Advertisment

News Highlights: 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்; 6 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

Latest Tamil News பெட்ரோல் விலை 30 காசுகள் உயர்ந்து ரூ.106.04-க்கும் டீசல் விலை 33 காசுகள் உயர்ந்து ரூ.102.25-க்கும் விற்கப்படுகிறது.

author-image
WebDesk
New Update
News Highlights: 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்; 6 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

Tamil News : பள்ளிகள் திறப்பு

Advertisment

தமிழ்நாட்டில் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு நாளை 1 முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கப்படவிருக்கும் நிலையில் தனியார்ப் பள்ளி பேருந்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

22 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

சென்னை, திருவள்ளூர், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, சேலம், நாமக்கல், கோவை, நீலகிரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், கடலூர், தேனி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தீபாவளி அன்று இறைச்சிக் கடைகளைத் திறக்க தமிழக அரசு அனுமதி

வரும் 4-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள அதே நாளில் மகாவீரர் ஜெயந்தி நாளும் வருகிறது. வழக்கமாக மகாவீரர் ஜெயந்தி நாளன்று இறைச்சிக் கடைகள் மூடப் படக்கூடிய நடைமுறை தமிழகத்தில் உள்ளது. ஆனால், இம்முறை தீபாவளியும் அதே நாளில் கொண்டாடப்படுவதால் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் இறைச்சிக் கடைகளைத் திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

பெட்ரோல் டீசல் விலை

சென்னையில் பெட்ரோல் விலை 30 காசுகள் உயர்ந்து ரூ.106.04-க்கும் டீசல் விலை 33 காசுகள் உயர்ந்து ரூ.102.25-க்கும் விற்கப்படுகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 22:25 (IST) 31 Oct 2021
    வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த்!

    சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் ரஜினிகாந்த் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்!



  • 22:03 (IST) 31 Oct 2021
    தீபாவளி பண்டிகை பர்சேஸ்: சென்னை கடை வீதிகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்

    தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே இருப்பதால் விடுமுறை நாளான இன்று சென்னை கடை வீதிகளில் கூட்டம் அலைமோதியது.

    பாரி முனையில் என்.எஸ்.சி. போஸ் ரோடு பகுதி மக்கள் கூட்டதால் நிரம்பி வழிந்தது. இதே போல் புரசை வாக்கம் பகுதியிலும் கூட்டம் அலைமோதியது.

    சென்னையில் மிக முக்கிய வணிக பகுதியான தி.நகர் ரங்கநாதன் தெரு கொரோனா காலத்துக்கு பிறகு இந்த ஆண்டு களை கட்டியது.



  • 21:56 (IST) 31 Oct 2021
    முல்லைப் பெரியாறு பிரச்சினையை அமைச்சர் துரைமுருகன் மறைக்கிறார்: ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

    முல்லைப்பெரியாறு பிரச்சினையில் கேரள அரசின் தன்னிச்சையான முடிவை அமைச்சர் துரைமுருகன் மறைக்கிறார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.

    அதிமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 152 அடி. 142 அடியாக தேக்கிக்கொள்ளலாம் என்ற தீர்ப்பை உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதா பெற்றுத் தந்தார். தற்போது மழையால் அணை நீர்மட்டம் 138.85 அடியாக உயர்ந்தது. கேரள நீர்ப்பாசனத் துறை அமைச்சர் அணையைப் பார்வையிட்டு 142 அடியை எட்டாமலே கேரளா பகுதிக்குத் தண்ணீரைத் திறந்துள்ளார். இது வரை 6 ஷட்டர்கள் வழியாக 3 ஆயிரம் கன அடி திறக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி கேரளப் பகுதிக்கு உட்பட்ட வண்டிப்பெரியாறு, மஞ்சுமலை, சப்பாத்து, உப்புத்துறை ஆகிய கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும், தமிழக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போன்று, பெரியாறு அணையைத் திறந்தது” என்று குற்றம் சாட்டியுள்ளார்.



  • 19:57 (IST) 31 Oct 2021
    முன்ஜாமின் கோரி முன்னாள் அமைச்சர் சரோஜா நீதிமன்றத்தில் மனு

    அரசுப் பணி வாங்கி தருவதாக ரூ.76.50 லட்சம் மோசடி செய்ததக புகார் எழுந்த விவகாரத்தில் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதால் முன் ஜாமின் கோரி நாமக்கல் நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சரோஜா மற்றும் அவரது கணவர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.



