Advertisment

Tamil News Highlights : தமிழகத்தில் கருப்பு பூஞ்சையை கட்டுப்படுத்த 30,000 மருந்து குப்பிகள் வழங்குக- மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம்

Latest Tamil News Live : திருநங்கைகள் கட்டணம் இல்லாமல் பேருந்தில் பயணிக்க அனுமதி வழங்கும் திட்டமும், மருத்துவர்கள் மற்றும் காவலர்கள் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சியும் இன்று நடைபெற உள்ளது.

author-image
WebDesk
New Update
Tamil News Highlights : தமிழகத்தில் கருப்பு பூஞ்சையை கட்டுப்படுத்த 30,000 மருந்து குப்பிகள் வழங்குக- மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம்

Tamil News Live : இன்று கருணாநிதியின் 97-வது பிறந்தநாளையொட்டி பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின். அதில், ரேஷன் அட்டைதாரர்களுக்கு 14 மளிகைப் பொருட்களை இலவசமாக வழங்கும் திட்டத்தையும், கோயில்களில் வேலைபார்க்கும் பூசாரிகள், பட்டாச்சார்யர்கள், அர்ச்சகர்களுக்கு ரூபாய் 4,000 நிவாரணமும், 10 கிலோ அரிசி மற்றும் 15 வகை மளிகை பொருட்கள் வழங்கும் திட்டம் ஆகியவை அடங்கும். மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட பத்திரிக்கையாளர்கள் குடும்பத்திற்கு நிதியுதவி ரூ.10 லட்சம் ஆக உயர்த்தி வழங்கும் திட்டமும், திருநங்கைகள் கட்டணம் இல்லாமல் பேருந்தில் பயணிக்க அனுமதி வழங்கும் திட்டமும், மருத்துவர்கள் மற்றும் காவலர்கள் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

Advertisment

பாஜகவிற்கு புதுச்சேரியில் சபாநாயகர் பதவி

புதுச்சேரியில் சபாநாயகர் பதவி, பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அமைச்சரவையில்  எத்தனை இடங்கள் என்பது குறித்து, ஓரிரு நாட்களில் தலைமை அறிவிக்கும் என்றும் மாநில தலைவர் சாமிநாதன் தெரிவித்துள்ளார். புதுச்சேயில், பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கோட்டத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சாமிநாதன், என்.ஆர்.காங்கிரசுடனான அமைச்சரவை பங்கீடு சுமூகமாக முடிவடைந்ததாகக் கூறினார். மேலும், பாஜக, என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணிக்குள், திமுக - காங்கிரஸ் கட்சி குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்வதாகவும் குற்றம்சாட்டினர்.

சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு - மதிப்பீடு கட்டமைக்கும் பணி

சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், தேர்வு மதிப்பீட்டைக் கட்டமைக்கும் பணி நடைபெற்று வருவதாக சி.பி.எஸ்.இ செயலாளர் அனுராத் திரிபாதி தெரிவித்துள்ளார். இந்தப் பணிகள் முடிந்தவுடன் மதிப்பீடு எவ்வாறு செய்யப்படும் என பொது தளத்தில் வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.

பெட்ரோல் டீசல் விலை

சென்னையில் பெட்ரோல் லிட்டர் ரூ.95.99-க்கும், டீசல் லிட்டர் ரூ.90.12-க்கும் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்படுகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 21:56 (IST) 03 Jun 2021
    பிரதமர் மோடி உடன் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் தொலைபேசியில் பேச்சு

    பிரதமர் மோடி உடன் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் தொலைபேசியில் பேசியுள்ளார். இரு நாட்டு உறவுகள் குறித்து பேசியதாக தகவல்



  • 20:18 (IST) 03 Jun 2021
    தமிழகத்தில் கருப்பு பூஞ்சையை கட்டுப்படுத்த 30,000 மருந்து குப்பிகள் வழங்குக- மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம்

    தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோயைக் கட்டுப்படுத்த 30,000 மருந்து குப்பிகள் வழங்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்திற்கு இதுவரை 1,790 மருந்து குப்பிகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.



  • 19:34 (IST) 03 Jun 2021
    தமிழகத்தில் ஒரே நாளில் 24,405 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

    தமிழகத்தில் ஒரே நாளில் 24,405 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 21.72 லட்சமாக உயர்வு. மொத்த உயிரிழப்பு 25,665ஆக உயர்வு. தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 1.79 லட்சம் மாதிரிகளில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.



