Petrol and Diesel Price: சென்னையில் 106-ஆவது நாளாக விலை மாற்றமின்றி பெட்ரோல் ரூ.101.40-க்கும், டீசல் ரூ.91.43-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Tamilnadu News Update: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஓய்ந்தது. வாக்குப் பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. பாதுகாப்புக்கு சுமார் 1 லட்சம் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பிரச்சாரத்துக்குத் தடை: நேரடி பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்த நிலையில், வேட்பாளர்கள் சமூக வலைதளங்களில் பிரச்சாரம் செய்யவும் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இதுபோன்ற புகார் வந்தால் சம்பந்தப்பட்ட வேட்பாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் நீர்வளம் மாசு: காவிரி டெல்டாவில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் நிலம் மற்றும் நீர்வளம் மாசடைந்துள்ளது என்று சுல்தான் அகமது இஸ்மாயில் தலைமையிலான உயர்மட்ட தொழில்நுட்ப குழு அரசிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
நாடு திரும்பிய மீனவர்கள்: 2021 டிசம்பா் மாதம் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழ்நாடைச் சேர்ந்த 47 மீனவா்கள் நாடு திரும்பினர். சென்னை விமான நிலையத்தில் மீன்வளத் துறை அதிகாரிகள் மீனவர்களை வரவேற்றனர். தனி வாகனங்களில் மீனவர்கள் சொந்த ஊர்களுக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.
India News Update: கர்நாடகத்தில் ஹிஜாப் விவகாரத்தால் போராட்டம் நேற்றும் நடந்தது. இதனால், கல்லூரிகள் முன்பு போலீஸார் குவிக்கப்பட்டனர்.
அமரீந்தர் சிங் நீக்கம் ஏன்?
ஏழை மக்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என கேட்டதற்கு மின்சார நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதால் தர முடியாது என்றார் அமரீந்தர் சிங். எனவே அவர் முதல்வர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விளக்கம் அளித்துள்ளார்.
Corona Update: தமிழகத்தில்1,252 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் மொத்தம் 4.27 கோடி பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
உலகளவில் இதுவரை 41.99 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனாவில் இருந்து 34.38 கோடி பேர் குணமடைந்துள்ள நிலையில், 58.80 லட்சம் பேர் உயிரிழந்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிராக சமீபத்தில் நடந்த தீவிரவாத தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன். இந்தியாவும், ஐக்கிய அரபு அமீரகமும் தீவிரவாதத்திற்கு எதிராக தோளோடு தோள் நிற்கும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
அண்ணா பல்கலை கழகத்தின் தொலைதூர கல்வி மாணவர்களுக்கான 2 தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 20 21 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த இந்த தேர்வுகள் தற்போது மார்ச் 9 10 தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நகர்புற உள்ளாட்சி தேர்தல் காரணமாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
“கோவையில் தங்கியிருந்த வெளி மாவட்டத்தினர் வெளியேற்ப்பட வேண்டும் என்று அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், தற்போது வெளி மாவட்டத்தினர் கோவையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்” என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையர் வெ.பழனிகுமார் கூறியுள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்குகிறது வாக்குப்பதிவு மையங்களை தயார்படுத்தும் பணிகள் தீவிரமடைந்துள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவின் அராஜக போக்கு கண்டனத்திற்குரியது என்று ஓபிஎஸ், ஈபிஎஸ் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். திமுகவினருக்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகள் பதில் சொல்லும் காலம் விரைவில் வரும் என்று கூறியுள்ளனர்.
பழமை பொருட்கள் அங்காடியில், சிலைகள் பதுக்கி வைத்திருப்பதாக, சிலை திருட்டு தடுப்பு பிரிவுக்கு கிடைத்த தகலை தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில், விலை மதிப்பற்ற சிலைகள், பேழைகள் மீட்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி கடம்பூர் பேரூராட்சியில் தேர்தல் அலுவலர்கள் விதிமுறைகளை மீறியதால், தேர்தல் ரத்து செய்யப்பட்ட நிலையில், 1, 2, 11வது வார்டுகளின் சுயேட்சை வேட்பாளர்கள் தொடர்ந்த வழக்குகளில் கடம்பூர் பேரூராட்சியில் 3 வார்டுகளுக்கு மறுதேர்தல் அறிவிக்க கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
வெளியூரை சேர்ந்தவர்கள் இங்கேயே தங்கி வன்முறையை உருவாக்க திட்டமிட்டுள்ளனர். அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி, குண்டர்களை வெளியேற்ற தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவையில் போலீஸ் துணையுடன் பண விநியோகம் நடைபெறுகிறது என எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார்.
மத விவகாரங்களில் தலையிட விரும்பவில்லை. கல்லூரிகள் நிர்ணயித்த சீருடையை மாணவர்கள் அணிய வேண்டும் என ஹிஜாப் வழக்கில், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பு தெரிவித்துள்ளது.