  • 19:53 (IST) 31 Oct 2021
    கனமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

    கடலூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளார். 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படவிருந்த நிலையில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.



  • 18:49 (IST) 31 Oct 2021
    மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்

    முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல் நலக் குறைவு காரணமாக, டெல்லி, எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குணமடைந்ததால் இன்று வீடு திரும்பினார்.



  • 17:22 (IST) 31 Oct 2021
    தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்!

    தமிழ்நாட்டில் தஞ்சை, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், கடலூர், நெல்லை, தூத்துக்குடி ஆகிய 9 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலெர்ட் விடுத்துள்ளது. தொடர் கனமழையால் தாழ்வான பகுதிகளுக்கு தண்ணீர் நுழையும் அபாயம் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.



  • 16:43 (IST) 31 Oct 2021
    தமிழ்நாடு நாளை மாற்ற நினைப்பது அழகல்ல! – பாஜக தலைவர் அண்ணாமலை

    நவம்பர் 1க்கு பதிலாக ஜூலை 18 ஐ தமிழ்நாடு நாளாக அரசு அறிவித்திருப்பது வியப்பாக உள்ளது. அதிமுக அரசு அறிவித்ததற்காக மாற்ற நினைப்பது அழகல்ல! வரலாற்றை திசை திருப்புவதே திமுகவின் நோக்கமாக இருந்து வருகிறது என பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்



  • 15:08 (IST) 31 Oct 2021
    பிளே ஸ்டோரிலிருந்து 151 போலி எஸ்.எம்.எஸ் ஆப்கள் நீக்கம்; கூகுள் நடவடிக்கை

    பிளே ஸ்டோரிலிருந்து 151 போலி எஸ்.எம்.எஸ் ஆப்களை நீக்கி கூகுள் நடவடிக்கை எடுத்துள்ளது.



  • 14:47 (IST) 31 Oct 2021
    மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கே.பாலகிருஷ்ணனிடம் முதல்வர் நலம் விசாரிப்பு

    ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணனை நேரில் சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்



  • 14:06 (IST) 31 Oct 2021
    7 கட்ட மெகா தடுப்பூசி முகாமில் 1.5 கோடி பேருக்கு தடுப்பூசி - மா.சு தகவல்

    தமிழ்நாட்டில் இதுவரை நடந்த 7 கட்ட மெகா தடுப்பூசி முகாமில் 1 கோடியே 50 லட்சத்து 58 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இந்த தகவல் தெரிவித்துள்ளார்.



  • 13:42 (IST) 31 Oct 2021
    குழந்தை என்று பிறந்ததோ அன்றுதான் பிறந்தநாள் - ஓ.பி.எஸ்

    ஜூலை 18 ஆம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்திருப்பது அரசியல் காழ்ப்புணர்ச்சியின் உச்சக்கட்ட செயல். பத்து வருடங்கள் கழித்து குழந்தையின் பெயர் மாற்றப்பட்டாலும், குழந்தை என்று பிறந்ததோ அன்றுதான் பிறந்தநாள் கொண்டாடப்படுமே தவிர பெயர் மாற்றம் செய்த நாளில் இல்லை என ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.



  • 13:11 (IST) 31 Oct 2021
    108 தேங்காய் உடைப்பு - ரஜினி ரசிகர்கள் சிறப்பு வழிபாடு

    மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் ரஜினிகாந்த் நலம்பெற வேண்டி திருப்பரங்குன்றத்தில் 108 தேங்காய் உடைத்தும், மண் சோறு சாப்பிட்டும் ரஜினி ரசிகர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.



  • 12:17 (IST) 31 Oct 2021
    அடுத்த 3 நாள்களுக்கு 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை

    இன்று முதல் நவம்பர் 2 ஆம் தேதி வரை தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, கடலூர் ஆகிய 9 மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுத்துள்ளது.



