Tamil News Today : கொரோனா லாக்டவுன் காலகட்டம் என்பதால், சனிக்கிழமை உட்பட வாரத்தில் 6 நாட்கள் அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வந்தன. மேலும், அலுவலகங்களின் மொத்த எண்ணிக்கையில் பாதி ஊழியர்களை மட்டுமே கொண்டு அரசு அலுவலகங்கள் செயல்பட்டு கொண்டிருந்தன. இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம், முழு அளவிலான பணியாளர்கள் அலுவலகங்களில் பணியாற்ற அனுமதிக்கப்பட்டனர். இதனைத்தொடர்ந்து, இனி 100 சதவிகித ஊழியர்களுடன் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே அரசு அலுவலகங்கள் செயல்படும் என அரசு தற்போது அரசாணை வெளியிட்டிருக்கிறது.
அடுத்த 4 நாட்களில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஆரம்பிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மக்கள் தீபாவளி பொருட்கள் வாங்குவதற்காக 50 சிறப்புப் பேருந்துகள் வார இறுதி நாட்களில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெங்காய விலையைக் குறைக்க, மொத்த வியாபாரிகள் 25 டன்னுக்கு மேல் கையிருப்பில் வைத்திருக்கக் கூடாதென மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 2 லட்சம் இழப்பீட்டு தொகையை அறிவித்தார் முதல்வர் பழனிச்சாமி. 7.5% இட ஒதுக்கீடு விவகாரத்தில் மு.க.ஸ்டாலினின் செயல் அரசியல் ஆதாயம் தேடுவதாக உள்ளதாக, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார். மருத்துவப்படிப்பில் அரசு மருத்துவக்கல்லூரிகளில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க வகைசெய்யும் சட்டத்திருத்த மசோதா தமிழக சட்டசபையில் கடந்த செப்டம்பர் 15-ம் தேதி நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஒப்புதல் அளிக்கக்கோரி, ஆளுநர் மாளிகை முன்பு திமுக இன்று போராட்டம் நடத்துகிறது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Tamil News: மதுரை மாவட்டம், முருகனேரியில் செயல்பட்டுவந்த தனியார் பட்டாசு ஆலையில் திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். முதல்வர் பழனிசாமி இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்தார்.மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம், முருகனேரி கிராமத்தில் செயல்பட்டு வந்த தனியார் பட்டாசு தயாரிக்கும் ஆலையில், பட்டாசு தயாரிப்பின் போது ஏற்பட்ட திடீர் வெடிவிபத்தில் 5 பெண்கள் உயிரிழந்தனர். 3 பேர் படுகாயம் அடைந்தனர். பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்ததால் பட்டாசு ஆலையின் 6 அறைகளும் இடிந்து விழுந்தது .
Web Title:Tamil news today live dmk protest csk dhoni coronavirus
உயிரிழப்பு விவரம்: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இன்று ஒரே நாளில் தனியார் மருத்துவமனைகளில் 16, அரசு மருத்துவமனைகளில் 19 என மொத்தம் 35 பேர் உயிரிழந்தனர். மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 10,893 -ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,886 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7,06,136 ஆக அதிகரித்துள்ளது.
காஞ்சிபுரம், திருவள்ளூர், பெரம்பலூர், மதுரை, கரூர், தருமபுரி ஆகிய மாவட்டங்களின் ஆட்சியர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர்.
தமிழக அரசு அலுவலகங்கள் வரும் நவம்பர் ஒன்றாம் தேதி முதல் 100 சதவீத அலுவலர்களின் வருகையுடன் முன்பிருந்தது போல வாரத்திற்கு ஐந்து நாட்கள் இயங்கும் என்று தமிழக அரசு தெரிவித்தது.
வெங்காய விலை உயர்வு தற்காலிகமானது ஓரிரு நாட்களில் பழைய நிலைக்கு திரும்பிவிடும். இல்லாவிட்டால் ரேஷன் கடைகள் மூலம் வெங்காயம் வழங்க முதலமைச்சர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜர் தெரிவித்தார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரிழப்பு தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் காலத்தை மேலும் 3 மாதகாலம் நீட்டிக்க தமிழக அரசு உத்தரவு.
காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால் பொதுமக்கள் தாமாக எதனையும் முடிவு செய்யாமல் மருத்துவமனைகளுக்கு சென்று கொரோனா தொற்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர்.ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.
தோழர் தொல். திருமாவளவன் மீதான வழக்கை கைவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது.
தந்தை பெரியார் பற்றிய கருத்தரங்கில் நண்பர் திருமாவளவன் ஆற்றிய உரை (குற்றவியல்) குற்றம் என்று காவல் துறை வழக்கு பதிவு செய்திருக்கிறது. பேசிய பொருள் ஏற்படையதா இல்லையா என்பது பற்றி இரண்டு கருத்துக்கள் இருக்கலாம். ஆனால் அது எப்படி (குற்றவியல்) குற்றம் ஆகும்?