15-18 வயது வரையிலான 2 கோடிக்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கு’ 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கேரள அரசு, முல்லை பெரியாற்றில் தன்னிச்சையாக புதிய அணை கட்டும் திட்டத்தை அறிவித்துள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது. முல்லை பெரியாறு அணை குறித்த கேரள ஆளுநரின் கருத்து உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது. தமிழ்நாட்டின் உரிமையை எக்காரணம் கொண்டும் விட்டுகொடுக்க மாட்டோம் என துரைமுருகன் கூறியுள்ளார்.
கர்நாடகா மாநிலம், சித்ரதுர்கா மாவட்ட அரசு கல்லூரியில், ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தடுத்தனர். இதனால் மாணவிகள் மற்றும் போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அங்கு பதற்றம் நிலவுகிறது.
ஊட்டி ரயில் பாதையின் அருகே யானைகள் வழித்தடத்தில் கொட்டப்பட்டுள்ள பிளாஸ்டிக் மற்றும் கட்டிட கழிவுகளை அப்புறப்படுத்த, வனத்துறை, ரயில்வே, கோவை மற்றும் நீலகிரி மாவட்ட ஆட்சியர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோதாவரி-காவிரி நதிகள் இணைப்பு தொடர்பாக’ தமிழகம், கர்நாடகம், ஆந்திரா உள்ளிட்ட 5 மாநில அதிகாரிகளுடன் மத்திய ஜல்சக்தி துறை செயலாளர் ஆலோசனை நடத்தி வருகிறார். அதில், காவிரி – தென்பெண்ணை நதிகள் இணைப்பு திட்டத்தில் தமிழகத்திற்கே அதிக பலன் கிடைக்கும் என்பதால்’ கர்நாடக நீர்வளத்துறை அதிகாரிகள் இத்திட்டத்திற்கு உடன்பாடு இல்லை என தெரிவித்துள்ளனர்.
ஹிஜாப் விவகாரம் தொடர்பாக’ கர்நாடக அரசு மற்றும் பாஜகவை கண்டித்து, சென்னை திருவொற்றியூர் சுங்கச்சாவடி பேருந்து நிலையம், நெடுஞ்சாலையில் இஸ்லாமிய அமைப்பினர்’ கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
கோவை ஆட்சியர் அலுவலகத்தில், தேர்தலை நியாயமாக நடத்தக் கோரி எஸ்.பி.வேலுமணி தலைமையில், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 3 மணி நேரத்துக்கும் மேலாக தர்ணாவில் ஈடுப்பட்டனர். இதையடுத்து தரையில் படுத்துக் கொண்டு போக மறுத்த அதிமுக எம்.எல்.ஏ-க்களை போலீசார் கைது செய்தனர்.
கோவை ஆட்சியர் அலுவலகத்தில், தேர்தலை நியாயமாக நடத்தக் கோரி எஸ்.பி.வேலுமணி தலைமையில், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது எம்.எல்.ஏ.க்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தும் போது தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராடியவர்களின் சொத்துக்களை மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என உத்தரபிரதேச அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில்’ காஞ்சிபுரம் ரவுடி பிபிஜிடி சங்கருக்கு சொந்தமான ரூ. 25 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
தேனியில் அனுமதியின்றி ₨500 கோடிக்கு கிராவல் மண் அள்ளியதாக புகார் அளித்த நிலையில் ஓபிஎஸ் உதவியாளர் அன்னபிரகாசம் மீது வழக்கு பதிவு செய்துள்ளது லஞ்ச ஒழிப்புத்துறை. மேலும் கனிமவளத்துறை, வருவாய்த்துறையின் 11 அதிகாரிகள் மீதும் வழக்குப்பதிவு
புதுச்சேரி சட்டமன்றக் கூட்டம் வருகின்ற 23ம் தேதி அன்று நடைபெற உள்ளது என்று சபாநாயகர் செல்வம் அறிவித்துள்ளார்.
குரூப்-2 தேர்வு 3 கட்டமாக நடைபெற உள்ளது. போட்டித் தேர்வுக்கான முடிவுகள் ஜூன் மாதம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தர்மபுரி ஏமக்குட்டியூர் கிராமத்தில் உள்ள பி.டி.ஓ. மதலைமுத்து, அரூர் ஆனந்தன், ஏ.பள்ளிப்பட்டியில் உள்ள ஜெயராமன் என்று 3 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறது.
குரூப் 2, குரூப் 2ஏ காலிபணியிடங்களுக்கான போட்டித்தேர்வு அறிவிப்பு வரும் 23ம் தேதி வெளியாகும் என்று, டி.என்.பி.எஸ்.சி தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவித்துள்ளார். குரூப் 2 நிலையில் 116 பணிகளுக்கு தேர்வு நடைபெற உள்ளது. குரூப் 2ஏ நிலையில் 5413 பணியிடங்களுக்கு தேர்வுகள் நடைபெற உள்ளது
ஒப்பந்தம் முடிந்ததும் காப்புரிமை பெறாமல் பாடல்களை பயன்படுத்தியதாக இளையராஜா மேல் முறையீடு செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்ததோடு இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த எக்கோ, அகி மியூசிக் நிறுவனங்களுக்கு தடை விதித்து அறிவித்து.
மேற்கு வங்க ஆளுநரை பதவி நீக்கம் செய்ய உத்தரவிட இயலாது என்று கொல்கத்தா உயர் நீதிமன்றம் , பொதுநல மனுவை தள்ளுபடி செய்து அறிவித்தது.
அகமதாபாத் தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் 38 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து அறிவித்துள்ளது அகமதாபாத் சிறப்பு நீதிமன்றம். 49 குற்றவாளிகளில் 38 பேருக்கு மரண தண்டனையும், 11 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கி தீர்ப்பு அறிவிப்பு
தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையத்தின் விசாரணை தற்போது நிறைவு பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 36 கட்ட விசாரணையில் மொத்தம் 1426 பேருக்கு சம்மன் அளிக்கப்பட்டுள்ளது. 1048 பேரிடம் இந்த ஒரு நபர் ஆணையம் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
நகர்ப்புற தேர்தலை நியாயமாக நடத்த துணை ராணுவப் படை பாதுகாப்புக்கு உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்ட மனு ஏற்புடையதாக இருப்பதால் இன்று பிற்பகல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.
உள்ளாட்சித் தேர்தலை நியாயமாக நடத்தக் கோரி எஸ்.பி. வேலுமணி தலைமையிலான அதிமுக எம்.எல்.ஏக்கள் குழு தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.
புதுச்சேரியில் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது கொரோனா தொற்றுக்கு 586 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில் ஒரே நாளில் 2,086 சுவரொட்டிகள் அகற்றப்பட்டு ரூ.1.68 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இந்திய எம்.பி.க்கள் பலர் மீது பாலியல் வன்கொடுமை, கொலை குற்றச்சாட்டுக்கள் உள்ளன என்று சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் பிரதமர் லீ சியென் லூங் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, இந்தியாவில் சிங்கப்பூர் தூதர் சைமன் வொங்கிற்கு சம்மன் அனுப்பி வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
மணிப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று பாஜக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
முல்லை பெரியாற்றில் கேரள அரசு சார்பில் புதிய அணை கட்டப்படும் என்றும் முல்லை பெரியாறு அணையில் 136 அடிக்கு மேல் நீர் மட்டம் உயர்த்தக் கூடாது என்றும் கேரள சட்டமன்ற கூட்டத் தொடரில் ஆளுநர் ஆரிப் முகமது கான் தெரிவித்தார்.
இந்தியாவில் இதுவரை 174.64 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ் செலுத்தப்பட்டுள்ளன. ஒரே நாளில் 37.86 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பால் மேலும் 492 பேர் உயிரிழந்தனர். இதனால், பலி எண்ணிக்கை 5,10,905 ஆக அதிகரித்துள்ளது.
திமுக, கூட்டணி கட்சி வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிடும் 45 பேர் திமுகவில் இருந்து நீக்கப்பட்டனர். கோவை, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த போட்டி வேட்பாளர்கள் நீக்கப்பட்டதாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்தார்.
தானே – திவா இடையே அமைக்கப்பட்டுள்ள புதிய ரயில் பாதையை பிரதமர் மோடி இன்று காணொலி மூலம் திறந்து வைக்கிறார்.
ரஷியா-உக்ரைன் விவகாரத்தில் ஜனநாயக பேச்சுவார்த்தையே தற்போதைய தேவை என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
கொல்கத்தா ஈடன்கார்டனில் இன்று 2ஆவது டி20 போட்டியில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகிறது. 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது.
இந்தியச் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த பாகிஸ்தானைச் சேர்ந்த 12 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழகத்தில் உள்ள ஓமந்தூரார் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் ரோபோட்டிக் அறுவை சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூர் அருகே இன்று காலை 8 மணிக்கு 3.8 ரிக்டர் அளவில் லேசான நில அதிர்வு பதிவாகியுள்ளது என்று தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நதிநீர் இணைப்பு திட்டம் தொடர்பாக தமிழகம் உள்ளிட்ட 5 தென்மாநில நீர்வளத் துறை அதிகாரிகளுடன் மத்திய நீர்வளத் துறை அமைச்சகம் இன்று ஆலோசனை நடத்தவுள்ளது. டெல்லியில் நடைபெறவுள்ள கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் சந்தீப் சக்சேனா பங்கேற்கிறார்.