங்கி வைத்தனர். கொரோனா ஊரடங்கு மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டிருப்பதால் இந்த நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. குறைந்த விலையில் காய்கறிகள் விற்கப்பட வேண்டும் என்று ககன்தீப் சிங் பேடி அறிவித்துள்ளார்.
சென்னை, கெருகம்பாக்கத்தில் உள்ள பத்ம சேஷாத்ரி மில்லினியம் பள்ளியில் கராத்தே பயிற்சியாளராக பணியாற்றி வந்த கெபிராஜ் கைது. பத்ம சேஷாத்ரி பள்ளியில் படித்து வந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் 75 கிலோ உடல் எடைப்பிரிவின் இறுதி ஆட்டத்தில் உஸ்பெகிஸ்தானின் மாவ்லோனோவாவை எதிர்த்து போட்டியிட்டார் இந்தியாவின் பூஜாராணி. 5-0 என்ற கணக்கில் போட்டியை வென்று தங்கப் பதக்கம் வென்றார் பூஜா.
லட்சத்தீவில் டிசம்பர் மாதம் நியமிக்கப்பட்ட ப்ரஃபுல் படேலை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று கேரள சட்டப் பேரவையில் முழு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
லட்சத்தீவில் நடப்பது என்ன என்பதை நீங்கள் முழுமையாக அறிந்து கொள்ள இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்.
2021 இறுதிக்குள் இந்தியாவில் தகுதியான அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு அறிவித்துள்ளது. ஃபைசர் உள்ளிட்ட தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. இது வெற்றி அடைந்தால் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதற்கான காலக்கெடு குறையும் என்றும் அறிவித்துள்ளது.
சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ரத்து செய்யக்கோரிய வழக்கில் மத்திய அரசு வரும் ஜூன் 3-ம் தேதிக்குள் கொள்கை முடிவெடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் கட்டப்பட்டு வரும் புதிய நாடாளுமன்றம் உள்ளடங்கிய சென்ட்ரல் விஸ்டா கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது. மேலும், இதற்கு தடைவிதிக்க கோரிய மனுதாரர்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம் அளிக்கப்பட்டிருக்கிறது.
2019-ம் ஆண்டு சீனாவின் வூகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸால் உலகளவில் ஏற்பட்ட தாக்கம் இன்றளவும் நீடிக்கிறது. அந்த வகையில், பிரிட்டன் பேராசிரியர் மற்றும் நார்வே விஞ்ஞானி ஆகியோர் தலைமையில் நடந்த ஆய்வில், கொரோனா வைரஸ் வூகான் ஆய்வு மையத்திலேயே உருவாக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர். ஆய்வு மையத்தில் இருந்து வைரஸ் வெளியானதை மறைக்க, வவ்வாலில் இருந்து அது உருவானதாக கூறி சீனா தப்பிக்க முயற்சிப்பதாக விஞ்ஞானிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
தற்காப்பு கலை பயிற்சிக்கு வந்த பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின் பேரில் பயிற்சியாளர் மீது சென்னை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தமிழகத்திற்கு இதுவரை 34 சிறப்பு ரயில்கள் மூலம் 2 ஆயிரத்து 267 புள்ளி 82 மெட்ரிக் டன் ஆக்சிஜனை இந்திய ரயில்வே வினியோகம் செய்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,52,734 பேருக்கு கொரோனா தொற்று பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மேலும், 3,128 பேர் உயிரிழந்துள்ளனர்.
முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், சென்னையில் தொலைபேசி மற்றும் ஆன்லைன் ஆர்டர் மூலம் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்குவோரின் பட்டியலை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் சுமார் 2 ஆயிரத்து 197 பேருக்கு அனுமதி வழங்கியுள்ளதாக கூறியுள்ளது. அங்காடியின் பெயர், தொலைபேசி எண், வார்டு மற்றும் அந்த பகுதியில் உள்ள சிறிய கடை அல்லது சூப்பர் மார்க்கெட் என வகைப்படுத்தி மாநகராட்சி விற்பனையாளர்களின் தகவல்களை வெளியிட்டுள்ளது.