பேச்சுக்கு சுதந்திரம் உண்டு என்பதை நாள் தோறும் நினைவு படுத்த வேண்டுமா? இது போன்ற கருத்துக்களைத் தந்தை பெரியார் பேசினார். இன்று அவர் பேசியிருந்தால் காவல் துறை என்ன செய்திருப்பார்கள்?
தொல். திருமாவளவன் அவர்கள் மனுஸ்மிருதிபற்றிப் பேசியதைத் திரித்து சமூக நல்லிணக்கத்தையும், அமைதியையும் கெடுக்கும்விதமாக சமூகவலைத்தளங்களில் பரப்புவோர்மீது தமிழக அரசு வழக்கு பதிவுசெய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று எழுத்தாளரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பாராளுமன்ற உறுப்பினருமான ரவிக்குமார் தெரிவித்தார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள் பேசியதைத் திரித்து, சமூக வலைத் தளங்களில் பரப்பி வன்முறையைத் தூண்டும் மத வெறியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக, திருமாவளவன் மீதே வழக்குப்பதிவு செய்திருக்கும் காவல்துறையின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது; வழக்கை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று திமுக தலைவர் மு. க ஸ்டாலின் தெரிவித்தார்.
மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வரும் 27ம் தேதியன்று காலை 5.30 மணி முதல் 9.00 மணி வரை மெட்ரோ ரயில் இயக்கப்படும் எனவும், விடுமுறை முடிந்து திரும்பும் பயணிகளின் வசதிக்காக ரயில் சேவை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் 11 வட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், 26, 27, 28 ஆகிய தேதிகளில் 13 தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மனுதர்மம் குறித்து பேசிய விவகாரத்தில் திருமாவளவன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருமாவளவன் கருத்தை திரித்து கூறியவர்கள் மீது வழக்குப்பதியாதது ஏன்? என காவல்துறைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அதோடு, பெண்களின் உரிமைகள் பல்லாண்டுகளாக மறுக்கப்பட்டு வந்ததை மேற்கோள்காட்டி திருமாவளவன் பேசியதாக குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், திருமாவளவன் மீதான பொய் வழக்கை உடனே திரும்பப் பெற வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
தோத்தாலும் ஜெயிச்சாலும் CSK டா என, ட்விட்டரில் இந்திய அளவில் #Cskforever என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது!
தமிழக மக்களுக்கு அதிமுக தலைமை கழகம் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி வாழ்த்து. மக்கள் அனைவரும் வாழ்வில் அனைத்து வளங்களையும் பெற்று வாழ வாழ்த்துக்கள் என ஓ.பிஎஸ், ஈ.பிஎஸ் தெரிவித்துள்ளனர்
”7.5% உள் இடஒதுக்கீட்டு மசோதாவுக்கு 5 வாரங்களாக ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் இழுத்தடித்து வருகிறார்; 40 நாட்களாகியும் 7.5% உள் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை!” என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு.
7.5% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு ஒப்புதல் வழங்க வலியுறுத்தி, ஆளுநர் மாளிகை முன்பு திமுக ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. இதற்காக பாதுகாப்பு பணியில் இணை ஆணையர் மற்றும் துணை ஆணையர்கள் தலைமையில் 1000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்க மாணவர்கள் ஆர்வம் காட்டாததால் 90,000-க்கும் மேற்பட்ட இடங்கள் நடப்பு கல்வியாண்டில் காலியாகும் சூழல் உள்ளதாக தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தகவல். பொறியியல் படிப்புகளுக்கான 3-ம் கட்ட கலந்தாய்வு இன்றுடன் நிறைவடைந்த நிலையில் இதுவரை 43,367 இடங்கள் மட்டுமே நிரம்பி உள்ளதாக தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
”மருத்துவக்கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கென 7.5% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி இன்று திமுக நடத்தும் முற்றுகை போராட்டம் வெற்றிபெற வாழ்த்துகள்!” என விசிக தலைவர் திருமாவளவன் ட்வீட் செய்துள்ளார்.
மருதுபாண்டியர் குருபூஜையை முன்னிட்டு தெப்பக்குளத்தில் உள்ள அவர்களது சிலைக்கு துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் மரியாதை செலுத்தினார். அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோரும் அதில் பங்கேற்றனர்.
வருகிற 28ம் தேதி மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்துகிறார். இதில் பண்டிகை காலத்தையொட்டி தளர்வுகள் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும், கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை நடைபெறும் எனவும் தெரிகிறது.
சென்னை அருகே பனையூர் இல்லத்தில் நடிகர் விஜய் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனை நடத்தி வருகிறார். திருச்சி, மதுரை, குமரி மாவட்ட மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் இந்த ஆலோசனை நடைபெறுகிறது.