  • 19:20 (IST) 03 Jun 2021
    குழந்தைகள் பாதுகாப்பு வழிமுறைகள்- தேசிய மனித உரிமைகள் ஆணையம்

    கொரோனாவிலிருந்து குழந்தைகளை பாதுகாப்பது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை தேசிய மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டது. குழந்தைகள் சிகிச்சை பிரிவுகளை அதிகப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.



  • 18:36 (IST) 03 Jun 2021
    தமிழகத்திற்கு ஜூன் 15ஆம் தேதி முதல் கூடுதல் தடுப்பூசி வழங்கப்படும் - மத்திய அரசு

    தமிழகத்திற்கு ஜூன் 15ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை கூடுதலாக 18.36 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்திற்கு இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்



  • 18:11 (IST) 03 Jun 2021
    திருநங்கைகளுக்கு கொரோனா நிவாரண நிதியுதவியாக ரூ. 2000 வழங்கப்படும் - தமிழக அரசு

    திருநங்கைகளுக்கு கொரோனா நிவாரண நிதியுதவியாக ரூ. 2000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.



  • 17:15 (IST) 03 Jun 2021
    தமிழ்நாட்டில் தடுப்பூசி உற்பத்தி - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை

    தமிழ்நாட்டில் தடுப்பூசி உற்பத்தி தொடங்குவது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் பாரத் பயோடெக் நிறுவனத்துடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.



  • 16:32 (IST) 03 Jun 2021
    தமிழ் யூனிகோட் பயடுத்த வேண்டும்; அரசு துறை செயலாளர்களுக்கும் இறையன்பு சுற்றறிக்கை!

    அனைத்து அரசு துறைகளிலும் யூனிகோட் பயன்படுத்த வேண்டும். இதற்கு முன்பு இருந்ததைவிட மேம்பட்டதாக இருப்பதால் இதனை பயன்படுத்துவதில் சிரமம் இருக்காது. தமிழ்நாடு இணைய பல்கலைக்கழக இணையதளத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம் என்று அனைத்து அரசு துறை செயலாளர்களுக்கும் தலைமைச் செயலாளர் இறையன்பு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.



  • 16:26 (IST) 03 Jun 2021
    பிரதமர் மோடியின் மத்திய அரசு கொரோனாவை எதிர்த்து சிறப்பாக செயல்படுகிறது - அமித்ஷா புகழாரம்

    பிரதமர் மோடி தலைமையிலானமத்திய அரசு கொரோனாவை எதிர்த்து சிறப்பாக செயலாற்றி வருகிறது. நோய் பாதிப்பைவிட குணமடைவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்கிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புகழாரம் சூட்டியுள்ளார்.



  • 15:47 (IST) 03 Jun 2021
    சென்னை; 7 மருத்துவமனைகளுக்கு தடையில்லா மின்சாரம் : அமைச்சர் செந்தில் பாலாஜி

    சென்னையில் கூடுதலாக 7 அரசு மருத்துவமனைகளுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், அந்த மருத்துவமனைகளுக்கு இரு மின்வழித்தட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.



  • 15:38 (IST) 03 Jun 2021
    2-வது அலையில் 624 மருத்துவர்கள் மரணம்!

    இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலையில் 624 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்தில் 21 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.



  • 15:36 (IST) 03 Jun 2021
    அதிமுக மாஜி கைதுக்கு இடைக்கால தடை; சென்னை உயர்நீதிமன்றம்!

    பாலியல் புகாரில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மணிகண்டனை வரும் ஜூன் 9-ம் தேதி வரை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. மேலும், முன்ஜாமின் மனு மீதான விசாரணையை ஜூன் 9-ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



  • 15:33 (IST) 03 Jun 2021
    தேசத்துரோக வழக்குகளை திரும்பப்பெறுக; ஸ்டாலினுக்கு ரவிக்குமார் எம்.பி. கடிதம்

    அதிமுக அரசால் பொதுமக்கள் மீது தொடரப்பட்ட தேசத்துரோக வழக்குகளை திரும்பப்பெற முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு ரவிக்குமார் எம்.பி. கடிதம் எழுதி உள்ளார்.



  • 14:55 (IST) 03 Jun 2021
    டெட் தேர்வு; தகுதி சான்றிதழ் காலம் நீட்டிப்பு!

    ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற தகுதி சான்றிதழ் செல்லும் காலம், 7 ஆண்டுகளில் இருந்து வாழ்நாள் வரை நீட்டிப்பு செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.



  • 14:53 (IST) 03 Jun 2021
    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி; இங்கிலாந்து சென்ற இந்திய அணி!

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரும் 18-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், போட்டியில் பங்கேற்க இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சென்றடைந்துள்ளது.



  • 14:44 (IST) 03 Jun 2021
    கவுதம் கம்பீரின் தொண்டு நிறுவனம் மீது தாமதமின்றி நடவடிக்கை

    கவுதம் கம்பீரின் தொண்டு நிறுவனம் மீது தாமதமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என, டெல்லி உயர் நீதிமன்றத்தில் மருந்து கட்டுப்பாட்டு ஆணையர் உறுதியளித்துள்ளது. சட்டவிரோதமாக ஃபாபிஃப்ளூ மருந்தை கையிருப்பு வைத்ததன் காரணமாக வழக்கு பதிவி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.



  • 14:37 (IST) 03 Jun 2021
    இலக்கிய மாமணி விருது; 5 லட்சம் ரொக்கம் : முதல்வர் அறிவிப்பு!

    தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவித்து சிறப்பிக்கும் வகையில், இலக்கிய மாமணி என்ற விருது உருவாக்கப்பட்டு, தமிழின் இலக்கியத்திற்கு வளம் சேர்க்கும் எழுத்தாளர்கள் 3 பேருக்கு ஆண்டுதோறும் 5 லட்சம் ரூபாய் ரொக்கத்துடன் விருது வழங்கப்படும் எனமுதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.



  • 14:36 (IST) 03 Jun 2021
    மதுரையில் கலைஞர் நினைவு நூலகம்!

    சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகம் போல, மதுரையில், 2 நவீன வசதிகளுடன் 70 கோடி ரூபாய் செலவில் கலைஞர் நினைவு நூலகம் அமைக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.



  • 14:30 (IST) 03 Jun 2021
    முதல்வர் ஸ்டாலினின் சிறப்பு அறிவிப்புகள்!

    மதுரையில் 70 கோடி ரூபாய் செலவில், கலைஞர் நினைவு நூலகம் அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.



  • 14:28 (IST) 03 Jun 2021
    காவலர்களுக்கு ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை அறிவித்த தமிழக அரசு!

    கொரோனா காலத்தில் பணிபுரியும் 2-ம் நிலை காவலரக்ள் முதல் ஆய்வாளர் வரை, ஒரு லட்சத்துக்கும் அதிகமான காவலர்களுக்கு தலா 5000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!



  • 13:13 (IST) 03 Jun 2021
    தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

    மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    நீலகிரி, கோவை, விருதுநகர், பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.



  • 13:08 (IST) 03 Jun 2021
    மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறப்பு

    குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.



  • 12:37 (IST) 03 Jun 2021
    "சிறை பணியாளர்களுக்கும் தடுப்பூசி செலுத்துங்கள்"

    சிறை பணியாளர்களையும் முன்கள பணியாளர்களாக கருதி முன்னுரிமை அளித்து தடுப்பூசி செலுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.



  • 12:22 (IST) 03 Jun 2021
    14 மளிகைப் பொருட்கள் வழங்கும் திட்டம் தொடக்கம்

    கலைஞரின் 98வது பிறந்தநாளை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு 14 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கோதுமை மாவு, உப்பு, ரவை, சர்க்கரை, உளுத்தம் பருப்பு, புளி, கடலை பருப்பு உள்ளிட்ட 14 பொருட்கள் வழங்கப்படுகின்றன.



  • 11:55 (IST) 03 Jun 2021
    +2 பொதுத்தேர்வு குறித்து நாளை மறுநாள் முடிவு

    தமிழக +2 பொதுத்தேர்வு குறித்து நாளை மறுநாள் முடிவு அறிவிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல் தெரிவித்துள்ளார்.



  • 11:52 (IST) 03 Jun 2021
    தங்கம் விலை அதிகரிப்பு

    சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 அதிகரித்து ரூ.37,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் 4,655 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.



  • 11:52 (IST) 03 Jun 2021
    1,34,154 பேருக்கு கொரோனா தொற்று

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,34,154 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. கொரோனாவால் 2,887 பேர் உயிரிழந்துள்ளனர்.



  • 11:47 (IST) 03 Jun 2021
    அதிமுக தொண்டர்கள் மன வருத்தத்தில் இருப்பதை உணர்கிறேன் - சசிகலா

    ஆதரவாளர்கள் மற்றும் அதிமுக தொண்டர்களுடன் சசிகலா தொலைபேசியில் பேசும் குரல் பதிவுகள் வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில் அரக்கோணத்தை அடுத்த செம்பேடு கிராமத்தை சேர்ந்த கட்சி நிர்வாகியிடம் சசிகலா பேசும் 5-ஆவது ஆடியோ வெளியாகியுள்ளது. அதில், அதிமுக தொண்டர்கள் மன வருத்தத்தில் இருப்பதை உணர்வதாகவும் அவர்களை விரைவில் சந்திக்கப்போவதாகவும் சசிகலா பேசியுள்ளார்.



  • 11:42 (IST) 03 Jun 2021
    சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து

    *சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் இதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண்கள் வழங்கப்பட உள்ளது என்பதை 2 வாரத்திற்குள் தெரிவிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.



  • 11:35 (IST) 03 Jun 2021
    5 திட்டங்கள் தலைமைச் செயலகத்தில் தொடக்கம்

    கருணாநிதி பிறந்தநாளையொட்டி கொரோனா நிவாரணத் தொகையின் 2-வது தவணை வழங்கும் திட்டம் உள்ளிட்ட 5 திட்டங்களை தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்.



  • 10:21 (IST) 03 Jun 2021
    பாகிஸ்தான் உருவாக்கிய தடுப்பூசி விநியோகம்

    சீனாவின் உதவியுடன் பாகிஸ்தான் உருவாக்கிய 'பாக்வேக்' தடுப்பூசியின் விநியோகம் தொடங்கப்பட்டுள்ளது.



  • 10:19 (IST) 03 Jun 2021
    'தேவேந்திரகுல வேளாளர்' பெயரில் சாதி சான்றிதழ்

    அதன்படி, பள்ளர், தேவேந்திரகுலத்தார், காலாடி, பண்ணாடி, குடும்பர், கடையர் ஆகிய ஆறு சாதிப் பிரிவுகளை உள்ளடக்கிய தேவேந்திரகுல வேளாளர் பெயரில் சாதி சான்றிதழ் தர ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், துறைத் தலைவர்கள், அதிகாரம் பெற்ற அதிகாரிகள் ஆகியோர் நடைமுறையைப் பின்பற்றவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.



  • 10:17 (IST) 03 Jun 2021
    கொரோனா பயம் : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தூக்கிட்டு தற்கொலை

    திருமுல்லைவாயில் சோழம்பேடு சாலை பகுதியை சேர்ந்த டில்லி (74), அவரது மனைவி மல்லிகேஸ்வரி (64) மற்றும் மகள் நாகேஸ்வரி (34) ஆகிய மூவரும் கொரோனா வந்து விடுமோ என்ற பயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



  • 09:38 (IST) 03 Jun 2021
    மீண்டும் தமிழில் பதவிப்பிரமாணம் ஏற்ற எம்.எல்.ஏ. ராஜா

    கேரள மாநிலம், தேவிகுளம் தொகுதியின் மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ., ராஜா, கடந்த மே, 24-ல் நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில், தமிழில் எடுத்துக்கொண்ட பதவிப்பிரமாணத்தின் இறுதியில், உளமாற உறுதியளிக்கிறேன் என்பதற்கு் பதிலாக உறுதியளிக்கிறேன் என முடித்துக் கொண்டார். இது பல்வேறு விவாதங்களை ஏற்படுத்திய நிலையில், நேற்று திருவனந்தபுரத்தில் கேரள சபாநாயகர் ராஜேஷ் முன்னிலையில், எம்.எல்.ஏ., ராஜா, மீண்டும் தமிழில் பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டார்.



  • 09:33 (IST) 03 Jun 2021
    நாற்காலிகள் காலியாக இருந்தாலும், அவை நினைவுகளால் நிரம்பி வழிகின்றன - கனிமொழி

    தமிழக முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி கனிமொழி உருக்கமாக ட்வீட் செய்திருக்கிறார்.



  • 08:56 (IST) 03 Jun 2021
    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை

    தமிழக முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். மேலும், துரைமுருகன், டி.ஆர்.பாலு, கே.என்.நேரு, கனிமொழி, சேகர் பாபு, உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து, மாவட்டந்தோறும் 1,000 மரக்கன்றுகள் வீதம் 38,000 மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.



Stalin Karunanithi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment