Tamil News Today Updates: பீகாரில் மீண்டும் ஆட்சியமைக்கிறது தேசிய ஜனநாயக கூட்டணி. ஆட்சியமைக்க 122 இடங்கள் தேவைப்படும் நிலையில், 125 இடங்களில் அக்கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. 75 உறுப்பினர்களுடன் பீகார் சட்டப் பேரவையில் தனிப்பெரும் கட்சியாக ராஸ்ட்ரிய ஜனதா தளம் உருவெடுத்துள்ளது. ஆனால் காங்கிரஸின் தோல்வியால் ஆட்சியமைக்கும் வாய்ப்பை அக்கட்சி இழந்துள்ளது. பீகார் சட்டப் பேரவை தேர்தலில், வாக்கு இயந்திரத்தில் குளறுபடி இருந்ததாக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டிய நிலையில், எந்த அழுத்தமும் இல்லை என தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
11 மாநிலங்களி நடந்த இடைத்தேர்தல்களில் பெரும்பாலான இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கன்னியாகுமரியில் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். விபிஎஸ் கட்டணம் இல்லாமல் 2 வாரங்களுக்கு புதிய படங்களை வெளியிடலாம் என இயக்குநர் பாரதிராஜா அறிக்கை. தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருடன் மோதல் ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் திடீர் ஆலோசனை.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
கட்டட வடிவமைப்பாளர் தற்கொலை தொடர்பான வழக்கில் ஊடகவியலாளர் அர்னாப் கோஸ்வாமிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு
பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் 10 முக்கிய உற்பத்தித் துறைகளுக்கு சலுகை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதில் ஏசி, எல்.இ.டி பல்ப் உள்ளிட்ட பொருட்கள், ஸ்டீல் ஆகியவற்றின் உற்பத்திக்கு ஊக்கம் வழங்கப்படுகிறது. மருத்துவம், மின்னணு உள்ளிட்ட துறைகளில் உற்பத்தியை அதிகரிக்க ஊக்கத்தொகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
நீதிபதிகளே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் டிசம்பர் மாதத்திற்கு பிறகு பள்ளிகளை திறக்கலாம் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அறிவுறுத்தியுள்ளது. அண்டை மாநிலங்களை கருத்தில் கொண்டு அரசு முடிவெடுக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
மேற்கு வங்க மாநிலத்தில் பட்டாசு விற்க, வெடிக்க விதித்த தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு. திருவிழா முக்கியம்தான்; ஆனால் ஆபத்தான காலத்தில் உயிரை காக்க மேற்கொள்ளப்படும் முயற்சியை ஏற்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நீர் மேலாண்மை திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி முதலிடம் பிடித்த தமிழகத்திற்கு விருது வழங்கியது மத்திய அரசு. காணொலி மூலம் பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் மணிவாசகத்திடம் விருதை வழங்கினார் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு.
OTT-யில் வெளியாகும் திரைப்படங்கள், ஆன்லைன் செய்திகள் உள்ளிட்டவற்றை தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் கொண்டுவந்தது மத்திய அரசு
பீகார் தேர்தலில் நிதிஷ் குமாருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதோடு இளம் தலைவராக உருவெடுத்துள்ள தேஜஸ்வி யாதவின் வெற்றி ஊக்கமளித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பீகார் தேர்தல் தொடர்பான முறைகேட்டுப் புகார்கள் அதிர்ச்சியளிக்கின்றன என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தலையீடுகளின்றி நியாயமான, சுதந்திரமான முறையில் நடத்தப்படும் தேர்தலால் மட்டுமே ஜனநாயகத்தின் எதிர்காலம் உறுதிப்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் அருகே 2 ஆயிரம் டன் வெங்காயம் பதுக்கப்பட்டது தொடர்பாக வெங்காய வியாபரி பாலாஜி, இடைத்தரகர் வீரமணி உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். வெங்காயத்தை பதுக்க செயல்படாத கோழிப்பண்ணையை வாடகைக்கு விட்ட ரவிச்சந்திரனும் சிக்கினார்.
தூத்துக்குடியில் ஆய்வு பணி மேற்கொள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருகை புரிந்துள்ளார். அரசு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை மையத்திற்கு ரூ.16 கோடி மதிப்பிலான கருவியை வழங்கிய அவர், ரூ.22.37 கோடி மதிப்பிலான 16 முடிவுற்ற திட்டபணிகளை திறந்து வைத்தார்.
தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை மையத்தை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். ரூ.16 கோடியில் கட்டப்பட்ட புற்றுநோய் சிகிச்சை மையத்தை முதல்வர் பழனிசாமி நேரில் திறந்துவைத்து பார்வையிட்டார். அதோடு ரூ.71.61 லட்சத்தில் அமைக்கப்பட்ட ஆராய்ச்சி மைய ஆய்வகத்தையும் முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.