  • 11:59 (IST) 31 Oct 2021
    புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 15-ம் தேதி வரை நீட்டிப்பு

    திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி மற்றும் இரவு நேரங்களில் பண்டிகை சார்ந்த விற்பனைகளுக்கு தளர்வு ஆகியவையே கொண்டு வந்த புதுச்சேரி அரசு, வரும் 15-ம் தேதி வரை ஊரடங்கை நீடித்துள்ளது.



  • 11:57 (IST) 31 Oct 2021
    நாட்டு மீனவனை கொன்ற நாட்டுடன் நட்புக்கொள்கிறது - சீமான்

    பாகிஸ்தானுடன் பிரச்னை என்றால் கிரிக்கெட்டில் அந்நாட்டுடன் மோதக்கூடாது என்று இந்திய அரசு கூறுகிறது ஆனால், தன் நாட்டு மீனவனை கொன்ற நாட்டுடன் நட்புக்கொள்கிறது என்று சீமான் விமர்சித்துள்ளார்.



  • 11:56 (IST) 31 Oct 2021
    ஒன்றிணைந்தால் நம் இலக்குகளை அடையலாம்

    வலிமையான, வளர்ச்சியான இந்தியா அமைய வேண்டும் என சர்தார் வல்லபாய் படேல் விரும்பினார் என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, நாம் அனைவரும் ஒன்றிணைந்தால் நம் இலக்குகளை அடையலாம் என்றும் இந்தியாவில் கடந்த 7 ஆண்டுகளில் தேவையற்ற சட்டங்கள் அகற்றப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.



  • 11:13 (IST) 31 Oct 2021
    மருத்துவமனையில் ரஜினியின் உடல் நலம் விசாரித்தார் மு.க.ஸ்டாலின்

    மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்தின் உடல் நிலை பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று விசாரித்தார்.



  • 10:40 (IST) 31 Oct 2021
    கருப்பாக மாறிய கமெங் நதி நீர்

    அருணாச்சல பிரதேசத்தில் உள்ள கமெங் நதி நீர் கருப்பாக மாறி ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்து வருகின்றன. இதற்கு சீனா தான் காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.



  • 10:39 (IST) 31 Oct 2021
    இந்திரா காந்தி நினைவு தினத்தையொட்டி ராகுல்காந்தி மரியாதை

    முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 37-வது நினைவு தினத்தையொட்டி, அவருடைய நினைவிடத்தில் இந்திரா காந்தியின் பேரனும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.



  • 10:37 (IST) 31 Oct 2021
    தேவர் ஜெயந்தி கொண்டாட்டத்தில் இருவர் கைது

    தேவர் ஜெயந்தியையொட்டி சென்னை நந்தனத்தில் தேவர் சிலைக்கு முக்கிய தலைவர்கள் நேற்று மரியாதை செலுத்தினர். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர்களிடம் 2 பேர் அநாகரிகமாக நடந்துகொண்டதினால் அவர்கள் இருவரையும் கைது செய்து தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தியுள்ளனர்.



  • 09:55 (IST) 31 Oct 2021
    ரஜினி நலம்பெற வேண்டுமென வைரமுத்து ட்வீட்

    நாளுக்கு நாள் அவர் நலம் கூடிவரும் நம்பிக்கைத் தகவல்கள் என் நிம்மதியை மீட்டெடுத்தன என நடிகர் ரஜினிகாந்த் உடல்நலம் பெற வேண்டி கவிஞர் வைரமுத்து ட்வீட் செய்துள்ளார்.



  • 09:51 (IST) 31 Oct 2021
    தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

    கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று அதி கனமழை பெய்யக்கூடும் என்றும் இதனடிப்படையில் அப்பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் மேலும் தெரிவித்துள்ளது.



  • 09:49 (IST) 31 Oct 2021
    பெற்றோர் நினைவிடம் அருகிலேயே புனித் ராஜ்குமார் உடல் நல்லடக்கம்

    மறைந்த கன்னட பவர்ஸ்டார் நடிகர் புனித் ராஜ்குமார் உடலுக்கு இறுதிச் சடங்குகள் நிறைவடைந்து, தனது தந்தை, தாய் அடக்கம் செய்யப்பட்ட ஸ்ரீ கனடிர்வா ஸ்டுடியோ அருகேயே அவருடைய உடலும் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.



Stalin Rain In Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment